மாமரம் வளர்ப்பது எப்படி?

மாமரம் வளர்ப்பது எப்படி?
Spread the Green love!

மாம்பழம் நம் வாழ்க்கையோடு கலந்த ஒன்று. மாம்பழம் பிடிக்காத ஆளும் இருப்பார்களா என எனக்கு தெரியவில்லை. ஒற்றை சொல்லில் ஒரு ராஜ பழம் – மா. சிறு வயதில் மாம்பழ சீசனானால் போதும் என் பெரியம்மா வீட்டிலிருந்து மாம்பழங்கள் எனக்கு வந்து விடும். கொஞ்சம் வளர்ந்த பின்னர் சிட்டிக்கு வெளிபுறத்தில் குடியேறினோம். அங்கு(மாதவரம்) சுற்றி தோப்புகள் தான் 20 ரூபாய் கொடுத்தால் 2 பை நிறைய மாம்பழம் தருவார்கள்.

Mango tree
Pic by: Steven-CH

இப்படி எல்லாம் அனுபவித்து மாம்பழத்தை போன்று நானும் சற்று உருண்டையாக தான் இருந்தேன்!(இப்பவும் லைட்டா அப்படி தான்னு வெச்சுகோங்களேன்!) இப்படி மொழி, சுவை, தொனி, வாசம் என அனைத்திலும் கலக்கும் இந்த தமிழ் பழத்தை பற்றி தான் இன்றைக்கு பார்க்க போகிறோம். சில நாட்களுக்கு முன் வாட்சாப்பில் வாசகர்கள் அனைவரிடமும் அவர்களுக்கு கடினமாக இருக்கும் செடியை பற்றி கூறினால் அதற்கென ஒரு பதிவிடுகிறேன் என்று சொன்னேன்

அப்போது வாசகர் ஒருவர் கேட்டது தான் இந்த மாமரம். நீங்களும் இப்படி ஏதாவது செடியை வளர்க்க படாத பாடு படுகிறதாயிருந்தால் வாட்சாப்பிலோ கீழே கமெண்டிலோ எனக்கு அதை தெரிவியுங்கள். கண்டிப்பாக அதற்கும் ஒரு பதிவை இடுகிறேன்.

அறிமுகம்

இந்த பழத்துக்கு அறிமுகமே தேவையில்லை. மாமரத்தில் கல்லெறியாத பள்ளி பருவத்தை நீங்கள் கொண்டிருந்தால் நீங்கள் வாழ்க்கையில் நிறைய மிஸ் பண்ணிட்டீங்கனு தான் சொல்லணும். கவலையை விடுங்க இப்போ திரும்ப அந்த காலத்தை கொண்டு வந்துட்டா போச்சு! மாமரம் எளிதாக வளர கூடிய ஒன்று. அப்படியே விட்டால் இம்மரம் மிக பெரியதாக வளரும். இவற்றில் இலைகள் கூட அவ்வளவு வாசமுடையது. காயைப்பற்றி சொல்லவே வேண்டாம் மாங்காயை வெட்டி பத்தை போட்டு உப்பு மிளகாய் தொட்டு சாப்பிடும் சுகமே தனி தான்.

Mango Tree
Pic by: Markus Hill

இது மட்டுமில்லாமல் மாமரத்தின் அடியில் அமர்ந்து புத்தகம் படித்து பாருங்கள். காற்றின் அணைப்பில் இலைகள் சிணுங்க, கூடவே பறவைகளின் கொஞ்சல்களின் சத்தமும் கேட்டுக்கொண்டே படிப்பது அவ்வளவு அருமையாக இருக்கும். இந்த ஆம்பியன்ஸை விட வேறு என்ன பெரிதாக இருக்கும்?

மாமரம் வளர்ப்பது எப்படி

மா ரகத்தை தேர்வு செய்வது எப்படி

மாம்பழங்கள் நிறைய நிறங்களிலும், சுவைகளிலும் கிடைக்கும், கூடவே ஒவ்வொரு ரகத்திற்கும் காய் காய்க்கும் காலமும் பழுக்கும் காலமும் வேறு படும். இதனால் வெவ்வேறு ரக மாம்பழங்களை வளர்ப்பது நமக்கு நீண்ட நாள் அறுவடையையும் உறுதி செய்யும்.

Mango Stall 2
pic by: P. L. Tandon

உங்களுக்கு பிடித்த, உங்கள் பகுதியில் வளர கூடிய மாம்பழ ரகத்தினை தேர்வு செய்து கொள்ளுங்கள். இதை தவிர, மரம் வருடத்திற்கு எத்துனை முறை காய்க்கும் என்பதையும் பார்த்து வாங்க வேண்டும். மாமரங்கள் பொதுவாக வருடம் ஒரு முறை காய்க்கும் ஆனால் வருடம் முழுக்க காய்க்கும் ரகங்களும் இருக்கின்றன. என்ன அவற்றில் சுவை கொஞ்சம் கம்மியாகவும், காயின் அளவு சின்ன தாகவும் இருக்குமாம்.

துவங்கலாம் வாங்க

மாமர வளர்ப்பை துவக்க இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று: நீங்கள் உண்ட மாம்பழத்தின் கொட்டையிலிருந்தே கன்றினை உருவாக்கலாம். மற்றொன்று: நர்சரிகளிலிருந்து கன்றுகள் வாங்கிவரலாம். விதையிலிருந்து வளர்க்கப்படும் செடி காய் கொடுக்க நிறைய காலம் எடுக்கும்.

நர்சரிகளில் கிடைக்கும் கன்றுகள் பொதுவாக ஒட்டுசெடியாக இருக்கும். இவை சீக்கிரமாக காய் காய்க்கும். விதை செடிகள் 6-8 வருடங்கள் எடுக்க இவை 2-3 வருடங்களிலேயே காய்க்கத்தொடங்கும். மரத்தை சரியாக கவாத்து செய்து சிறியதாய் வைத்திருந்தாலும் சீக்கிரமாய் காய்க்கும்.

நர்சரிகளிலிருந்து மாஞ்செடிகளை வாங்குவது எப்படி

மாஞ்செடிகளை நர்சரிகலிலிருந்து வாங்க போகும்போது பழத்தின் நிறத்தையும், அளவையும் பார்த்து மட்டும் வாங்குவதை விட அந்த ரகத்தை நீங்கள் சுவைத்துள்ளீர்களா?, அது உங்களுக்கு பிடித்திருக்கிறதா? என பார்த்து வாங்குவது நல்லது. ஏனென்றால் சந்தைக்கென்றே சில ரகங்கள் உள்ளன., அவை பெரிதாக இருக்கும் அழகாக இருக்கும், நிறைய நாள் கெடாமல் இருக்கும் ஆனால் சுவை கேவலமாய் இருக்கும்.

Mango, 'Nam Doc Mai'. A grafted Thai cultivar
pic by: Garry Greenfingers

அடுத்து நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மா மரங்களை வளர்க்க போகிறதாயிருந்தால் வெவ்வேறு மாதத்தில் காய்க்கும் மரங்களை தேர்வு செய்யுங்கள். இதனால் உங்களுக்கு மட்டும் மாம்பழ சீசன் நீண்டு இருக்கும்.

மூன்றாவதாக உங்கள் பகுதி தட்பவெப்பத்தை மனதில் கொண்டு அதற்கு தாக்குபிடித்து வளரும் கன்றுகளை தேர்வு செய்யுங்கள்.

நீங்கள் நர்சரிகளிலிருந்து தான் செடிகளை வாங்க போகிறீர்கள் என்றால் கீழிருக்கும் பகுதியை விட்டு விட்டு அடுத்த பகுதிக்கு கடந்து செல்லலாம்.

மாமரத்தை விதையிலிருந்து வளர்ப்பது எப்படி

https://www.flickr.com/photos/roadandharbor/2510782198/in/photolist-4PSq5f-74m2jQ-pRpMx-6jQw25-a8BV5c-5K4HMc-9z9S8P-9s8iGJ-35Vs4C-fesfyf-qRjt1o-6zgJDR-9mn3GB-LeeNfL-5ud7Qb-NUArKU-4h7o6P-ogkX2o-3d8Zx-oewztd-aE2aHy-qM8FoR-LvJi7-SoCm9S-dAPVKe-9s5jVk-spbKt3-9s5jWM-YNVtoN-nzpuov-dee3Vz-acjH9F-4zV9tQ-4VUZRf-LeeMQs-6k6krr-QUUsvw-ecLb5u-cL1qrW-T7t2Hc-bzCGxf-o1pm6P-qyyo6z-TN3ZRt-FLtRAS-qiCdAk-6tk3W5-ddvpbz-8nfa4c-9mnjeg
pic by: Kevin Contrino

இது எல்லாருக்கும் தெரிந்தது தான். பிடித்த மாம்பழத்தை வாங்குங்கள், நன்றாய் சாப்பிட்டு பின்னர் கொட்டையை புதைத்து வையுங்கள் அவ்வளவு தான். இதற்கு இன்னொரு முறையும் இருக்கிறது. கொட்டையை கீறி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து அதை புதைத்தோ, டிஷ்யு பேப்பரில் சுற்றி நனைத்தோ வைக்கலாம்.

பொதுவாக இம்முறையில் விதையில் ஏதேனும் பாதிப்புகள் உள்ளதா என தெரிந்துக் கொள்ளலாம். முன்னமே சொன்னது போல இந்த முறை எளிதாகவும், செலவு குறைவானதாகவும் இருந்தாலும் இதில் இருக்கும் ஒரே பிரச்சனை இது காய்க்க எடுக்கும் காலம் தான்.

மாமரத்தை கன்றிலிருந்து வளர்ப்பது எப்படி

நர்சரிகளிலிருந்து வாங்கும் செடிகள் ஒட்டு செடிகளாக இருக்கும். நான் முன்னமே சொன்னது போல இவை சீக்கிரமாக பூத்து காய்களும் தள்ளும். இவற்றுக்கு 2-3 வருடங்கள் தான் தேவைப்படுகிறது. நாமே செடியை ஒட்டு போடலாம் தெரியுமா? அதை பற்றி பின்னற் ஒரு பதிவை இடுகிறேன்.

நடுதல்:

நடுவத்ற்கு முன்னர் அதன் ஒரு பகுதியான, நட இடத்தை தயார் செய்ய வேண்டும் அல்லவா? எனவே முதலில் அதை செய்வோம் வாருங்கள்!

இடத்தை தயார் செய்தல்

நம்மில் நிறைய பேர் இந்த படி வரை சிறப்பாக செய்து விடுவோம். சரியான ரகத்தை தேர்வு செய்து விடுவோம். அது எவ்வளவு பணமாயிருந்தாலும் செலவழித்து வாங்கியும் விடுவோம். ஆனால் நட்ட பின் செடி வளராது. கொஞ்சம் தாண்டி இறந்தே போய் விடும். உங்களுக்கும் அப்படி தான் ஆகிறதா? உங்களுக்கு தான் இந்த பகுதி.

 • இவை வெப்பமண்டல செடிகள், சூரிய விரும்பிகள். எனவே நல்ல சூரிய வெளிச்சம் உள்ள ஒரு இடத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்
 • பின்னர் 2x2x2 அடி என்ற கணக்கில் ஒரு குழியை வெட்டிக்கொள்ளுங்கள். பின்னர் அதை 20-40 நாட்கள் வரை காய விடுங்கள்
 • இப்படி குழி தோண்டும் போது மேல்தட்டு மண்ணை தனியாகவும் அடிதட்டு மண்னை தனியாகவும் வைத்துக்கொள்ளுங்கள்
 • உங்கள் மண் நீர் தேக்கி வைக்க கூடியதாய் இல்லாமலிருந்தாலும், அல்லது உங்களிடம் நீர் வசதி சரியாக இல்லாமலிருந்தாலும் குழியில் ஒரு மெல்லிய தட்டு களி மண் இட்டுக்கொள்ளுங்கள்.
 • பின்னர் 2கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரம் இடுங்கள்
 • ஊட்டமேற்றிய தொழுவுரம் செய்வது எப்படி:  2கிலோ தொழுவுரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் வேப்பம்/கடலை/எள் பிண்ணாக்கு, பஞ்ச காவியம், ஆசோஸ்பைரில்லம், சூடோமோனாஸ், இவற்றில் எதுவெல்லாம் கிடைக்குமோ எல்லாவற்ரையும் கலந்து, அந்த கலவையை 15 நாட்கள் வரை வைத்து வையுங்கள். அவ்வளவு தான்  ஊட்டமேற்றிய உரம் தயார்.
 • இது கொஞ்சம் வேலையாக இருந்தால் வெறும் தொழுவுரம் மட்டும் இடுங்கள்
 • உங்களிடம் இருந்தால் கொஞ்சம் செம்மண்ணையும் இடுங்கள்
 • பின்னர் மாங்கன்றை அந்த குழியில் வைத்து மேல்தட்டு மண்ணை வைத்து செடியை அதன் ஒட்டு புள்ளி வரை மூடுங்கள்.
 • பின்னர் அந்த செடியை நன்றாக அழுத்தி விடுங்கள்
 • கன்றுக்கு அதிகமாக நீர் ஊற்றாதீர்கள், அப்படி ஊற்றினால் நமக்கு ஏற்படும் மூச்சு திணறல் போன்று செடிக்கும் ஏற்படும்.
 • தினமும் 3 லிட்டர் நீர் ஊற்றுங்கள்
 • மரம் இடுப்பு உயரம் வளரும் வரை அதற்கு வேலி போட்டு பாதுகாக்கலாம். இது செடியை அதிக வெய்யிலிலிருந்தும், தாவரம் உண்ணும் மிருகங்களிடமிருந்தும் பாதுகாக்கும்.
IMG_8999
Pic by: Gautam Patel

சரி இது வரை மரக்கன்று நடுவதற்கு முன் என்ன வெல்லாம் செய்ய வேண்டும் என்று அறிந்து கொண்டிருப்பீர்கள். இப்போது இதையெல்லாம் எதற்காக செய்யவேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்

 • குழியை தோண்டுவது கீழ்தட்டு மண்ணை தளர்வாக்குவதோடு, கீழே உள்ள கல், பாறை போன்றவற்றையும் அகற்ற உதவும். இதனால் செடியின் இளம் வேர்கள் கடினமின்றி வளரும்.
 • சரி இந்த ஊட்டமேற்றிய தொழுவுரம் எதற்கு? உங்கள் மண்ணில் சரியான கார அளவு இல்லாமல் இருக்கலாம், ஒரு வகையான ஊட்டசத்து மட்டும் மிக அதிகமாக இருக்கலாம், உங்கள் தண்ணீர் உப்பாய் இருக்கலாம், கன்றுடன் வந்த தாய் மண்ணும் உங்கள் மண்ணும் வெவ்வேறாக இருக்கலாம், இந்த எல்லா பிரச்சனைகளுக்கும் ஊட்டமேற்றிய தொழுவுரம் தீர்வளிக்கும். இதில் நாம் நுண்ணுயிர் ஊக்கிகளை கலந்துள்ளதால் அது நுண்ணுயிர் பெருக்கத்துக்கு உதவி மண்ணை செடிக்கேற்றதாக மாற்றி விடும்.
 • சூடோமோனாஸ் சேர்ப்பது செடிகளின் தொடக்க பருவத்தில் பூஞ்சை தொற்றுகள் வராமல் தடுக்கும்.

இவற்றை எல்லாம் செய்யணுமா? என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் இதை நீங்கள் ஒரு முறை தான் செய்யப்போகிறீர்கள். இது உங்களுக்கு காலாகாலத்துக்கும் பழத்தின் வடிவில் பரிசளிக்கப்போகிறது. எனவே இதை செய்யுங்கள்.

 நீர் ஊற்றுதல்

முன்னமே நான் சொன்னது போல சின்ன செடிக்கு நிறைய தண்ணீர் ஊற்ற வேண்டாம். ஆனால் தவறாமல் நன்கு வளரும் வரை தொடர்ந்து தண்ணீர் ஊற்றுங்கள். செடி வளர வளர் அதன் நீர் தேவைகளும் வளரும். காய் காய்க்கும் காலத்தில் மட்டும் இவற்றுக்கு 20-40 லிட்டர் தண்ணீர் வரை தேவைப்படும். இவ்வளவு தண்ணீர் ஊற்றி தான் ஆக வேண்டும் என்று நான் சொல்லவில்லை ஆனால் இப்படி நீர் ஊற்றினால் நல்ல பலன் கிடைக்கும் என வேளாண் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். (நீங்கள் உங்கள் தண்ணீர் இருப்புகேற்ப நீர் மேலாண்மை அமைத்துக்கொள்ளலாம்.)

பூ பூத்தல்:

குளிர் காலத்தில்(மார்கழி) பூ பூக்கத்துவங்கும். ரகத்திற்கு ஏற்ப டிசம்பரில் துவங்கி பிப்ரவரி வரை பூ பூப்பது தொடரும். பொதுவாக விதையிலிருந்து வளரும் மரத்துக்கு பூ வைக்க 6-8 வருடங்கள் எடுக்கும். ஆனால் ஒட்டு செடிகள் ஓரிரு வருடங்களிலேயே பூக்க துவங்கும்.

mango flowers

கொஞ்சம் பொருங்க பாஸ்

ஆனால் 3 ஆண்டுகள் வரை பூக்கும் பூகளை எல்லாம் வெட்டி விடுமாறு விவசாயிகளும், விஞ்ஞானிகளும் அறிவுறுத்துகின்றனர். அட என்னங்க சொல்றீங்க? ஒட்டு செடி வாங்கியதே சீக்கிரம் காய் பார்க்கணும்னு தான! அதை போய் வெட்ட சொல்றீங்களே என உங்க மைண்டு வாய்ஸில் நீங்கள் என்னை கேட்பது எனக்கு கேட்கிறது. உங்கள் கேள்வி நியாயமானது தான். ஆனால் அவர்கள் சொல்வதற்கும் சரியான காரணம் இருக்கின்றது.

காரணத்தை தெரிஞ்சிக்குங்க

பொதுவாக எந்த பழ மரமும் காய்க்க தயாராகும் போது பூ வைக்க நிறைய சத்தை எடுத்துகொள்ளும். வளர்ந்த பெரிய மரத்தில் இதற்கான ஆற்றல் இருக்கும் ஆனால் 1-2 அண்டுகளே ஆன சின்ன கன்றுகளை நினைத்து பாருங்கள். அந்த மெல்லிய தண்டு அவ்வளவு ஆற்றலையும் செலவழித்து விட்டால் பின்னர் எத்தனை நாள் தாக்கு பிடிக்கும்? எனவே தண்டு சற்று தடிமன் ஆகும் வரை கொஞ்சம் பொறுமை காத்தல் நல்லது.

தனிபட்ட முறையில் எனக்கு மாமரம் வளர்க்கும் வாய்ப்பு இது வரை கிடைக்கவில்லை ஒரு வேளை வரும் காலத்தில் கிடைத்தால் நான் நிச்சயமாக இதை பின்பற்றுவேன். எனவே உங்களுக்கும் அதையே பறிந்துரைக்கின்றேன் இது நீண்ட காலத்தில் உதவும்.

காய் காய்த்தல்:

பூக்கள் தோன்றி மகரந்த சேர்க்கை நடந்து சில நாட்களிலேயே சின்ன சின்ன காய்கள் தோன்ற துவங்கும். காய் தோன்றி பெரிதாகி பழுக்க, ரகம் மற்றும் இடத்திற்கேற்ப 3-4 மாதங்கள் ஆகும். இப்படி மாம்பழங்கள் ஏப்ரலிலிருந்தே(சித்திரை) பறிக்க தயாராகி விடும். ரகத்திற்கேற்ப ஜூன் மாதம் வரை இவை தொடர்ந்து பழுக்கும்.

அறுவடை:

அறுவடைக்கு பழங்கள் தயாராக இருக்கும் போது மரத்தை சுற்றி மாம்பழ வாசனையே மூக்கை துளைக்கும். ஆனால் இதை எப்போது அறுவடை செய்யப்போகிறீர்கள் என்பதை உங்களிடமே விட்டு விடுகிறேன். ஏனென்றால் சில மா ரகங்கள் ஊறுகாய்களுக்கும், மாங்காயாய் சாப்பிடுவதற்கும் தான் நன்றாக இருக்கும். சிலது பழுத்தால் தான் ருசியாய் இருக்கும். எனவே உங்கள் சுவை விருப்பத்தையும், நீங்கள் வளர்க்க போகும் ரகத்தையும் வைத்து அறுவடையின் போது பரிசோதனை செய்து பாருங்கள்

https://www.flickr.com/photos/philipdumas/14688981446/in/photolist-oo1SqN-9MYkpW-9MEjBf-i1jGqH-i1kQ44-odLJCQ-i1kLNg-i1kuJn-7cPKZU-f3YYQS-i1jH6b-27duUPs-ZPXrTR-i1k5GY-i1k4Ri-25HEyLh-i1kiaG-2eR7x7h-i1kcFA-i1jJc8-i1jLjW-244nnzL-i1kgEs-i1jJtS-H9qcte-i1kmqj-i1jV2f-i1k6aj-i1jWFL-2eVHoUR-i1kNEH-i1jYod-25HGdES-HabzAT-WnMZpM-2eJUKw9-2fWEpDi-2eJU3KQ-TNn5ff-2fWCHsZ-2eAz7nX-2fZw6jk-2eAz4st-2eAz5J6-2eAz6zK-2fZw4NK-25nUGZn-2eMQf3u-2eAAZwP-2geKpuV
Pic by: philipdumas

இந்த பதிவு இன்னும் நீண்டுக்கொண்டே போகும் போன்று தெரிகிறது. இன்னும் நான் கவாத்து, உரமிடுதல், மற்றும் மா வளர்ப்பில் பொதுவாக வரும் சிக்கல்கள் மற்றும் அதை சமாளிக்கும் முறைகளை பற்றி எல்லாம் பேசவில்லை. ஆனால் அவற்றையும் இங்கே பேசினால் இந்த பதிவு ரொம்ப நீளமாகி விடும் எனவே அதை பற்றி எல்லாம் வேறு ஒரு புது பதிவில் பதிவிடுகிறேன்.

இதை தவிர உங்களிடம் வேறு ஏதேனும் டிப்ஸ் இருக்கிறதா? அனைவருக்கும் அது பயன்தர கமெண்டில் அதை தெரியப்படுத்துங்கள். ஏதேனும் சந்தேகங்களோ, கேள்விகளோ இருக்கிறதா? தொடர்பு பக்கத்தின் மூலமாகவோ, இடப்பக்கத்திலுள்ள WhatsApp Iconஐ கிளிக் செய்தும் என்னை தொடர்பு கொள்ளலாம்.

நீங்கள் அனைவரும் காட்டிவரும் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி. தொடர்ந்து உங்கள் ஆதரவை எனக்கு தாருங்கள். கூடவே ஏதாவது விமர்சனங்கள் உங்களிடம் இருந்தாலும் தயங்காமல் என்னிடம் அதை தெரிவியுங்கள்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் சுற்றத்திற்கு இதை பகிர்ந்து ஆர்கானிக் பசுமை அன்பை பரப்பலாமே!

ஒன்றாய் விதைப்போம்! ஒன்றாய் வளர்வோம்! நன்றி

இது ஒரு இரு மொழி பதிவு. To read this post in English click here!

5 thoughts on “மாமரம் வளர்ப்பது எப்படி?

 1. சார் என் பெயர் முஜிபுர் ரஹ்மான் சார் எங்க வீட்டில் வந்து ஒரு மாமரம் இருக்கு கிட்டத்தட்ட பத்து பதினைந்து வருஷம் ஆகப்போகுது பூப்பூக்கவே இல்லை அதுக்கு என்ன செய்யனும்

  1. கவாத்து செய்து, பஞ்ச காவியம் தெளித்து வாருங்கள் புதிய துளிர்கள் பிறக்கும். பின் தேமோர் கரைசல் தெளித்தால் பூக்கள் பூக்க வழி பிறக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது