மழைக்காலம் தொடங்கி விட்டது. என்னை எளிமையாக வளர்க்ககூடிய பூச்செடிகள் பற்றி ஒரு பதிவிடுமாறு அநேகர் கேட்கின்றனர். நான் பூச்செடிகளை பற்றி பதிவிட்டு கொஞ்சம் நாளாகி விட்டது. பூக்களைப் பற்றி பேச மழைக்காலத்தை விட நல்ல சமயம் எங்கே இருக்கு? மழைக்காலத்தில் காலையில் மப்பும் மந்தாரமுமான நேரத்தில் ஒரு பூச்செடியிடத்தில் சென்று அதன் பூக்களை ரசிக்க சற்று நேரம் எடுத்தால் தான் தெரியும் அதில் பட்டும் படாமல் ஒட்டிக்கொண்டிருக்கும் மழைத்துளிகளின் அழகு. முயற்சி செய்து தான் பாருங்களேன்!
மழையில் நம் தோட்டத்தில் புது துளிர்கள் எட்டிப்பார்த்து நம் உள்ளங்களை உருக்க, கூடவே ஆங்காங்கே ஓவியம் போல் மலர்களால் வண்ணங்கள் தீட்டினால் எப்படி இருக்கும்? இதெல்லாம் மனதில் வைத்து இந்த பதிவில் எனக்கு வந்த வேண்டுகோள்களுக்கும் இணங்க மழைக்காலத்தில் உங்கள் தோட்டங்களை அலங்கரிக்க கூடிய சில எளிதான பூச்செடிகளை பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்ள போகிறேன்.
பால்சம்
இது எனக்கு மிகவும் பிடித்த பூச்செடி. எளிதில் உடையும் கிளைகளை கொண்ட இது, மிகவும் வலுவானது தான். குழப்புகிறேனா? இதற்கென்று நீங்கள் எதுவும் மெனக்கெட வேண்டியதில்லை. இதனை நட்டு நீர் ஊற்றினால் மட்டும் போதும், அது தன் வேலையை பக்காவாக செய்யும். இதன் பூக்கள் இரண்டடுக்கு கொண்டதாயும், இலைகளால் மறைந்திருப்பதாயும் இருக்கும். பால்சமில் அநேக நிறங்கள் உள்ளது. இவை வெள்ளை, சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், ஊதா மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களிலும் கிடைக்கும்.
இதன் அழகை ரசிப்பதோடு உங்களுக்குள் ஒளிந்திருக்கும் அந்த குட்டி குழந்தையை கொஞ்சம் வெளியே கொண்டுவந்தால் என்ன? இவை பூத்த பின்னர் பலூன் போன்ற விதைகளையுடைய சிறிய காய்களை பிறப்பிக்கும். அது விதைகளை வெடிப்பதன் மூலமாய் பரப்பும்(இதை உடைப்பது ஜாலியாக இருக்கும்). சின்ன வயதில் பள்ளி முடித்து வீடு வரும் வழியில் ஒரு வீட்டில் பால்சம் தோட்டமிருக்கும். தோட்டம் முழுவதும் அடுக்கடுக்காய் பல நிறங்களில் இவை இருப்பதை கற்பனை செய்து பாருங்கள். அவ்வளவு அழகாய் இருக்கும். அதை பார்த்த்திலிருந்து தான் பால்சம் வளர்க்க தொடங்கினேன். (அந்த வீட்டு தாத்தா விடம் கெஞ்சி கூத்தாடி பால்சம் விதைகளை வாங்கினேன். அழகான நினைவுகள்!)
சாமந்தி
இந்த சாமந்தி எளிதாக வளர கூடிய செடி. பொதுவாக இந்த செடி வெய்யில் காலங்களில் தான் நன்றாக பூக்கும். ஆனால் இவற்றை விதைப்பதற்கு ஏற்ற காலம் மழைக்காலம் தான். இதன் விதைகளை பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள். பூக்களின் இதழ்களை பிய்த்து தூவினாலே சில நாட்களில் செடி வந்து விடும். இவை மழைக்காலங்களிலும் பூக்கும். பூக்கும் போது அந்த செடியே அழகாய் இருக்கும்.
செம்பருத்தி
செம்பருத்தி வருடம் முழுக்க பூக்கக்கூடியது. ஆனால் இவை மழைக்காலங்களில் பூக்கும்போது சுற்றி இருக்கும் மந்தாரமான சூழலில் இன்னும் கொஞ்சம் துடிப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். இவற்றின் கொடை போன்ற அமைப்பிலிருந்து மழைத்துளிகள் துளி துளியாய் சொட்டுவதை விட மழைக்காலத்தை ரசிக்க வேறு பெரிய காட்சி இருக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் இப்போதெல்லாம் எக்கசெக்க ரகங்கள் இவற்றில் கிடைக்கின்றன.
தங்க அரளி
தற்போது மிகவும் பிரபலமாகி வரும் இவை வருடம் முழுவதும் பூக்கக்கூடியது. மழைக்காலங்களில் புதிதாய் நிறைய துளிர்கள் முளைப்பதால் கொஞ்சம் அதிகம் பச்சை பசேலென இருக்கும். அந்த பசுமை திரையில் அங்கங்கு கொத்து கொத்தாய் பளிச் மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூத்து கிடக்கும்.
அழகிற்கு இன்னும் அழகு சேர்க்க இயற்கையே கொஞ்சம் நீர் தெளித்தது போலிருக்கும். இவை பெரிதாய் மரங்களை போல வளரும். இவற்றை வீட்டு வாசலிலும் வைக்கலாம். இவை கடினமான செடிகள். இவை மிகவும் எளிதாக வளர்வதால் தெருக்களில் இவற்றை வைத்து விடுகின்றனர்.
பட்டன் ரோஜா(சிறிய ரோஜாக்கள்)
அள்ளி அள்ளி தரும் செடிகளுள் பட்டன் ரோஜாக்களும் ஒன்று. இவைகள் ரோஜாக்களை போன்றவை தான். என் அம்மா பெங்களூரிலிருந்து வரும் வழியில் ஒரு பட்டன் ரோஸ் செடியை வாங்கி வந்தார். நாங்கள் அதை மாடியில் ஒரு தொட்டியில் வைத்திருந்தோம். மழைக்காலத்தில் பூத்துக்கொட்டும் இந்த செடியை பார்ப்பதற்கே எதோ பூங்கொத்து போல இருக்கும்.
சிறிய பட்டன் ரோஜாக்களை வளர்ப்பது எப்படி, எப்படி பராமரிப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பட் ரோஜாக்கள்(Potrulaca)
நான் முதன்முதலில் வளர்த்த செடி இது தான். நம்மில் அநேகர் இதை வளர்த்திருப்போம். உண்மையில் இது சக்குலண்ட்(Succulent) என அழைக்கப்படும் சதைப்பற்றான தாவர வகையை சார்ந்தது. இதன் இலைகளை பார்த்தால் அது உங்களுக்கு புரியும். இவற்றின் பூக்கள் மிகவும் அழகானவை.
இவற்றை சுவற்று தொட்டிகளிலும், தொங்கும் தொட்டிகளிலும், தோட்டங்களிலும் வளர்க்கலாம். அவற்றுக்கு அவ்வளவு அக்கறை எடுக்கவும் தேவையில்லை. இவற்றில் அநேக ரகங்கள் இருக்கின்றன. யாரிடமாவது கேட்டு ஒரு கிளையை வாங்கி நட்டு வைத்துவிட்டால் போதும்.
இது ஒரு சின்ன லிஸ்டாக இருக்கலாம் ஆனால் இவை நான் வளர்த்தவைகளில் மிகவும் எளிதானவை. எனவே யோசிக்காமல் இவற்றை பரிந்துரை செகிறேன்.
உங்களிடம் மழைக்காலத்தில் பூக்கும் செடிகள் ஏதாவது இருக்கிறதா?
அனைவருக்கும் அது பயன்தர கமெண்டில் அதை தெரியப்படுத்துங்கள். ஏதேனும் சந்தேகங்களோ, கேள்விகளோ இருக்கிறதா? தொடர்பு பக்கத்தின் மூலமாகவோ, இடப்பக்கத்திலுள்ள WhatsApp Iconஐ கிளிக் செய்தும் என்னை தொடர்பு கொள்ளலாம்.
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் சுற்றத்திற்கு இதை பகிர்ந்து ஆர்கானிக் பசுமை அன்பை பரப்பலாமே!
ஒன்றாய் விதைப்போம்! ஒன்றாய் வளர்வோம்! நன்றி
இது ஒரு இரு மொழி பதிவு. To read this post in English click here!