ஸ்நேக் பிளான்ட்(Snake Plant) வளர்ப்பு, பராமரிப்பு, பரவுதல் எப்படி?

Spread the Green love!

இடப்பற்றாக்குறை காரணத்தினால் வீட்டிற்குள் வளர்க்கும் செடிகளுக்கு மவுசு கூடிக்கொண்டே தான் வருகிறது. அப்பார்ட்மெண்ட் கலாச்சாரத்துக்கு மாறிக்கொண்டு வரும் நமக்கு , நம்மை சுற்றி இருக்கும் கான்கிரீட் காட்டிலிருந்து நம் வீட்டிற்குள் இருக்கும் கொஞ்சம் பசுமை தான் கண்களை குளிர்விப்பதாய் இருக்கிறதென்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதோடு மாசிலேயே(Pollution) புரண்டு கொண்டிருக்கும் நமக்கு, நம் வீட்டிலுள்ள காற்றை சுத்தம் செய்ய உதவும் இவ்வகை தாவரங்கள் இயற்கை நமக்கு தந்த வரம் என்றே கூறலாம்.

உங்களுக்கும் வீட்டு தாவரங்கள் வளர்க்க ஆர்வம் உள்ளதா? எந்த தாவரத்தில் துவங்குவது என குழப்பமா? உங்களுக்கான பதிவு தான் இது. இன்று நாம் பார்க்கப்போகும் இந்த தாவரத்தை வளர்க்க நாம் அலட்டி கொள்ள்வே தேவையில்லை. அது தான் சான்சிவிரியா(Sansevieria). ஸ்நேக் பிளான்ட்(Snake Plant) என பொதுவாக அழைக்கப்படும் இதில் 70 வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகையிலும் குறும்பிரிவுகளும் நிறைய உள்ளன. இதனை செல்லமாக மதரின்லாஸ் டங்(Mother-in-law’s Tongue) அதாவது மாமியாரின் நாக்கு என்றும் அழைக்கின்றனர்.

எப்படி வளர்ப்பது?

ஸான்சிவிரியாவை வளர்ப்பது மிகவும் எளிதானது. இதனால் இன்டோர் கார்டெனிங்(Indoor Gardening) என சொல்லப்படும் வீட்டிற்குள் தோட்டம் அமைப்பதில் புதிதாய் துவங்குவோர்க்கு இது ஏற்றதாய் இருக்கிறது.

நடுவது:

இச்செடியினை நன்கு நீர் வடிய கூடிய மண் கலவையில் நட வேண்டும்.

இதன் மற்றொரு சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால் இதனை நேரடி வெய்யிலிலும் வைக்கலாம் வெளிச்சம் குறைவான இடத்திலும் வைக்கலாம். இது இரண்டையுமே தாக்கு பிடிக்கும்.

வெதுவெதுப்பான சூழலில் இதனை வைப்பது நல்லது.

பராமரிப்பு:

இத்தாவரம் வெளிச்சம் , ஈரப்பதம் ஆகிய இரண்டின் அளவு மாற்றங்களுக்கும் வளைந்து கொடுக்கும். இதற்கு இருக்கும் ஒரே பிரச்சனை தண்ணீர் தான். அதுவும் அதிகமான நீர் ஊற்றினால் வேர் அழுகி இறந்து விடும். எனவே மண் நன்கு காய்ந்த பிறகே தண்ணீர் ஊற்ற வேண்டும்.

 • இவை சின்ன தொட்டிகளிலும் நன்கு வளரும்.
 • நோய் தொற்று மற்றும் பூச்சி பிரச்சனைகள் ஒன்றும் பெரிதாய் இத்தாவரத்திற்கு வருவது கிடையாது.
 • தொடர்ந்து உரமிடும் அவசியமும் இல்லை. ஒருவேளை இவ்வளவு வளைந்து கொடுக்கும் இந்த செடிக்கு நீங்கள் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என நினைத்தால், மாதம் ஒரு முறை கரிம உரமிடலாம்.
 • இவற்றை வளர்ந்ததும், கூடவே பக்கத்தில் முளைக்கும் குட்டி ஸ்நேக் பிளான்ட்களை(செடிகளை) பிரித்தெடுத்து, நமக்கு தெரிந்தவர்களுக்கும், நண்பர்களுக்கும் பரிசளித்து அன்பை பரிமாறலாம்.
 • இவற்றின் இலைகள் மஞ்சள் / பழுப்பு நிறமாய் மாறினால் நிறைய நீர் ஊற்றப்படுவதோ, வெளிச்சம் குறைவோ தான் காரணமாய் இருக்கும்.

எப்படி விருத்தி செய்வது?

இதை வளர்ப்பது மட்டுமல்ல இதனை விருத்தி செய்ய கற்றுக்கொள்வதும் மிகவும் எளிதானது தான். நாம் மேலே பார்த்தது போல் இத்தாவரம் நிறைய நீர் ஊற்றினால் இறந்து விடும். அதே சமயத்தில் இதனை விருத்தி அடைய அல்லது பரவ செய்ய இதன் இலைகளை வேர் வரும் வரை தண்ணீரில் வைப்பது பரவலாக கடைபிடிக்கப்படும் முறை ஆகும். இதுமட்டுமல்லாமல் நன்கு முதிர்ச்சி அடைந்த ஸ்நேக் பிளான்டின் வேர் தண்டிலிருந்து புதிய கன்றுகள் முளைக்கும். அப்படியும் இதனை பரவச் செய்யலாம்.

சரி ஏதேனும் ஒரு முறையை தேர்வு செய்து வாருங்கள் ஸ்நேக் பிளான்ட் குட்டிகளை உருவாக்கலாம்.

https://www.instagram.com/p/Bwzht7xgVFx/

நீரில் வேர் வர வைக்கும் முறை:

 • செடியின் இலையை தாங்கும் அளவுக்கு ஏற்ப ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள்
 • செடியிலிருந்து நல்ல ஆரோக்கியமான ஒரு இலையை தேர்வு செய்யுங்கள். இந்த இலை மிக முதிர்ந்ததாய் இருத்தல் கூடாது.
 • சுத்தமான கத்தரியோ, கத்தியோ வைத்து அதை வெட்டவும்
 • அந்த இலையை பாத்திரத்தில் வைத்து அடி பாகம் நன்கு மூழ்குமறு நீர் ஊற்றி வைக்கவும்
 • பாத்திரத்தினை நல்ல வெளிச்சமான (நேரடி சூரிய ஒளி படாமல்) இடத்தில் வைத்து, இரண்டு நாளுக்கு ஒரு முறை தண்ணீர் மாற்றிக்கொண்டே வர வேண்டும்.
 • சில வாரங்களில் வேர்கள் முளைத்திருப்பதை உங்களால் காண முடியும்.
 • வேர்கள் நன்கு வளர்ந்ததும் அந்த இலையை எடுத்து மண்-மணல் கலவையில் நட்டு விடலாம்.
https://www.instagram.com/p/BoWwQHrA-th/

துண்டுகளிலிருந்து பரவ வைக்கும் முறை

 • இந்த முறைக்கும் நாம் மேற்கண்ட முறைக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை.
 • இந்த முறையில் சில படிகளை நாம் தவிர்த்து நேரடியாக களத்தில் இறங்க வேண்டியது தான்.
 • வெட்டின துண்டுகளின் வெட்டு காயங்கள் ஆற அவற்றை இரண்டு நாட்கள் காற்றில் ஆற வைக்க வேண்டும்.
 • காயங்கள் ஆறின துண்டுகளை நேரடியாக மண்-மணல் கலவையில் சொருகி வைத்து விட வேண்டியது தான்.
 • கொஞ்சமாய் நீர் ஊற்றி வர, சில வாரங்களில் அந்த துண்டுகளிலும் வேர் முளைத்து விடும்.
https://www.instagram.com/p/ByNMaHYC1Px/

பிரித்தல் மூலமாக பரவ வைக்கும் முறை

 • ஸ்நேக் பிளான்ட்களுக்கு இஞ்சியை போல வேர் பகுதி தடிமனாக ரைசோம்(Rhizome) எனப்படக்கூடிய வேர்தண்டுகள் இருக்கும். இதிலிருந்து தான் புது குட்டி செடிகள் முளைக்கும்
 • இந்த வேர்த்தண்டில் தான் செடிக்கான அனைத்து ஊட்டசத்துக்களும் அடங்கி இருக்கும்.
 • நல்ல முதிர்ச்சியடைந்த செடிகளில் பக்கத்தில் சிறிய செடிகள் முளைப்பதை நம்மால் பார்க்க முடியும்
 • அவற்றை பிரித்து எடுத்து வேறு தொட்டிகளில் நட்டு வளர்க்கலாம்
 • பொதுவாக கொஞ்சம் வேர்களும் நல்ல ஆரோக்கியமான இலை ஒன்றாவது இருந்தால் அதை தனியே பிரித்து நடலாம்.
https://www.instagram.com/p/Bz5rt8sgJYZ/

பூ பூக்கும் செடி இது:

January 25th "Sansevieria in flower"
Image By Amanda Slater

திடகாத்ரமான அழகுடன் இச்செடிகளில் சில சமயங்களில் பூ பூப்பதையும் நம்மால் காண முடியும். இதற்கு அந்த செடி நல்ல முதிர்ச்சி பெற்றதாயும், தேவையான எல்லா சூழலும் நிறைந்ததாயும் இருத்தல் வேண்டும்.

பூ பூக்கும் போது 3 அடி வரை நீளமான தண்டு ஒன்று முளைக்கும். அதில் நிறைய மொட்டுக்கள் வரிசையாய் அமைந்து ஒன்றொன்றாய் பூக்கத்தொடங்கும். இதன் மலர்கள் வெண்மை நிறத்திலும் பார்க்க லில்லி மலர்களை போன்றும் இருக்கும். அதோடு நல்ல நறுமணத்தையும் கொண்டதாய் இருக்கும். சில சமயங்களில் இதனால் இழுக்கப்பட்டு சில பூச்சிகள் வீட்டிற்குள் வரலாம்.

பூச்சி மற்றும் மற்ற பிரச்சனைகள்:

இவை பராமரிக்கவும் வளர்க்கவும் எளிதானதாய் இருந்தாலும் இவற்றிற்கும் சில தொல்லைகள் வரும். அவை பின்வருமாறு

 • முன்பே நாம் பார்த்தது போல அதிக தண்ணீர் தான் இத்தாவரத்திற்கு முதல் எதிரி. அதில நீர் ஊற்றுவதால் வேர் அழுகி செடி இறந்து விடும். எனவே மண் நன்கு காய்ந்ததும் நீர் ஊற்றுவது நல்லது.
 • இவை கடினமான செடிகளானாலும் இவற்றையும் சில மீலி பக்ஸ்(Mealy Bugs), ஸ்பைடர் மைட்ஸ்(Spider mites) போன்ற பூச்சிகள் தாக்க கூடும். இவை இலைகளில் இருக்கும் சாற்றினை உறிவதால் இலைகளில் காய்ந்த புள்ளிகளும், இலைகள் விழுவதும் உருவாகும்.
 • மீலி பக்ஸ்(Mealy Bugs) களை கட்டுப்படுத்த ஆல்கஹால்(Alcohol) அதாவது சாராயம் தெளிப்பது உதவும்.
 • ஸ்பைடர் மைட்ஸ்(Spider Mites) கட்டுப்படுத்த இலைகளை கழுவி சூழலை சற்று அதிக ஈரப்பதமாக வைப்பது உதவும்.

நச்சுத்தன்மை:

இது நச்சு தன்மை கொண்ட தாவரம். எனவே இதை உட்கொள்ள கூடாது. உட்கொண்டால் தலைசுற்றல், வாந்தி, பேதி போன்ற விளைவுகள் ஏற்படும். எனவே குழந்தைகளும், செல்லப் பிராணிகளும் இதை உட்கொள்ளாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

பயன்கள்:

இது அளிக்கும் அழகை தவிர, வீட்டில் இரவில் தூய்மையான காற்றை சுவாசிக்க நாம் செய்யும் மிகவும் குறைந்த பட்ச செலவு இத்தாவரமாய் தான் இருக்கும். இது இரவில் கரியமில வாயு(கார்பன்டை ஆக்ஸைடு- Carbondioxide)வை எடுத்துக்கொண்டு பிராண வாயு அதாவது ஆக்ஸிஜனை அளிக்கிறது. இதுமட்டுமல்லாமல்

காற்றில் இருக்கும் ஃபார்மால்டிஹைடு( formaldehyde), டிரைகிலோரோஎதிலீன் (trichloroethylene), சைலீன் (xylene),டொலீன் (toluene), பென்சீன் (benzene) போன்ற நச்சுகளையும் அகற்றுகிறது.

காற்றை தூய்மை படுத்தும் இந்த தாவரத்தை பற்றியும் தெரிந்துக்கொள்ளுங்கள்.

இதை ஏன் செல்லமாக புறக்கணிப்பின் ராணி என அழைக்கின்றனர் என உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும். ஏனென்றால் இத்தாவரத்தை கொல்ல கூடிய ஒரே விஷயம் அதிக அக்கறை தான். இதை கண்டுக்கொள்ளாமல் விட்டாலே இது நன்றாக வளரும். இதனால் தான் நாம் முன்பே பார்த்தது போல புதிதாய் செடி வளர்க்க நினைப்பவர்களுக்கு ஏற்ற துவக்க செடி இது தான்.

உங்கள் இல்லங்களில் இச்செடியை வளர்க்கிறீர்களா? இல்லையென்றால் ஆரம்பிக்கலாமே! ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன். இது உங்களுக்கு பிரயோஜனமாயிருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இதை பகிருங்கள். செடி வளர்ப்பு தொடர்பான உங்கள் கேள்விகளையும், சந்தேகங்களையும் கீழே கமென்டிலோ, இடப்பக்கத்தில் இருக்கும் WhatsApp ஐகானை கிளிக் செய்தோ, அல்லது கீழே உள்ள மின்னஞ்சல் மூலமாகவோ என்னை தொடர்பு கொள்ளுங்கள்.

சேர்ந்து விதைப்போம், சேர்ந்து வளர்வோம்! நன்றி!

இது ஒரு இரு மொழி தளம் இதிலுள்ள அனைத்து பதிவுகளை நீங்கள் ஆங்கிலத்திலேயும் படிக்கலாம். To read this post in English Click Here

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது