வீட்டிலிருந்தே மரம் நடுவது எப்படி?

Spread the Green love!

கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே நம் நிலை சற்று தாறுமாறாக தான் இருக்கிறது. எல்லாருக்கும் இந்த நாட்கள் எளிதாக இல்லை. பயமும், பதற்றமும், குழப்பமும் நம்மை தள்ளாட வைத்துகொண்டிருக்கும் இந்த சூழலில் நாம் நமது கோளை பற்றி மறந்தே விட்டோம் என தான் கூறவேண்டும்.

இந்த சர்வதேச பரவல்(Pandemic) நமக்கு நிறைய பாடங்களை கற்று தந்திருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது. தனிப்பட்ட முறையில் இந்த கோவிட்(Covid) என்னை, நம் பூமியை பிடித்திருக்கும் சில நோய்களை பற்றி சிந்திக்க வைத்திருக்கிறது. 2 ஆண்டுகளாக ஒரே கிருமியையே நம்மால் தாக்குபிடிக்க முடியவில்லையே, ஒரு நூற்றாண்டுக்கு மேலாய் நம் கோள் எவ்வளவு நோய்களை அனுபவித்து வருகிறது? அவை புற்றுநோய் போன்று அதன் நிலத்தையும், காற்றையும், நீரையும் அரித்துக்கொண்டு இருக்கிறதையும், பூமியின் மூச்சை திணற செய்து வருவதையும், எப்போதும் எல்லா உயிர்க்கும் உயிர் பயத்தை அளித்துகொண்டிருப்பதையும் நாம் சிந்திக்கிறோமா? என்ன தான் இருந்தாலும் நம் கோளுக்கும் உயிருள்ளது தானே?

இதற்காக இரண்டு உறுதிமொழிகளை ஏற்போம்:

 1. இவற்றை பற்றி சிந்திக்க சற்று நேரம் ஒதுக்குவது
 2. அதற்காக ஏதாவது ஒரு பொறுப்பை ஏற்பது

இந்த புவி தினத்தை பற்றியும் நீங்கள் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பதை பற்றியும் தெரிந்துகொள்ள earthday.org  என்ற இணையதளத்தை பார்க்கவும்

இந்த பொறுப்பை எளிதாக்க பின்வரும் தொகுப்பு உங்களுக்கு உதவும்.

வீட்டிலிருந்தே மரம் நட உதவும் முதல் 7 இணையதளங்கள்

நம் எல்லோருக்கும் பூமியின் நிலை பற்றி அக்கறை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் நடவடிக்கை எடுக்க தான் சரியான வழியும், நேரமும் அநேக நேரங்களில் அமைவதில்லை. அதுவும் இந்த கொரோனாவை வைத்துக் கொண்டு நம்மால் வெளியே எங்கு செல்ல முடிகிறது? இந்த பிரச்சனைகள் எல்லாம் இருக்க நாம் ஏன் நம் வீட்டிலிருந்தபடியே மரம் நடக்கூடாது? வீட்டில் தான் நாங்க இருக்கவே இடம் இல்லையே! அப்புறம் எங்க மரமெல்லாம் நடுவது என நீங்கள் யோசிப்பது எனக்கு புரிகிறது. ஆனால் நாம் வீட்டிலிருந்தபடியே வெவ்வேறு இடங்களில் மரம் நட முடிந்தால் எப்படி இருக்கும்? அப்படி  நாம் வீட்டிலிருந்தபடியே நம் பூமியை காக்க உதவும் சில இணையதளங்கள் இருக்கின்றன அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம் வாருங்கள்.

நீங்கள் நேரடியாக மரம் நடபோகிறீர்களா? உங்களுக்கு மரம் நடுவதன் அடிப்படை எல்லாம் தெரியுமா? அவற்றை பற்றி இங்கே தெரிந்துகொண்டு பின்னர் சரியாக நடலாம் வாருங்கள்

1. Grow trees.com

இந்த வலைதளம் எனக்கு மிகவும் பிடித்தது. இது தனி நபருக்கும், பெருநிறுவனங்ளுக்கும்(CSRக்கும்) ஏற்றது.

இத்தளம் அளிக்கும் விருப்பதேர்வுகள்(Options):

 • நீங்கள் உங்களுக்கென ஒரு கணக்கை அமைக்கலாம் அதில் நீங்கள் நடும் மரக்கன்றுகளை கணக்கு வைத்துக் கொள்ளலாம்.
 • இந்த தளத்தின் மூலம் நீங்கள் உங்களுடைய பிரியமானவருக்கு மரக்கன்றுகள் பரிசளிக்கலாம்.(அவர்கள் பெயரில் நடலாம்). அவர்களுடைய மின்னஞ்சலில் அவர்களுக்கு அதற்கான சான்றிதழ் சென்று விடும்
 • பிறந்த நாள், திருமண நாள் போன்ற சிறப்பு நிகழ்வுகளுக்கும், நினைவு நாட்களுக்கும் தனியே தோட்டங்கள் அமைக்கலாம். அவற்றில் மற்றவர்களை மரம் நடுமாறு அழைப்பு விடுக்கலாம்.
 • மாதாந்திர சந்தா மூலம் மாதாமாதம் தவறாமல் மரம் நடவும் வழி இருக்கிறது. இந்த மரங்களெல்லாம் உங்களுடைய மர வங்கியில் சேமிக்கப்படும், பிறருக்கு பரிசளிக்கும் போது அவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்
 • இது எல்லாவற்றுக்கும் மேலே இது மிக சிக்கனமான வலைதளம். ஒரு மரத்திற்கு ரூ.85 தான்! அது மட்டுமல்ல நீங்க ஒரே ஒரு மரம் கூட நடலாம்
 • இந்த தளத்தை நான் கொஞ்ச காலமாக பயன்படுத்தி வருகிறேன். நீங்களும் இன்றே துவங்கலாம்

2. Sankalptaru.org

இது எனக்கு பிடித்த மற்றொரு வலைதளம். இந்த தளத்தில் தான் நான் முதல்முறை இணையத்தில் மரம் நட ஆரம்பித்தேன். இதிலும் தனி நபரும், பெருநிறுவனங்ளும்(CSRகும்) பயன்படுத்திகொள்ளலாம்

இத்தளம் அளிக்கும் விருப்பதேர்வுகள்(Options):

 • உடனுக்குடன் நீங்கள் மரம் நடலாம்
 • இதில் நடப்படும் மரங்கள் எல்லாம் உழவர்களுக்கு னேரடியாக பயன் தரும் வகையில் தான் இருக்கும்
 • இதில் இந்தியா முழுவதும் அந்த நிறுவனத்தார் செயல்படுத்தும் திட்டங்களில் ஒன்றை தேர்வு செய்து அதில் நடமுடியும்
 • இந்த வலைதளத்தின் கைபேசி பயன்பாடு(Mobile App) மூலம் நீங்கள் நடும் மரங்களை கணக்கு வைத்துக்கொள்ளலாம். நடும் மரங்களெல்லாம் நம்முடைய தனி வனமாக(Forest) அதில் பராமரிக்கப்படும் (உங்களுக்கென ஒரு தனி வனம், அதுவும் நீங்கள் உருவாக்கிய வனம் என்றால் கேட்கவே நன்றாக தான் இருக்கிறது அல்லவா?)
 • நடும் மரங்கள் எங்குள்ளது என வரைபடத்தில் (Map) பயன்பாட்டின் (App) மூலமாக பார்க்கலாம்.
 • நீங்கள் நட்ட மரக்கன்றின் புகைப்படத்தை நேரடியாக உங்கள் சமூக வலைதள கணக்குகளில் பகிரலாம். மற்றவருக்கும் ஊக்கமளிக்கலாம்

3. Tree-Nation.com

இது இணையத்தின் மூலம் மரம் நட உதவும் மற்றுமொரு தளம். இதன் சிறப்பு என்னவென்றால் இந்த தளத்தில் நீங்கள் உலகளவில் பல நாடுகளில் மரம்  நடலாம்.

இத்தளம் அளிக்கும் விருப்பதேர்வுகள்(Options):

 • உலகளவில் இந்த தளத்தினர் செயல்படுத்தி வரும் திட்டங்களுள் ஒன்றை தேர்ந்தெடுத்து அதில் பங்கேற்கலாம்
 • இதிலும் ஒரு மரம் கூட நீங்கள் நடலாம்
 • இந்த தளத்தின் இன்னுமொரு தனி சிறப்பாக நீங்கள் நடப்போகும் மரமானது அந்த பகுதிக்கு என்னென்ன விதத்திலெல்லாம் பயன்பட போகிறது என தெரிந்து கொள்ளலாம்
 • இந்த தளத்திலும் மாதந்திர சந்தா வசதி உள்ளது
 • இதிலும் நீங்கள் மரங்களை உங்களுக்கு வேண்டியவருக்கு பரிசளிக்கலாம்

4. Team Trees.org

சென்ற ஆண்டில் இணையத்தையே கலக்கிய ஒரு குழுமத்தினர் தான் இவர்கள். 2 கோடி மரங்கள் ஒரு ஆண்டில் நட திட்டம் செய்து வலைஒளியின்(YouTube) மூலம் அநேக பிரபலங்களுடன் கைகோர்த்து சென்ற வருடம் மட்டும் 2,28,54,718 மரங்களை வெற்றிகரமாக உலகெங்கும் நட்டிருக்கின்றனர்.

இத்தளம் அளிக்கும் விருப்பதேர்வுகள்(Options):

 • இதிலும் உலகெங்கிலும் அவர்கள் செயல்படுத்தி வரும் திட்டங்களிலிருந்து நீங்கள் தேர்வு செய்யலாம்
 • ஒரு மரம் நட $1 தான் ஆகும்
 • மரம் தவிர வேறு பல விற்பனை பொருட்களையும் (Merchandise) காடு வள்ர்ப்பிற்காக அவர்கள் விற்கின்றனர்
 • இவர்கள் பெரிய நிறுவனங்களான டிஸ்கொவெரி சேனல்(Discovery Channel), வெரிசான் (Verizon) போன்றவர்களோடு இணைந்து நிறைய மரம் நடுகின்றனர்.

5. One Tree Planted.org

வீட்டிலிருந்தே மரம் நட உதவும் மற்றொரு தன்னார்வ தொண்டு நிறுவனம் இது

இத்தளம் அளிக்கும் விருப்பதேர்வுகள்(Options):

 • இந்த நிறுவனமும் உலகளவில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது
 • ஒரு டாலர்- ஒரு மரம்(One-Tree – One-Dollar) என்கிற கொள்கை இவர்கள் வைத்துள்ளனர்
 • இவர்களது முக்கிய நோக்கம் உலகளாவிய காடு வளர்த்தல் தான்
 • இந்த சர்வதேச பரவலிலும் இவர்கள் 1 கோடி மரம் நட்டு, 28 நாடுகளில் சுமார் 15,928 ஹெக்டர்களை மீண்டும் காடுகளாக்கி இருக்கின்றனர்

6. WWF-India.org

இந்த தளத்தை பற்றி அநேகர் கேள்விபட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. இந்த தன்னார்வ நிறுவனம் 1961 இலிருந்து இயங்கி வருகிறது

இத்தளம் அளிக்கும் விருப்பதேர்வுகள்(Options):

 • இந்த தளத்தில் ஒரு மரத்தை அதன் வாழ்நாள் முழுக்க நீங்கள் தத்தெடுத்து கொள்ளலாம்.
 • அதுமட்டுமல்லாது நீங்கள் வாழும், நாடு, மாநிலம், சில வேளை ஊர் வரை கூட நீங்கள் தேர்ந்தெடுத்து அங்குள்ள மரங்களை தத்தெடுக்கலாம்
 • இந்த தளத்தில் மரங்களை மாத்திரம் இல்லை வனவாழ் உயிரினங்களையும் நீங்கள் பாதுகாக்க வீட்டிலிருந்தே உதவலாம்

7. Green Yatra.org

இந்தியாவில் நீண்ட காலமாக மரம் வளர்ப்பு சம்பந்தமான வேலைகளில் ஈடுபட்டு வரும் தன்னார்வ நிறுவனங்களுள் இதுவும் ஒன்று

இத்தளம் அளிக்கும் விருப்பதேர்வுகள்(Options):

 • அவர்களது மரம் நடும் நிகழ்ச்சிகளை அறிந்து அதில் பங்கேற்கலாம்
 • அந்த நிகழ்ச்சிகளுக்கு உங்களால் முடிந்த பொருளுதவி செய்யலாம்
 • ஆனால் இந்த தளத்தில் மற்ற தளங்களை போல நீங்கள் தனியாக ஒரு மரம் நட முடியாது

என்ன மக்களே இந்த தகவல்கள் எல்லாம் பயனுள்ளதாக இருந்ததா? இருந்ததானால் கையோடு கையாக ஒரு மரம் நட்டுவிடுவோமே! நம்மை தாங்கும் நம் பூமிக்காக நாம் செய்யாமல் வேறு யாரு செய்ய போறாங்க?

இதை தவிர உங்களிடம் வேறு ஏதேனும் தளங்கள் இருக்கிறதா? அனைவருக்கும் அது பயன்தர கமெண்டில் அதை தெரியப்படுத்துங்கள். ஏதேனும் சந்தேகங்களோ, கேள்விகளோ இருக்கிறதா? தொடர்பு பக்கத்தின் மூலமாகவோ, இடப்பக்கத்திலுள்ள WhatsApp Iconஐ கிளிக் செய்தும் என்னை தொடர்பு கொள்ளலாம்.

குறிப்பு: இந்த தளங்களுடைய பெயர்களை அழுத்தினாலே அந்த தளத்திற்கு நேரடியாக போய்விடலாம்

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் சுற்றத்திற்கு இதை பகிர்ந்து ஆர்கானிக் பசுமை அன்பை பரப்பலாமே!

ஒன்றாய் விதைப்போம்! ஒன்றாய் வளர்வோம்! நன்றி

இது ஒரு இரு மொழி பதிவு. To read this post in English click here!

உங்கள் அனைவருக்கும் இனிய புவி தின வாழ்த்துக்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது