வெப்பமண்டல குடுவை செடிகள் – நேபென்தெஸ் இனங்கள்

Spread the Green love!

#புதியதோர்_தாவரம்_அறிவோம்_தொடர்_08

#வெப்பமண்டல_குடுவை_செடிகள்

இந்த உலகில் நாம் அறியாத பல செடிகள் இருக்கின்றன. இந்த புது தொடரின் மூலம் அப்படிப்பட்ட செடிகளை பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.

அப்படி நாம் இன்று பார்க்க இருக்கும் அதிசய செடி ‘வெப்பமண்டல குடுவை செடி’!

ஒருவர் வெப்பமண்டல காடுகளுக்கு சென்றால் இவற்றில் குரங்குகள் தண்ணீர் குடிப்பதையும், ஏன் சில சமயம் எலிகள் இதனுள் பாதி செரிமானம் ஆகி கிடப்பதையும் பார்க்கலாம். அப்படி என்ன செடி தான்யா இது? என கேட்கிறீர்களா? இவை தான் வெப்பமண்டல குடுவை செடிகள்(tropical pitcher plant) . இவற்றில் 150 கும் மேற்பட்ட வகைகள் இது வரை கண்டறியப்பட்டுள்ளன. இவை சுமத்ரா, போர்னியோ மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் வனப்பகுதிகளில் காணப்படுகின்றன.

சரி அந்த எலியை பற்றி இன்னும் பேசவில்லையே! என்று தானே யோசிக்கிறீர்கள்? அவை இவற்றின் உணவுகளில் ஒன்று. ஆம் இவை தன் குடுவை போன்ற அமைப்பிற்குள் வரும் பல்லிகள், சிலந்திகள், பூச்சிகள், வண்டுகள், புழுக்கள் என எல்லாவற்றையும் பிசுபிசுப்பான சாற்றால் சிக்க வைத்து செரிமானம் செய்து உண்கின்றன.

இவற்றின் ஒவ்வொரு இனமும் தன் சுற்றுசூழலுடன் தனிப்பட்ட உறவில் வாழ்கின்றன. உதாரணமாக இவற்றில் ஒரு வகை தச்சர் எறும்புகளுடன் கூட்டு வைத்துக்கொண்டுள்ளன. அவை இத்தாவரத்தால் உண்ணப்பட்டு மிச்சம் இருப்பவற்றை உண்கின்றன. இதனால் இந்த மிச்சங்கள் தாவரத்தை சுற்றிலும் அழுகி போய் இல்லாதவாறு பார்த்து கொள்கின்றன.

இவற்றில் மற்றும் சில இனங்கள் மூங்கணத்தான் (மூங்கில் அணத்தான் – tree shrew) இனங்களுக்கு கழிப்பிடமாகவும் செயல் படுகின்றது. இவற்றின் மலர்கள் மூங்கணத்தான்கள் உட்காரும் அளவுக்கு வசதியாகவும் அவற்றை ஈர்க்க ஒரு வகை வாசனை திரவியத்தை கசிக்கின்றன. அவற்றால் ஈர்க்கப்பட்டு இந்த மூங்கணத்தான்களும் தாங்கள் அழைக்கபட்ட வேலையை கச்சிதமாக செய்து முடிக்கின்றன. இந்த செடிகள் மூங்கணத்தான்களின் கழிவுகளை செரித்து அதிலிருந்து எக்கச்சக்க நைட்ரஜன் பெறுகின்றன. விசித்திரமான செடி அல்லவா?
நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் இந்த செடி நமது தொடரில் இடம் பெற எல்லா தகுதிகளும் வாய்ந்ததே!

இந்த பதிவு உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறோம். அடுத்த முறை வேறொரு வித்தியாசமான செடியுடன் உங்களை சந்திக்கிறோம். அதுவரை உழவு செய்து மகிழுங்கள்! நன்றி!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது