மணி பிளான்டை தண்ணீரில் வளர்ப்பது எப்படி? பராமரிப்பது எப்படி? – ஒரு வழிகாட்டி

Spread the Green love!

மணி பிளான்ட்  (போதோஸ்) வளர்ப்பது என்பது மிகவும் எளிதானது. இந்த செடியை நிறைய பார்த்திருப்பீர்கள். ஆனால் இந்த செடியை வீட்டிற்குள்ளும் வளர்க்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? அதுவும் வீட்டிற்குள் மிகவும் குறைவான வெளிச்சத்தில், தண்ணீரிலேயே வளரும் ஒருசில செடிகளுள் இதுவும் ஒன்று.

பொதுவாக இவற்றை வளர்ப்பது எளிதாக இருந்தாலும் நான் அநேக முறை இத்தாவரத்தை வளர்க்கும் பேரில் கொன்றுள்ளேன். எனவே இந்த பதிவில் போதோஸ் வளர்ப்பில் என்னென்ன செய்ய வேண்டும்? என்னென்ன செய்யக்கூடாது? எது வேலை செய்யும் என்பதை பற்றியெல்லாம் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

(உலகளவில் இச்செடியினை போதோஸ் என்ற பொது பெயரிலேயே அழைக்கின்றனர். இதை நம் பயன்பாட்டிற்கு கொண்டு வர இந்த பதிவு முழுதும் மணி பிளான்டிற்கு பதிலாக, போதோஸ் என்கிற பெயரிலேயே இத்தாவரம் விவரிக்கப்பட்டுள்ளது. இப்படி அறிவியல் பெயரையும், உலக பொது பெயர்களையும் நாம் தெரிந்து கொள்வது மிக அவசியம்.)

இச்செடியை நீங்கள் வளர்க்க முடிவேடுத்ததும் எந்த சூழல் இதற்கு தகுந்தது என்பதை சோதனை செய்து தான் தெரிந்து கொள்ள முடியும். சோதனை முயற்சி என்பதால் இதனை செலவில்லாமல் செய்ய முயல்வோம்.

https://www.instagram.com/p/B1mUsClA24n/?igshid=1e02clecukp22

இதற்கு தேவையெல்லாம் ஒரு கண்ணாடி பாட்டில், தண்ணீர், கடைசியாக அக்கம் பக்கத்திலோ, நண்பர்களிடத்திலோ ஒன்றிரண்டு போதோஸ் கொடிகளை கேட்டு வாங்குங்கள். அப்படி உங்களுக்கு மற்றவர்களிடம் கேட்க சங்கடமாயிருந்தால் அருகிலுள்ள நர்சரியில் கோல்டன் போதோஸினை(Golden Pothos – நாம் சாதாரணமாக காணும் மணி பிளான்ட்) வாங்கி கொள்ளுங்கள் . இது தற்போது ₹20-50 வரை விற்க படுகிறது.

https://www.instagram.com/p/B0geCdlpZe8/?igshid=1k5rvbhoomo2z

அவ்வளவு தான் சோதனை ஓட்டத்தில் களமிறங்கலாம் வாருங்கள்!

 • கிடைத்த கொடியின் அடிப்பாகத்தில் காணப்படும் கணுக்கு பக்கத்தில் கொடி வெட்டப்பட்டிருக்கிறதா என உறுதி செய்து கொள்ளுங்கள். அப்படி இல்லையேல் அப்படி நறுக்கிக்கொள்ளுங்கள்.
 • அந்த அடி கணுவிலிருந்து மேலாக உள்ள 2-3 இலைகளை வெட்டி விடுங்கள்.
 • பின் அந்த கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் நிரப்பி இந்த கொடியின் துண்டுகளை அதில் சொருகி வையுங்கள்.
 • அவ்வளவு தான்

இவ்வளவு தானா? இதற்கா இவ்வளவு அலப்பறை? என்கிறீர்களா? இனிமேல் தான் முக்கியமான கட்டத்திற்குள் வரப்போகிறோம். இங்கு தான் நாம் சின்ன விஷயத்தில் தவறி விடுவோம்.

தவறும் பகுதி:

நீரில் வைத்த சில நாட்களில் கணுக்களிலிருந்து வேர்கள் முளைக்க தோன்றும். ஆனால், இந்த செடி தான் வெளிச்சம் குறைவான இடத்திலேயே நன்றாக வளருமே என்று அந்த கொடி துண்டங்களை வெளிச்சம் இல்லாத இடத்தில் வைத்தீர்களானால் அவ்வளவு தான். சிறிது சிறிதாய் மொத்த செடியும் அழுக ஆரம்பித்து விடும். எனக்கு நடந்ததில் இதுவும் ஒன்று.

பொறுமை காக்கும் பகுதி:

சரி நீங்கள் சொன்ன மாதிரியே எல்லாவற்றையும் செய்து விட்டேன், வேர்களும் நன்கு வளர்ந்து விட்டது. என்னிடம் தொட்டி இருக்கிறது அதற்கு இதனை மாற்றினால் நன்கு வளரும் என நம்பி ஒரு ஆர்வத்தில் அப்படி செய்யாதீர்கள். இது தான் நான் செய்த அடுத்த தவறு.

 • வேர் முளைத்து விட்டதா? சரி பரவாயில்லை மண்ணில் அதை இடம்மாற்ற இன்னும் கொஞ்சம் பொறுங்கள்
 • வேர்கள் நன்கு வளரட்டும், முதிர்ச்சி அடையட்டும்.
 • கிளை வேர்களும் முளைத்து நன்கு வளரட்டும்.
 • இப்போது அதை மண்ணில் இடம் மாற்றலாம்.

ஆரோக்கியம் மிக முக்கியம் அமைச்சரே:

முதன் முதலில் எனக்கு ஒரு கொடி துண்டு கிடைத்ததும் மிகவும் உற்சாகம் அடைந்தேன். எந்த அளவிற்கென்றால் அந்த முயற்சி தோற்றதும் செடி வளர்க்கவே நமக்கு தகுதியில்லை என்கிற எண்ணம் வரும் அளவுக்கு. உங்களுக்கும் முதன் முதலில் செடி வளர்க்கும் போது அது நன்றாக வளர வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதற்கு தான் இந்த பகுதி.

 • கொடி துண்டு பெறும்போது, அந்த கொடி ஆரோக்கியமானதாய் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
 • ஏனென்றால் எந்த ஒரு செடியையும் வெட்டி, வேர் வர வைக்க தண்ணீரில் வைக்கும்போதும், அதை நாம் வேர் விட்டாலொழிய பிழைக்க முடியாது என்னும் கடைசி கட்டத்திற்கு தள்ளுகிறோம். ஆனால் அந்த செடி ஏற்கனவே ஆரோக்கியமில்லாமல் அழுத்தத்திற்குள்ளாகி இருந்தால், நாம் கொடுக்கும் அழுத்தத்தையும் அது தாக்கு பிடிப்பது என்பது கொஞ்சம் சிரமம் தான்.
 • அப்படியே அவை வேர் விட்டாலும் போதிய சத்தில்லாமையால் இறந்து விட வாய்ப்பிருக்கிறது.
 • எனவே ஆரோக்கியமானதும், நிரம்ப முதிர்ந்ததும், நிரம்ப இளசுமான கொடியாய் இல்லாமல் இரண்டிற்கும் இடையில் இருக்கும் கொடியின் துண்டுகளை தேர்வு செய்யுங்கள்.
 • அப்படி வெட்டும் போது ஒரு துண்டில் குறைந்தது மூன்று கணுக்களாவது இருப்பது நல்லது.

இவை தான் வீட்டில் தண்ணீரில் மணி பிளான்ட் வளர்க்க ஆசைப்படும் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கிய புள்ளிகள். இப்போது இத்தாவரத்தை எப்படி தண்ணீரில் வளர்ப்பது எப்படி பராமரிப்பது என்பதை பற்றிய விரிவான வழிகாட்டியை பார்ப்போம்.

தண்ணீரில் போதோஸை வளர்ப்பது எப்படி?

ஒரு கண்ணாடி ஜாடியையோ, குடுவையையோ, பாட்டிலையோ எடுத்துக்கொள்ளுங்கள்

இந்த பாத்திரம் என்னவாக வேண்டுமானலும் இருக்கலாம். இது சோதனை ஓட்டம் என்பதால் வீட்டிலுள்ள பழைய கண்ணாடி ஜாடிகளையோ, பாட்டில்களையோ, ஊறுகாய் வரும் பாட்டில்களையோ நன்கு சுத்தம் செய்து உபயோகித்து கொள்ளலாம்.

எதை பயன்படுத்தினாலும் அது தெளிவானதாக (ஒளி புகக்கூடிய தன்மை) இருந்தால் கணுக்களிலிருந்து வேர்கள் முளைப்பதை கொஞ்சம் கொஞ்சமாய் பார்த்து ரசிக்கமுடியும். முயற்சித்து பாருங்கள். அதன் சுகமே தனி! வேர்கள் முளைத்தபின்  கலர் கண்ணாடி பாத்திரங்களையும் பயன்படுத்தலாம். இது பாசி பிடிக்காமலிருக்க உதவும்.

https://www.instagram.com/p/Bz5XI6rnzn3/?igshid=1rwm1z45ezdvq

கண்ணாடி பாட்டிலில் சுத்தமான தண்ணீரை நிரப்புங்கள்

இதற்கு பொதுவாக குழாய் தண்ணீரையோ, போர்(ஆழ்துளை கிணறு) தண்ணீரையோ பயன்படுத்தலாம். ஆனால் அதில் நிறைய உப்புகளும், குளோரினும் இருந்தால் அந்த தண்ணீரை தவிர்ப்பது நல்லது.

நான் குழாய் தண்ணீரை ஓரிரு நாட்கள் காற்றார விட்டுவிட்டு பயன்படுத்துகிறேன். அப்படி காற்றார விட்டால் அதில் இருக்கும் குளோரின் ஆவி ஆகி விடும்.

உரமிடுங்கள்

பொதுவாக இதற்கு தண்ணீர் மட்டுமே போதும். ஆனால் உரம் சேர்ப்பதுசெடியை நன்கு செழிப்பாக வளர செய்யும் என்பதால், திரவ உரம் சேர்ப்பது நல்லது. இவ்வகை உரம் நர்சரிகளில் கிடைக்கும்.

இதை வீட்டிலேயே எப்படி தயார் செய்வது என்னும் பதிவை விரைவில் பதிவிடுகிறேன். இலைகளை சொருகுமுன் சில துளிகள் உரம் சேர்ப்பது நல்லது. இல்லையென்றாலும் பரவாயில்லை. இப்படி மாதம் ஒரு  முறை உர உணவு அளிப்பது நல்லது.

செடியை நீரில் வையுங்கள்

நீங்கள் வெட்டி வைத்திருக்கும் கொடி துண்டுகளை நீரில் இப்போது சொருகலாம். அதன் அடிபாகமும், அடி கணுக்களும், நீரில் நன்கு மூழ்கி இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். சில வாரங்கள் பொறுத்த பின், வேர் நன்கு வளர்ந்திருப்பதை நம்மால் காண முடியும்.

வேர்கள் பெரிதாய் வளர்ந்த பின் புதிய கிளைகளும், இலைகளும் முளைத்து வளர துவங்கும். அடிக்கடி நீரின் அளவு குறைந்து வேர்கள் வேளியே தெரிகிறதா? என பார்த்து நீர் நிரப்புவது நல்லது. இது நீர் மட்டத்தை காப்பதுடன் ஆக்சிஜன்(பிராண வாயு) இருப்பையும் புதுப்பிக்கும். (ஆம் வேர்களுக்கு சுவாசிக்க ஆக்சிஜன் தேவை)

வாரம் ஒரு முறையோ இரு வாரத்திற்கு ஒரு முறையோ தண்ணீர் மாற்றுங்கள்

முன்னமே சொன்னது போல் தண்ணீரில் காலப்போக்கில் ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டே வரும். எனவே நீரை மாற்றுவது வேர்கள் சுவாசிக்கவும், அவை அழுகாமல் காக்கவும் உதவும்.

வேர்கள் நீரில் மூழ்கி இருக்கிறதா? என உறுதி செய்யுங்கள்

சில வேர்களோ, அல்லது வேரின் ஒரு பகுதியோ நீருக்கு மேலே இருக்கலாம். அதுவும் பிரயோஜனமானது தான். ஆனால், பெரும்பகுதி வேர்கள் நீரில் இருக்குமாறு பார்த்துகொள்வது மிக முக்கியம். இது பெரிய வேலை இல்லை. கண்ணாடி பாத்திரம் என்பதால் நீர் மட்டம் குறைவதை, நேரடியாக பார்க்க முடியும். அப்போது சிறிது தண்ணீர் ஊற்றுங்கள்.

பாசியை சுத்தம் செய்யுங்கள்

அதிக நாட்கள் நீரை மாற்றாமல் இருந்தாலோ, நீர் மாற்றும் போது பாத்திரத்தை சுத்தம் செய்யாவிட்டாலோ பாசி பிடிக்க தொடங்கி விடும். பாசி பிடித்தால் அது செடியின் அழகை கெடுப்பதுடன், நீரிலுள்ள ஆக்சிஜனையும் அவையே உறிஞ்சுக்கொள்ளும்.

இதை கட்டுப்படுத்த, சிறந்த வழி வாரம் ஒருமுறை நீர் மாற்றி, பாத்திரத்தை சுத்தம் செய்வது தான். பாத்திரத்தை கதர் துணியாலோ, பழைய பல்துலக்கியாலோ(Tooth Brush) சுத்தம் செய்யலாம்.

குறிப்பு: பாசி வளர்வதை கட்டுப்படுத்த அடர் நிற கண்ணாடி பாத்திரங்களை பயன்படுத்துவதும் உதவும்.

போதோஸினை வேகமாக வளர வைப்பது எப்படி?

இந்த வெப்பமண்டல கொடி, இயற்கையாகவே வேகமாக வளரும் தன்மை கொண்டது. உலகின் சில பகுதிகளில் INVASIVE – படையெடுக்கும் தாவரமாக இது கருதப்படுகிறது. இருந்தும் வீட்டிற்குள் அதுவும் வெறும் தண்ணீரில் வளர்ப்பதால், கொஞ்சம் மெதுவாக தான் இவை வளரும்.

இவை வேகமாக வளர:

 • நிறைய மறைமுக சூரிய ஒளி(Indirect Sunlight) கிடைக்க செய்யுங்கள்
 • நிறைய ஒளி கிடைத்தால் இக்கொடி வேகமாக வளர்வதுடன், இலைகளில் இடையிடயே காணப்படும் மஞ்சள் நிற வடிவமைப்பு இன்னும் பெருகும். இதனை VARIGATED(வெரிகெட்டட்) வகை என கூறுகின்றனர்.
 • ஒருவேளை வெளிச்சம் குறைவான இடத்தில் வைத்தால், இலைகள் காலப்போக்கில் மஞ்சள் டிசைனை இழப்பதுடன், செடியின் வளர்ச்சியும் குன்றி விடும்.
 • அடிக்கடி நீர் மாற்றியும், உரமிட்டும், தண்ணீர் தரத்தையும், ஊட்டச்சத்து தரத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
 • இவ்வளவு வேலை செய்ய வேண்டுமா? என பயப்படாதீர்கள்! இவற்றை செய்யாமலும் இருக்கலாம் என்ன செடி வேகமாக வளராது.

போதோஸ் வளர்ப்பில் வரும் பிரச்சனைகள்

இலைகள் பழுப்பாய் மாறுதல்: இதற்கு அதிக வெளிச்சமோ, குறைந்த வெளிச்சமோ, ஊட்டச்சத்து குறைபாடோ, அசுத்த நீரோ காரணமாக இருக்கலாம்.

ஒன்றொன்றாய் சரி செய்து தான் என்ன பிரச்சனை என தீர்மானிக்க முடியும். அதற்காக தான் இதனை சோதனை ஓட்டம் என கூறுகிறேன்.

பாசி: இதற்கு முன் பார்த்தது போல அடர் நிற பாத்திரங்கள் பயன்படுத்துவதும், பாத்திரத்தை சுத்தம் செய்வதும் தான் இப்பிரச்சனைக்கு சிறந்த தீர்வு.

இலைகளின் வளர்ச்சி குன்றுதல்: வெப்பம் அதிகமோ/குறைவோ அல்லது ஊட்டச்சத்து குறைவோ காரணமாக இருக்கலாம்.

போதோஸ் பராமரிப்பு குறிப்புகள்:

மேற்கண்ட அனைத்தும் பராமரிப்பு குறிப்புகள் தான். இதை தவிர இதன் கொடிகள் நீண்டு வளரக்கூடியவை, அப்படி உங்களுக்கு அது வேண்டாம் என்றால் கொடியை வெட்டி, முதலிலிருந்து செயல்முறையை துவங்க வேண்டியது தான். ஒரு புது போதோஸ் செடி வந்து விடும்.

இதை தவிர வேறு எதாவது பிரச்சனைகள் உங்களுக்கு இருப்பின் அதை இடப்பக்கத்திலுள்ள WhatsApp ஐகானை கிளிக் செய்தோ அல்லது கீழே கமென்டின் மூலமோ தெளிவு படுத்தி கொள்ளுங்கள்.

உங்களிடம் இன்னும் அருமையான டிப்ஸ் உள்ளதா அனைவரும் அதில் பயனடைய, அதை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.

இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன். உங்களுக்கு இது பிடித்திருந்தால் இப்பதிவை உங்கள் சுற்றத்திற்கு பகிர்ந்து பசுமை அன்பை பெருக்க உதவுங்கள்.

இதுவரை நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கும் பாராட்டிற்கும் நன்றி.

இது ஒரு இருமொழி பதிவு. To read this post in English click here!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது