கோடையில் செடிகளை பராமரிப்பது எப்படி?

Spread the Green love!

சொபா! வெய்யில் தாங்க முடிலப்பா. இருக்க, இருக்க வெய்யிலோட தாக்கம் ஏறிகிட்டே தான் போகுது. இந்த வெய்யிலை நம்மாலயே தாங்க முடியலயே நாம் வளர்க்கும் செடிகளால் எப்படி தாங்க முடியும்? என்ன தான் செடிகள் தங்களுக்குள் ஒரு குட்டி தொழிற்சாலையே வைத்திருக்கும் அளவுக்கு திறமை வாய்ந்தவைகளாய் இருந்தாலும் இந்த சூட்டை சமாளிக்க இவற்றிற்கு நம் உதவி தேவைப் படுகின்றன. அது எப்படி பண்ணுவது என கவலை பட வேண்டாம் அதற்கு தானே நாங்கள் இருக்கிறோம். உங்களுக்கு உதவ பின்வரும் குறிப்புகளை பின்பற்றினாலே நமது செடிகளை காப்பாற்றி விடலாம்.

சரியாக தண்ணீர் ஊற்றுங்கள்

இந்த வெப்பத்தை தணிக்க தண்ணீர் ஊற்றுவது அவசியம் தான். ஆனால் சரியாக ஊற்றுவது மிக அவசியமானது. காலையும் மாலையும் தண்ணீர் ஊற்றுவதற்கு சரியான நேரங்கள். மதிய வேளையில் ஊற்றுவதை தவிர்க்க வேண்டும் ஏனென்றால் தண்ணீர் சூடாக வேர்களை சென்றடையும் அதே நேரத்தில் ஊற்றும் பாதி தண்ணீர் நீராவியாகி வெளியேறி விடும். தோட்டம் வைத்திருப்பவர்கள் வாரம் ஒரு முறையோ இரு முறையோ தண்ணீர் நன்கு ஆழமாய் செல்லுமாறு ஊற்றுவது நல்லது. இதற்கு சொட்டுநீர் பாசனம் நல்ல உதவியாக இருக்கும். சொட்டு நீர் பாசனம் இல்லையா தண்ணீர் ஊற்றும் ஜாடிகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நிறையவும் கூடாது கொஞ்சமும் கூடாது

குறைவான தண்ணீர் எப்படி நம் செடிகளை பாதிக்குமோ அதே போன்று அதிகமான தண்ணீரும் நம் செடிகளுக்கு நல்லதல்ல. பொதுவாகவே செடிகள் இலைகள் வழியாய் அதிகபட்ச நீரை வெளியிட்டு தன்னை தானே பாதுகாத்துக்கொள்ளும். இதனை டிராஸ்பிரேஷன்(transpiration) என்று கூறுவர். வெயில் காலத்தில் இதோடு வெயிலின் தாக்கமும் சேர்ந்து இலைகள் வாட்டமாய் காணப்படும் இதை பார்த்து விட்டு தண்ணீர் பத்தவில்லை என்ற முடிவுக்கு வராதீர்கள். தண்ணீர் பற்றாக்குறையை அறிய மண்ணின் ஈரப்பதத்தை சோதித்து பாருங்கள். (கவலை படாதிருங்கள் உங்கள் செடிகள் மாலையானதும் திரும்ப வாட்டம் நீங்கி பழைய நிலைக்கு காணப்படும்) அப்படி அளவுக்கு அதிகமான நீர் ஊற்றுவதால் வேர்களுக்கு செல்லும் பிராண வாயு தடைபடும் இதனால் வேர்கள் அழுகுதலோ, பூஞ்சை தொற்றோ ஏற்படலாம்.

முடாக்கிடுதல்

முடாக்கு என்பது தழைகூளங்களால் ஆன ஒரு அடுக்கு. இதை இடுவதன் மூலம் வேர்களை வெப்பத்திலிருந்தும் குளிரிலிருந்தும் பாதுகாக்கலாம். இது  மண்ணை ஈரப்பதமாக வைப்பதற்கும் உதவும். நீங்கள் தோட்டம் வைத்திருப்பவரானாலும் சரி, தொட்டிகளில் செடி வளர்ப்பரானாலும் சரி உங்கள் தட்ப வெப்பத்திற்கேற்ப 4-6 அங்குலம் வரை முடாக்கிடலாம். இலை தழைகள், வெட்டப்பட்ட புற்கள், தேங்காய் நார் போன்றவை குறைந்த செலவில் நமக்கு கிடைக்க கூடிய முடாக்குகள் ஆகும்.

நிழலிடுதல்

அதீத வெப்பத்தின் போது செடிகள் மலர்வதை நிறுத்தி விடுவதோடு மட்டுமில்லமல் வெப்பத்தில் கருகவும் வாய்ப்பிருக்கிறது. வெப்பம் 33º செல்சியஸ் எட்டியவுடன் தக்காளி, கத்தரி, மிளகாய் போன்ற செடிகள் பூ பூப்பதை நிறுத்து விடுகின்றன. இதற்கு சிறந்த தீர்வு பகலின் அதிக வெப்ப நேரத்தின்போது செடிகளுக்கு நிழலளிப்பது தான்.ஒரு பெரிய குடையையோ அல்லது மெல்லிய துணி வைத்து பந்தல் போடுவது போல் போட்டோ நாம் நிழலிட முடியும்.

வெப்பத்தை தாங்கும் செடிகளை தேர்ந்தெடுப்பது.

வெயில் காலத்தின் வெப்பத்தை தாங்கி அதில் வளர கூடிய அநேக செடிகள் இருக்கிறது அவற்றை தேர்ந்தெடுத்து வளர்க்க வேண்டும். நல்ல தண்ணீரும் உரமும் அளித்தால் மிளகாய், வெள்ளரி, கத்தரி, தர்பூசணி போன்ற செடிகள் தொட்டிகளிலும் நன்றாக வளரும். இது மட்டுமல்லாமல் சின்னியா என்றழைக்கப்படும் கலர் சாமந்தி, துளுக்க சாமந்தி, பேப்பர் பூ, ரோஜா போன்ற பூ செடிகளும் கோடை காலத்தில் நன்றாக வளர கூடியவை. (இவற்றைவைத்து இந்த கோடைகாலத்தை கொஞ்சம் வண்ணமயமாக மாற்றலாம்).

உங்களை பாதுகாத்துகொள்வது

உங்கள் செடிகள் நன்றாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் பாதுகாப்பாக இருக வேண்டும் இல்லையா! எனவே கோடைகாலத்தில் உங்கள் தோட்டத்தில் வேலை பார்க்கும் போது சில பாதுகாப்பு முறைகளை பின்பற்றுங்கள். தோட்ட வேலைகளை செய்ய வெயில் உச்சத்தில் இருக்கும் நேரங்களை தேர்வு செய்யாதீர்கள். காலை மாலை வேளைகளை வைத்துக்கொள்ளுங்கள். அதையும் இடைவேளை எடுத்து சிறிது சிறிதாய் பிரித்துக்கொள்ளுங்கள். கோடைகாலத்தில் தோட்ட வேலைகள் சிறிது மெதுவாக தான் நடக்கும். வெயிலில் செல்லும் போது சன் ஸ்கிரீன், தொப்பி ஆகிய வற்றை பயன்படுத்துங்கள். உங்கள் செடிகளை போல உங்களுக்கும் உடலில் நீர் வற்றாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வேர்வை உடலை குளிர செய்யும். ஆனாலும் நாம் நீர் அளவை குறையாமல் பார்த்துக்கொள்ளுவது அவசியம். தண்ணீர் தான் இதற்கு சிறந்த மருந்து சில சமயங்களில் இன்னும் கொஞ்சம் மேலே சென்று ஐஸ் டீ, அல்லது எலுமிச்சை பழரசம் பருகுவதும் நல்லது தான்.

 

மாடி தோட்டம் உங்கள் வீட்டை குளிர பண்ணும்.

நீங்கள் தோட்ட வளர்ப்புக்கு புதுசா? அல்லது இன்னும் தோட்டமே ஆரம்பிக்கவில்லையா? அப்படியானால் மாடி தோட்டத்தில் தொடங்குங்கள். மண் வீட்டை குளிர பண்ணும். நீர் கசிவை தவிர்க்க கீழே நெகிழி விரிப்புகளை பயன்படுத்திகொள்ளுங்கள்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். உங்கள் செடிகளை வெப்பத்திலிருந்து பாதுகாக்க நீங்கள் யுக்திகள்  வைத்துள்ளீர்களா? அவற்றை கமென்டில் பகிருங்கள் மற்றவர்களுக்கும் அது உதவலாம். மீண்டும் அடுத்த பதிவில் உங்களை சந்திக்கிறோம்.

 

இந்த பதிவை ஆங்கிலத்தில் படிக்க இங்கே அழுத்தவும்.

 

One thought on “கோடையில் செடிகளை பராமரிப்பது எப்படி?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது