மல்லிகை செடி பொதுவாக பூச்சிகள் மற்றும் நோய்களால் பாதிப்படையாது என்றாலும், சில நேரங்களில் அருகில் உள்ள செடிகள் அல்லது மண்ணினாலோ அவை ஈர்க்கப்படலாம். பூச்சிகள் பொதுவாக உலர்ந்த நேரங்களிலும், நோய்கள் ஈரப்பதம் மிக்க நாட்களிலும் இவற்றை பாதிக்கும்.
பூச்சிகள்
பட்வார்ம்(budworm)
சேத அறிகுறிகள்
இந்த வகையான நுன்புழுக்கள், மல்லிகையின் முதிர்வடையாத மொட்டுகளை பாதிக்கும். இவை மொட்டுக்களின் உட்பகுதியில் அல்லது பூக்கள் கூட்டமாக இருக்கும் இடத்தில் இருக்கும், மேலும் இவை மொட்டுகளின் உட்பகுதியை உண்ணக்கூடியவை. இவை ஒரு மொட்டிலிருந்து மற்ற மொட்டுகளுக்குள் ஊடுருவி அவற்றையும் பாதிக்கும். இவை மண்ணில் கூட்டு புழுக்களாக மாறும். இந்த புழுக்களின் கழிவுகள், பட்டுகளினால் பூக்கள் மலராமல் போகலாம். மொட்டுகளும் உதிரக்கூடும். சில நேரங்களில் மொட்டுகள் இளன்சிவப்பு நிறமாக மாறிவிடும்.
கட்டுபாட்டு நடவடிக்கைகள்
வேம்பின் விதையிலிருக்கும் பருப்பைக் கொண்டு தயாரிக்க படும் சாறு இதனை கட்டுபடுத்த உதவும். இதை தயாரிக்க தேவையான பருப்பை (சுமார் 5கிலோ) எடுத்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதை 10லி நீரில் ஒரு இரவு முழுவதும் ஊரவைக்க வேண்டும். மறு நாள் காலையில் மரக்கரண்டி கொண்டு நன்றாக கலக்கினால் பால் போன்ற நிறத்தை பெறும். பின்பு இதை ஒரு துணியை கொண்டு வடி கட்ட வேண்டும். இறுதியாக இதில் தண்ணிர் கலந்து 100லி ஆக பெறுக்கி செடிகளில் தெளிக்கலாம்.
ப்லாசம் மிட்ஜே (blossom midge)
இந்த வகையான புழுக்கள் மொட்டுகளின் அடிபாகத்தை தாக்கும். இதனால் அந்த பகுதி தடிமனாகிவிடும். அவை மொட்டுகளின் உட்பகுதியை உண்ணுவதால் செடியின் வளர்ச்சி குறைந்து காயத்தொடங்கிவிடும். இவை அருகில் உள்ள செடிகளுக்கும் பரவி அவற்றையும் பாதிக்கும். இவை கத்தரிக்காய், பாகற்காய், தக்காளி போன்ற பல வகையான செடிகளை தாக்கும்.
கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்
பாதிக்க பட்ட பூக்களை ஒன்று திரட்டி அழிப்பது நல்லது. இவற்றை பிலாஸ்டிக் பைகளில் அடைத்து விட்டால் புழுக்கள் மற்ற செடிகளுக்கு பரவ வாய்ப்பில்லை. இது பல வகையான செடிகளை பாதிக்கும் என்பதால், இது தொற்றக்கூடிய செடிகளை அருகில் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். மல்லிகை தோட்டத்தில் முறையான கழிவு வசதிகள் அமைப்பதன் மூலம் சுகாதாரத்தை மேன்படுத்தலாம். மண்ணை நன்றாக கிளறி விடுவதன் மூலம் கூட்டு புழுக்கள் அழிந்து விடும் மேலும் குளிர் காலத்தில் செடியை கத்தரிப்பது நல்லது. பொருத்தமான பொறி வைத்தும் கூட பூச்சிகளை பிடித்து விடலாம்.
எரியோஃப்யிட் மைட் (eriophyid mite)
இவை மிகச் சிறிய வகை தாவர உண்ணி பூச்சிகளில் ஒன்று. இந்த பூச்சிகள் மிகவும் சிறியதாக இருப்பதால் இவற்றை கண்டறிவது மிகவும் கடினமான செயல். இவை பரவக்கூடிய தாவரங்களில் ஏற்படும் திசு மாற்றத்தைக் கொண்டே இவற்றை கண்டறிய முடியும். இவை ஒரு செடியிலிருந்து மற்றொன்றிற்கு எளிதில் பரவக் கூடும். இவை இலைகள், மொட்டுகள் மற்றும் இளம் தண்டுகளை பாதிக்கும். இலைகளின் மேல் சிறிய கூந்தல் போன்ற படலங்களை ஏற்படுத்தும். செடியின் வளர்ச்சி குறைந்து பூக்களின் வளர்ச்சியை பாதிக்கும். மிகவும் கடுமையான சேதத்தில் பூக்களின் விளைச்சல் முற்றிலுமாக பாதிக்கும்.
கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்
இவற்றை கண்டறிய மிகந்த முனைப்புடன் கவனிக்க வேண்டும். இந்த பூச்சிகளால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்பதை கண்டறிய செடியில் கொப்புளங்கள், வெண்கல நிற படலங்கள் போன்றவை தென்படுகின்றதா என கூர்ந்து கவனிக்க வேண்டும். இதனை கட்டுப்படுத்த வேம்பு எண்ணெய்,பூண்டு மற்றும் சோப்பினால் ஆன கலவையை பயன்படுத்தலாம். இதை தயாரிக்க சோப்பை 500மில்லி வெதுவெதுப்பான நீரில் நன்றாக கரைத்து விட வேண்டும். 200கி பூண்டை நன்றாக அறைத்து, 300மில்லி நீரை கொண்டு சாறு தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது தயாரிக்கப்பட்ட சோப்பு கரைசலை 200மில்லி சுத்தமான வேம்பு எண்ணெயில் வேகமாக கலக்கி குழம்பு போன்ற திரவத்தை தயாரித்துக்கொள்ள வேண்டும். இறுதியாக பூண்டிலிருந்து தயாரிக்கப்பட்ட சாறினை இதனுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.
நோய்கள்
லீஃப் ப்ளைட் (leaf blight)
இது பூஞ்சையால் ஏற்படக்கூடிய ஒரு நோய், இதனை இலையின் மேற்பகுதியில் இருக்கும் சிவப்பு மற்றும் காவி நிற திட்டுகளின் மூலம் கண்டறியலாம். இவை மழை காலங்களில் வேகமாக பரவக்கூடியவை. நோய்க்கிருமி பாதித்த இலைகள் சுருங்கி விளிம்புகளில் காயத் தொடங்கிவிடும். இளம் தண்டுகள் கூட காய்ந்து விட வாய்ப்புள்ளது. கடுமையான பாதிப்பின் போது தண்டுகள், மொட்டுகள் மற்றும் இலைகள் காய்ந்து விடும். பூக்களின் வளர்ச்சியும் மிகுதியாக குறைந்து விடும்.
துரு (rust)
இதுவும் பூஞ்சையால் ஏற்படக்கூடிய பாதிப்பு, இலைகள், பூக்கள் உள்ளிட்ட அனைத்தும் பாதிப்படையும். இலையின் அடிப்பகுதி, சிறிய கிளைகள் மற்றும் மொட்டுகளில் மஞ்சள் – இளஞ்சிவப்பு நிறத்திலான கொப்புளங்கள் ஏற்படும். நோயின் தன்மை அதிகமானால் செடிகள் முற்றிலுமாக சிதைவடைந்துவிடும்.
நோய்களுக்கான தீர்வு
இவ்விரண்டுமே பூஞ்சையால் ஏற்படும் பாதிப்பு என்பதால் சமையல் சோடா மற்றும் தண்ணீர் கலவை அல்லது சோப்பு மற்றும் தண்ணீர் கலவை கொண்டு தீர்வு காணலாம்.
சமையல் சோடா மற்றும் தண்ணீர் கலவை தயாரிக்க 4 மேஜைக்கரண்டி சமையல் சோடாவுடன் 1 காலன் (சுமார் 3.785லி) தண்ணீர் கலக்க வேண்டும். சமையல் சோடாவிற்கு பதிலாக பொட்டாசியம் பைகார்பனேட்டையும் பயன்படுத்தலாம்.
சோப்பு மற்றும் தண்ணீர் கலவைக்கு அமிலம் இல்லாத சோப்பினை 500மில்லி வெதுவெதுப்பான நீரில் கரைத்து, மேலும் நீர் சேர்த்து செடிகளில் தெளிக்கலாம் அல்லது இதில் சிறிதளவு தாவர எண்ணெய் சேர்த்தும் பயன்படுத்தலாம்.
உங்கள் ஆதரவை தொடர்ந்து எங்களுக்கு அளியுங்கள்! எங்களை நீங்கள் கீழ்காணும் சமூக ஊடகங்களில் பின்தொடரலாம்.
நன்றி! பயிரிட்டு மகிழுங்கள்!