கடந்த பதிவில் சில விஷயங்களை அடுத்த பதிவில் சொல்வதாக சொல்லியிருந்தேன். அதோடு மா மரத்தை பற்றி உங்களுக்கு இருக்கும் சில சந்தேகங்களையும் இந்த பதிவில் சேர்த்து பதிவிடுகிறேன். இந்த பதிவில் மா மரவளர்ப்பில் சகஜமாக இருக்கும் சில பிரச்சனைகளையும் அவற்றை சரி செய்யும் முறைகளையும் பற்றி பார்ப்போம்.
மாம்பழ ரகங்கள்
முதலாவது இதை பற்றி பார்ப்போம். சென்ற பதிவில் இதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லியிருந்தேன். இருந்தும் நண்பர் ஒருவரிடமிருந்து இந்த ரகங்களை பற்றியும் சொல்லுமாறு ஒரு கோரிக்கை வந்தது. எனவே அதை பற்றியும் சற்று பார்த்து விடுவோமே.
- செந்தூரா மாம்பழம்
- கறுத்த கொழும்பான்
- வெள்ளைக் கொழும்பான்
- பங்கனப்பள்ளி மாம்பழம்
- மல்கோவா மாம்பழம்
- ருமானி மாம்பழம்
- திருகுணி
- விலாட்டு
- அம்பலவி [கிளி சொண்டன் மற்றும் சாதாரண அம்பலவி என இரண்டு]
- செம்பாட்டான்
- சேலம்
- பாண்டி
- களைகட்டி
- பச்சதின்னி
- கொடி மா
- மத்தள காய்ச்சி
- நடுசாலை
- சிந்து
- தேமா (இனிப்பு மிக்கது)
- புளிமா – (BUCHANANIA AXILLARIS) (புளிப்பு மிக்கது)
- கெத்தமார்
- மாவில் நீலம்
- பெங்களூரா (தோத்தாப்புரி)
- அல்போன்சா
- பத்தர்
- மல்லிகா
- ரத்னா
- சீமெண்ணெய் புட்டிக்காய்
ஆகிய பல வகைகள் உள்ளன.
மல்லிகா, சிந்து போன்ற ரகங்கள் விதையில்லாத ரகங்கள்.
அல்போன்ஸா, பங்கனப்பள்ளி, தோத்தாப்பூரி ஆகிய பழங்கள் புதுச்சேரி மற்றும் விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படுகின்றன. இந்த ரகங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது என கமென்டில் தெரிவியுங்கள் வேறு ஏதேனும் நாம் விட்டுவிட்டோமா? அதையும் எனக்கு தெரிவியுங்கள்.
மாமரத்தில் சகஜமாக வரும் பிரச்சனைகள்:
அடுத்து இந்த பகுதிக்கு வருவோம் வாருங்கள். மாமரத்தில் பிரச்சனைகளை இரண்டாக பிரிக்கலாம் ஒன்று பூச்சி மற்றும் நோய் தொற்று, மற்றொன்று பூ-பழம் தொடர்பான பிரச்சனை. இதில் முதல் பிரச்சனையை பற்றி முதலில் பார்ப்போம்.
பூச்சிகள் :
தத்துப்பூச்சி:
பூச்சிகள் பூங்கொத்துகளில் அமர்ந்து சாற்றை உறிஞ்சி குடிப்பதால் பூக்கள் பிஞ்சுகள் பிடிக்காமல் உதிர்ந்துவிடும். இதனைக் கட்டுப்படுத்த 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி வேப்பெண்ணையை கிளைகள், தண்டுகள், மரத்தின் இலைகள் ஆகியவற்றில் நன்கு படும்படி தெளிப்பான் மூலம் தெளிக்கவேண்டும்.
தெளிக்கும் காலம் – மரம் பூ பூக்க ஆரம்பிக்கும் காலத்திலிருந்து 15 நாள் இடைவெளியில் 2 முறை தெளிக்க வேண்டும்.
அசுவினி செதில் பூச்சி :
இவற்றைக் கட்டுப்படுத்த 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி வேப்பெண்ணையை தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
பூங்கொத்துப்புழு :
இவை பூ பூக்கும் தருணத்தில் பூங்கொத்துக்களில் கூடுபோல் கட்டிக்கொண்ட பூ மொட்டுகளைத் தின்று சேதப்படுத்தும்.
கட்டுப்பாடு : இதை கட்டுப்படுத்த வேப்பெண்ணையை தெளிக்கலாம்.
மாங்கொட்டை வண்டு அல்லது மூக்கு வண்டுகளை கட்டுப்படுத்துதல் :
மாந்தோப்புகளில் மரத்தின்கீழ் விழக்கூடிய காய்கள், மாங்கொட்டைகள் மற்றும் சருகுகளை சேகரித்து எரித்துவிடவேண்டும்.
காய்பிடிக்கும் காலத்தில் ஒரு முறையும், பிறகு 15 நாட்களுக்குப் பின்னரும், வேப்பம் புண்ணாக்கை கரைத்து தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.
தண்டு துளைப்பான் :
வண்டுகள் மரத்தின் மேல் பட்டைகளில் முட்டையிட்டு, முட்டைகள் புழுவாக மாறி, பட்டையின் உட்பாகத்தை துளைத்துத் தின்னும், இதனால் கிளைகளும், சில நேரம் முழு மரமும் வாடி பின்பு காய்ந்து விடும்.
கட்டுப்படுத்தும் முறை :
தரைமட்டத்திலிருந்து சுமார் 1 மீட்டர் உயரத்தில் மரத்தின் பட்டையை லேசாக செதுக்கி நீக்கிக் கொண்டு, இதன் இடையில் வேப்பெண்னையை தடவ வேண்டும் பின்பு பட்டையை மரத்தோடு பொருத்தி களிமண் பசையினால் மூடிவிடவேண்டும்.
பழ ஈ :
பழ ஈக்கள் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும், ஈ தாக்கப்பட்ட பழங்களின் மேல் வெளிறிய மஞ்சள் நிற புள்ளிகள் தெரியும். அதன் நடுப்பகுதியில் கருப்பான புள்ளி தெரியும். பழத்தை அழுத்தும்போது அதிலிருந்து ஒரு திரவம் வெளிவரும்.
கோடை உழவு செய்து மண்ணுக்குள் இருக்கும் கூட்டுப் புழுக்களை மண்ணின் மேல் பகுதிக்குக் கொண்டு வருவதால் அவை சூர்ய வெளிச்சத்தில் அழிந்துவிடும். மரத்துக்கு அடியில் விழுந்து கிடக்கும் தாக்கப்பட்ட பழங்களைச் சேகரித்து எரித்து வேண்டும்.
நோய்கள் :
சாம்பல் நோய் :
இந்த நோய் தாக்கப்பட்டால் இலைகள் சாம்பல் நிறமாகி காணப்படும். இதனைக் கட்டுப்படுத்த அரப்பு மோர் கரைசல் தெளிக்கலாம்.
இலைப்புள்ளி :
இந்த நோய் தாக்கப்பட்டால் இலைகளில் கரும்புள்ளி காணப்படும். இதைக் கட்டுப்படுத்த தேமோர் கரைசலை அறுவடை செய்வதற்குமுன் பதினைந்து நாள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கலாம்.
கரும் பூஞ்சாண நோய் :
இலைகளின் மேற்பரப்பில் கருமையான படலம் தோன்றி, இலைகள் கருப்பாகத் தென்படும். இதை கட்டுப்படுத்த வேப்பெண்ணெய் தெளிக்கலாம்.
பூ மற்றும் காய்களில் வரும் பிரச்சனை
முதலாவது பகுதியை முடித்தாயிற்று இப்போது இரண்டாம் பகுதிக்குள் செல்லலாம்.
பூ – உதிர்தல்:
மாமரத்தில் பூ உதிர்வது இயற்கையானது தான். ஒரு கொத்து பூக்களில் 4-6 காய்கள் அதிகபட்சம் பிடிக்கும். மற்றவை எல்லாம் உதிர்ந்து விடும். எனவே என்னடா இப்படி கொத்து கொத்தாய் பூ கொட்டுகிறதே என கவலைப்பட வேண்டாம்.
ஆனால் பூக்களே பூக்க மாட்டேங்குது! பூத்தாலும் காய் நிக்க மாட்டேங்குது என்கிற பிரச்சனைக்கு தீர்வை காணலாம் வாங்க.
இதற்கு பெரும் காரணம் பூக்களில் சத்து குறைப்பாடு தான். மரத்தின் வேர்கள் மூலமாய் நிலத்திலிருந்து சத்துகளை உறிந்து அதை தண்டுக்கு பாய்ச்சி அதிலிருந்து கிளைகளுக்கு கொண்டு போய், பின் பூக்களின் காம்புகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். இதற்கான திறன் மரத்தில் இல்லாமலிருக்கலாம்.
தீர்வு:
- இதற்கு EM கரைசல்/தேமோர் கரைசல்/ அரப்பு மோர் கரைசல்/ பஞ்ச காவியா ஆகியவற்றை லிட்டருக்கு 20மில்லி வீதம் கலந்து எடுத்துக்கொள்ளுங்கள்.
- இந்த கரைசலை 6-8 நாட்களுக்கு ஒரு முறை இலைகள் நனையுமாறு மரத்தின் மேலிருந்து தெளிக்க வேண்டும்.
- இதனை சாயங்காலத்தில் மட்டும் தெளித்து வரவேண்டும். இது அந்த கரைசல்கள் நிறைய நேரம் இலைகளில் ஊற உதவும்.
ரொம்ப நாளாய் உங்கள் மரம் பூக்களே வைக்கவில்லையா அதற்கும் இதை பயன் படுத்தி பாருங்கள். இல்லை ஒரு பகுதி மட்டும் தான் பூக்கிறது என்றால் பூக்காத பக்கத்தில் இந்த கரைசலை தெளித்து வாருங்கள் பூக்கள் வைக்கும்.
காய் உதிர்தல்:
இதற்கும் சத்து குறைப்பாடு தான் காரணம். இதற்கு காய்கள் மிளகளவிற்கு வளரும் வரையில் 6-8 நாட்களுக்கு ஒரு முறை மேற்கண்ட கரைசல்களையே தெளிக்கலாம்.
இது பிஞ்சுகள் உதிராமலிருக்கவும், அவற்றுக்கு ஆரம்பகால நோய்களை தடுக்கவும், காய்கள் நன்றாக பளபளப்பாய் வளரவும் உதவும்.
காய்கள் விரலளவு தடிமனாக ஆனப்பின்னர் பஞ்சகாவியா, மீன் அமிலம் இடையிடையில் EM கரைசலையும் தெளிக்கலாம் இது காய்கள் நன்றாக வளரவும் நோய் தாக்குதல்களை சமாளிக்கவும் பெரிதும் உதவும்.
இந்த கரைசல்கள் எப்படி மரத்துக்கு உதவும்?
நாம் முன்னமே சொன்னது போல ஊட்டசத்து வேரிலிருந்து பூக்கள் வரை பெரிய பயணம் செய்ய வேண்டியுள்ளது. ஒரு வேளை உங்கள் மரத்தில் அவ்வளவு திறன் இல்லாமல் இருக்கலாம், இல்லை உங்களால் அவ்வளவு நீர் ஊற்ற முடியாமலிருக்கலாம். இதை தான் இந்த கரைசல்கள் தீர்க்கின்றன.
இவற்றை இலைகளில் தெளிப்பதன் மூலம், இலைகளின் ஆற்றலை அதிகரித்து ஒளி சேர்க்கையை அதிகரிக்கிறது. இதன் மூலம் பூக்களுக்கு தேவையான சத்தை அந்த பகுதிகளில் உள்ள இலைகளே உற்பத்தி செய்துகொள்கின்றன. அதுமட்டுமல்லாமல் இது பூக்கள் நன்று முதிர்ச்சி பெற்று பூக்கவும் உதவுகிறது.
நில வழி ஊட்டசத்து:
இவ்வளவு நேரம் நாம் நாம் பார்த்தது எல்லாமே இலைவழி ஊட்டசத்து தான். அது கொஞ்சம் சிரமமானது கூட. இதை சமாளிக்க 2 முறை நில வழி ஊட்ட சத்து ஒரு முறை இலை வழி ஊட்ட சத்து என்ற வீதத்தில் ஊட்டசத்து அளிக்கலாம்.
நீரில் மீன் அமிலம், பஞ்ச காவியம், ஜீவாமிர்தம், EM கரைசல் ஆகியற்றில் எது உங்களுக்கு எளிதாய் கிடைக்குமோ அதை கலந்து. காலை மாலை நீர் பாய்ச்சும் போது சேர்த்து விடலாம்
இது நிறைய காய்களை எடுக்க பெரிதும் உதவும். இதை செய்யும் போது கூட வளரும் களைகளை அறுத்து நீர் ஊற்றும் இடத்தில் முடாக்கிடலாம். இது நீர் மேலாண்மைக்கு உதவுவதுடன், நுண்ணுயிர் பெருக்கத்திற்கும் உதவும்.
கவாத்து செய்தல்:
மரம் நன்றாக காய்க்கவும், ஆரோக்கியமாக நோய் தொற்று இல்லாமலிருக்கவும் நீங்கள் செய்யவேண்டிய மற்றொரு காரியம் கவாத்து செய்வது தான். இதனை எப்படி செய்வது?
மழையுடன் கூடிய செப்டம்பர் மாதம் தான் கவாத்து செய்ய சரியான மாதம்.
கோடையில் நமக்கு காய்களை கொடுத்த பின்னர் மரம் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு அடுத்த ஓட்டத்துக்கு தயாராவது இந்த மாதங்களில் தான்.
இந்த நேரத்தில் அவை புதிய இலைகளை முளைப்பிக்க அதிக ஆற்றலை எடுத்துக்கொள்ளும்
இந்த நேரத்தில் முன்னமே காய்கள் காய்த்த வாதுகள்(சிறு கிளைகள்) திரும்ப காயும் தராமல் தேவை இல்லாமல் அதிக சக்தியை உறிந்து கொண்டும் இருக்கும்.
இவற்றை போன்ற தேவையல்லாத கிளைகளையும் இலைகளையும் நீக்குவது தான் கவாத்து
பொதுவாக மாமரத்தில் ஒரு கிளையிலிருந்து மூன்று கிளைகள் பிரிந்திருக்கும். இதில் தேவையான ஒன்றையோ இரண்டையோ விட்டுவிட்டு மற்றதை கவாத்து செய்து விடலாம்
இது மட்டுமல்லாமல் மரத்தில் எல்லா பகுதிகளிலும் காற்றோட்டமும், சூரிய ஒளியும் படுமாறு கவாத்து செய்வது அவசியம்.
இதற்கு நீங்கள் மரத்தின் உள் பகுதியிலிருந்து பார்த்து எங்கு வெட்டினால் உள்ளே வெளிச்சம் வரும் என்பதை பார்த்தும், புதிய இலைகள் இருக்கும் கிளைகளை விட்டுவிட்டு பழைய இலைகள் இருக்கும் கிளைகளை வெட்டி விடலாம்.
வெட்டி அடுத்த நாளே நன்றாக தண்ணீர் விட வேண்டும், பின்னர் நான்கு வாரத்திற்கு வாரம் ஒரு முறையாவது ஏதாவது இயற்கை இடுபொருள் இட வேண்டும்.
இப்படி செய்வது புதிதாய் வரும் கிளைகள் வலுவானதாய் தோன்ற உதவும்.
5 வயதான மரத்துக்கு தான் கவாத்து செய்ய வேண்டும். வருடாந்தரம் கவாத்து செய்வது மரத்தின் நலனுக்கு மிகவும் முக்கியம்.
அவ்வளவு தாங்க நான் சொல்ல நினைத்தது எல்லாம் சொல்லியாச்சு. இதை தவிர உங்களிடம் வேறு ஏதேனும் கேள்விகள் இருக்கிறதா? அனைவருக்கும் அது பயன்தர கமெண்டில் அதை தெரியப்படுத்துங்கள். ஏதேனும் சந்தேகங்களோ, கேள்விகளோ இருக்கிறதா? தொடர்பு பக்கத்தின் மூலமாகவோ, இடப்பக்கத்திலுள்ள WhatsApp Iconஐ கிளிக் செய்வதன் மூலமாகவோ என்னை தொடர்பு கொள்ளலாம்.
அநேகர் என்னை தொடர்பு கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறீர்கள். உங்கள் அனைவருடைய அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி!
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் சுற்றத்திற்கு இதை பகிர்ந்து ஆர்கானிக் பசுமை அன்பை பரப்பலாமே!
ஒன்றாய் விதைப்போம்! ஒன்றாய் வளர்வோம்! நன்றி
3 thoughts on “மா மரம் வளர்ப்பில் வரும் பிரச்சனைகளும் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகளும்”
MEEKA NANDRI
மார்கத்தில் சில கிளையில் தீ போல கருகிய நிலயில் உள்ளது. என்னசெய்வது
மார்கத்தில் சில கிளையில் தீ போல கருகிய நிலயில் உள்ளது. என்னசெய்வது உங்கள் செல்போன் எண்ணிக்கை