அடுத்து எந்த செடியை பற்றி போடுவது என தலையை சொரிந்துக்கொண்டிருந்தேன். அப்போது தான் எனக்கு தெரிந்தது நான் எனக்கு மிக பிடித்த காயைப்பற்றி இன்னும் பதிவிடவே இல்லை என்று. ஆம் வெண்டை தான் எனக்கு காய்கறிகளிலேயே மிகவும் பிடித்தமானது. என் அம்மா செய்யும் வெண்டை பொறியலை சாப்பிட்டால் நீங்களும் மற்ற காய்களை விட்டு வெண்டையை காதலிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.
நான் என் மாடித்தோட்டத்தில் வெண்டை செடியை வளர்த்துள்ளேன். எனவே அது வளர்ப்பதற்கு எளிதான செடி என என்னால் தைரியமாக சொல்லமுடியும். ஆனால் எனக்கும் இவற்றை வளர்க்கும் போது பூச்சி தொல்லை அதிகமாகவே இருந்தது. அதை எல்லாம் தாண்டி இவற்றை வளர்ப்பது சுவாரஸ்யமானது தான். என்னை பொறுத்த வரையில் செடி வளர்க்கும் எல்லோரும் வளர்க்க வேண்டிய செடிகளுள் வெண்டையும் ஒன்று.
வெண்டை ஒரு அறிமுகம்:
வெண்டையின் அறிவியல் பெயர் எபில்மொஸ்கஸ் எஸ்குலென்டஸ் (Abelmoschus esculentus). செம்பருத்தி குடும்பத்தை சேர்ந்த இது ஆப்ரிக்காவை பூர்வீகமாக கொண்டதாயிருக்கலாம் என கருதப்படுகின்றது. நம்ம ஊரில் இது மிகவும் பிரபலமானது.
வெண்டை செடியை வளர்ப்பது மிகவும் சுலபமான விஷயம். அத்துடன் இது வளரும் பருவம் முழுவதும் அழகழகாய் பூக்களை தள்ளி, பார்க்க மிக அழகாகவும் இருக்கும். இதில் நிறைய வைட்டமின் –A இருப்பதுடன், மிக குறைவான கலோரிகளை கொண்டதாயும் இருப்பதால் உணவில் சேர்த்துக்கொள்வதற்கான எல்லா கண்டிஷன்களிலேயும் இது தேர்ச்சி பெறுகிறது.
வெண்டைக்காயை எப்படி வளர்ப்பது?
அறிமுகமெல்லாம் நல்லா பலமாக தான் இருக்கிறது அல்லவா? சரி இப்போது இதனை எப்படி வளர்ப்பது என்பதில் கவனத்தை செலுத்துவோம் வாருங்கள்.
எப்போது வெண்டையை நடலாம்?
வெண்டைக்கு நல்ல இதமான சூரிய ஒளி இருக்க கூடிய சூழல் தேவை. எனவே இதனை ஜனவரியிலும், ஜூனிலும் நடவு செய்யலாம். நம்ம ஊரில் வருடத்தில் இந்த இரு முறை தான் பொதுவாக நடவு செய்கின்றனர். வெப்பம் காரணமாக ஜனவரியில் நடவு செய்யும் செடிகள், ஜூனில் நடவு செய்யும் செடிகளை விட சற்று குறைவாகவே பலன் கொடுக்கும்.
நட இடத்தை தேர்வு செய்து அதை தயார் செய்தல்:
- நான் முன்னமே சொன்னது போல வெண்டைக்கு நல்ல சூரிய வெளிச்சம் தேவை. எனவே அப்படி ஒரு இடத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
- வெண்டை எல்லா விதமான மண்ணிலும் நன்றாக வளரும். என்றாலும் நன்கு வடிய கூடிய மண்ணில் வளர்ப்பது நல்லது.
- அமிலத்தன்மை நிறைய இருக்கும் மண் கலவை இதற்கு நல்லது. அமிலத்தன்மை pH: 6-6.8 வரை இருத்தல் நல்லது.
- அமிலத்தன்மை சரியான அளவு இல்லையென்றாலும் பரவாயில்லை. நம் வெண்டை தான் நன்றாக ஒத்துழைக்க கூடியதாயிற்றே. என்ன வளர்ச்சியில் தான் கொஞ்சம் மாற்றம் இருக்கும்.
- இடத்தை தேர்ந்தெடுத்த பின்னர், அதனை நன்றாக கொத்தி விட்டு எருவும் மட்கும் உரமும் இட்டு கலந்து நீரிட்டு விதைப்பிற்கு இரண்டு நாளிற்கு முன்னர் நிலத்தை தயார் செய்து கொள்ளுங்கள்.
வெண்டையை தொட்டிகளில் வளர்ப்பது எப்படி:
வெண்டையை நிலத்தில் வளர்ப்பது எவ்வளவு எளிதானதோ, தொட்டிகளில் வளர்ப்பதும் அவ்வளவு எளிதானது தான். என்ன தொட்டியிலிருப்பதால் அதற்கு ஊட்டசத்து குறையாமல் கொஞ்சம் அதிக அக்கறை எடுக்க வேண்டும். மண் நல்ல வளமாகவும் நன்கு வடிய கூடியதுமாய் இருப்பது மிக முக்கியம். இதை தவிர, மற்ற அனைத்து நடைமுறைகளும் நிலத்தில் வளர்ப்பதை போன்றது தான். அதனை கீழே பார்க்கலாம் வாங்க!
வெண்டையை எப்படி நடுவது?
நர்சரிகளிலிருந்து கன்றுகளை வாங்கி நடுதல்:
- நேரடியாக கன்றுகளை வாங்கி நடுவதாய் இருந்தால் 1-2 அடி இடைவெளி விட்டு நடவு செய்யுங்கள்
விதைகளிலிருந்து வெண்டையை வளர்ப்பது எப்படி?
- முதலில் உங்களுக்கு பிடித்த நல்ல ரக விதைகளை வாங்கிக்கொள்ளுங்கள்.
- விதை நேர்த்தி: நடுவதற்கு முன்னர் விதைகளை அரிசி வடித்த தண்ணீர், சதாரண தண்ணீர், முடிந்தால் கொஞ்சம் அசோஸ்பைரிலம், கொஞ்சம் சூடோமோனாஸ் சேர்த்து அதில் விதைகளை 4-5 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளுங்கள். பின்னர், அவற்றை எடுத்து ஆறவைத்து நடவு செய்யுங்கள்.
- இப்படிசெய்வதால் விதைகளின் முளைப்பு தன்மை அதிகரிப்பதுடன், முளைக்கும் செடிகளும் நல்ல வீரியமுடன் வளர்வதற்கும் உதவும்.
- உங்களுக்கு இது கடினமாய் தெரிந்தால் வெறும் நீரில் இரவு முழுதும் ஊற வைத்து அதையும் நடவு செய்து கொள்ளலாம்.
- நடுதல்: விதைகளை 1-2 அடி இடைவெளியில் 1-1/2 அங்குலம் அளவு சிறு குழியில் போட்டு மண்ணை மூடி விடுங்கள்.
- வெண்டை உயரமாக வளரும். அதனால், நிலத்தில் விதைக்கும் போது ஒவ்வொரு வரிசையும் 3-4 அடி இடைவெளியில் நடுங்கள்.
நாற்றுகளை குறைத்தல்:
நீங்கள் ஒரே இடத்தில் நிறைய விதைகளை விதைத்திருந்தீர்களானால் எல்லாம் ஒரே இடத்தில் முளைக்கும். அப்போது நல்ல ஆரோக்கியமான நாற்றை மட்டும் விட்டு வைத்து மற்றவற்றை கிள்ளிவிடுங்கள்.
நீர் ஊற்றுதல்:
- வெண்டைக்கு நிறைய தண்ணீர் தேவையில்லை. ஆனால், இவற்றுக்கு மண் மட்டும் லேசாக ஈரமாக இருக்க வேண்டும். எனவே ஈரப்பதமாக எப்போதும் வைத்திருப்பது அவசியம்.
- அதே நேரத்தில் நிறைய நீரை ஊற்றி தண்ணீர் தேங்க வைத்து விடுவதையும் தவிர்க்க வேண்டும்.
- நீர் ஊற்றும் போது இலைகளில் படாமல் அடி பாகத்தில் ஊற்றுவது பூஞ்சை தொற்றுகளை தடுக்க உதவும். அது மட்டுமல்லாமல் இலைகள்மேல் நீர் துளிகள் வெய்யிலில் பூத கண்ணாடி போன்று செயல் பட்டு இலையை சுட்டு பாதித்துவிடும்.
- அதே போல் காலையில் நீர் ஊற்றுங்கள். அப்படி செய்வது மாலைக்குள் இலைகளில் நீர் பட்டிருந்தாலும் அவை காய்ந்து விட உதவும்.
முடாக்கிடுதல்:
இவை சூரிய விரும்பிகள், அதே நேரத்தில் மண்ணில் ஈரப்பதத்தையும் காக்க வேண்டும். இதற்கு ஒரே பதில் முடாக்கிடுவது தான். அதோடு, முடாக்கிடுதல் குளிர் காலத்தில் வேர்களையும் பாதுகாக்கிறது.
உரமிடுதல்:
இவை எல்லா வகையான மண்ணிலும் வளரும் தான், ஆனால் ஒரு சத்துமில்லாத மண்ணிலிருந்து எவ்வளவு தான் காய்காய்க்க முடியும்? எனவே உரமிடுதல் மிகவும் முக்கியம்.
- எரு மற்றும் மட்கும் உரங்கள் இடலாம்
- மண்புழு உரமிடலாம்
- பஞ்சகாவியம், அமிர்த கரைசல், மீனமிலம், அல்லது எந்த ஆர்கானிக் ஊட்டசத்தை வேண்டுமானாலும் இடலாம்
எதை இட்டாலும் மாதத்திற்கு இரு முறை தொடர்ந்து இடுவது தான் நல்ல பலனை தரும்.
பூ பூத்தல்:
செடி முளைத்து 35-40 நாட்களில் பூ பூக்க துவங்கும். பூக்கள் மஞ்சள் நிறத்தில் செம்பருத்தியை போலவே மிக அழகாக இருக்கும்.
காய் தள்ளுதல்:
பூ பூத்து 5 நாட்களில் காய்கள் வளர துவங்கும். அது துவங்கி 2 மாதங்களுக்கு தொடர்ந்து காய்த்துக்கொண்டே இருக்கும்.
அறுவடை:
சந்தைக்கு சென்று வெண்டைக்காய் வாங்கினவர்களுக்கு தெரியும் சிறந்த வெண்டை முற்றாத வெண்டை தான் என்று. முற்றிய பின்னர் அவற்றின் குழகுழப்பு தன்மை அதிகரிப்பதுடன், உண்னவும் ஏற்றதாக இருப்பதில்லை.
எனவே காய்களை சரியான சமயத்தில் அறுவடை செய்வது மிக முக்கியம். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என தொடர்ந்து அறுவடை செய்யலாம். ஒரு வெண்டை செடி தன் வாழ் நாட்களில் 30 வெண்டைகாய்கள் வரை கொடுக்கும். ஆனால் இது நீங்கள் அதை எப்படி பார்த்துக்கொள்ளுகிறீர்கள் என்பதை பொறுத்து தான் இருக்கிறது.
நோய் மற்றும் பூச்சி தாக்கம்:
நான் பார்த்த வரையில் வெண்டையில் தோன்றுவதில் மாவுப்பூச்சி, அசுவினி பூச்சி, பச்சை புழுக்கள் தான் மிக முக்கியமானவை. இவற்றை வேப்பெண்ணெய் மற்றும் வேப்பங்கொட்டை கரைசல் ஆகியவற்றை வாரம் இரு முறை தெளிப்பதன் மூலம் தடுக்கலாம்.
நீங்கள் பூச்சிகளை காணாவிட்டாலும் இவற்றை தொடர்ந்து தெளித்து வாருங்கள். எப்போது இவை வருமென்றே தெரியாது.
நோயை பொறுத்த வரையில் வேர் அழுகல், வேர் தொற்றுகள், இலை சுருட்டல், மற்றும் இலை பழுப்பாதல் தான் முக்கியமான நோய்கள்.
பாஸ்போபாக்டீரியா மற்றும் சூடோமோனாஸ் இரண்டையும் நீரில் கலந்து செடியின் துவக்க காலத்திலிருந்து மண்ணில் தொடர்ந்து தெளித்து வாருங்கள். இது வேர் சம்பந்தமான நோய்களிலிருந்து செடியை பாதுகாக்கும்.
இலை தொடர்பான பிரச்சனைகளுக்கு செடியை நன்கு செழிப்பாக வைத்துக்கொள்வது தான் மிகவும் உதவும்.
வெண்டையை அறுவடை செய்வது எப்படி?
- செடி நட்டு 2 மாதத்தில் முதல் அறுவடைக்கு அது தயாராகி விடும்
- வெண்டைக்காயை 2-4 அங்குலமாய் இருக்கும் போதே அறுவடை செய்து விடுங்கள்.
- வெண்டையை கத்தியை வைத்து வெட்டி எடுப்பது நல்லது
வெண்டையை எப்படி சேகரித்து வைப்பது:
வெண்டையை சேமித்து வைக்க வெட்டப்படாத வெண்டைக்காய்களை ஃபிரீசர் பைகளில் போட்டு சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
இதை தவிர உங்களிடம் வேறு ஏதேனும் டிப்ஸ் இருக்கிறதா? அனைவருக்கும் அது பயன்தர கமெண்டில் அதை தெரியப்படுத்துங்கள். ஏதேனும் சந்தேகங்களோ, கேள்விகளோ இருக்கிறதா? தொடர்பு பக்கத்தின் மூலமாகவோ, இடப்பக்கத்திலுள்ள WhatsApp Iconஐ கிளிக் செய்தும் என்னை தொடர்பு கொள்ளலாம்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் சுற்றத்திற்கு இதை பகிர்ந்து ஆர்கானிக் பசுமை அன்பை பரப்பலாமே!
ஒன்றாய் விதைப்போம்! ஒன்றாய் வளர்வோம்! நன்றி
இது ஒரு இரு மொழி பதிவு. To read this post in English click here!