பீட்ஸ் என செல்லமாக அழைக்கப்படும் பீட்ரூட்கள் தித்திப்பான, ஆரோக்கியமான எதிர்- ஆக்சிஜனேற்றிகள்(Antioxidants) நிறைந்த காய்கறி ஆகும். இவற்றில் இருக்கும் புற்று நோய் தடுக்கும் தன்மையும், இருதயத்தை பாதுகாக்கும் தன்மையும் தரும் இவற்றின் சிவப்பு நிறத்திற்கு காரணம் இவற்றிலிருக்கும் அதிகபட்சமான எதிர்- ஆக்சிஜனேற்றிகள் தான். பீட்ரூட்கள் வளர்ப்பதற்கு எளிமையானவை. இதனாலேயே வீட்டு தோட்டங்களில் எளிமையாக வளர்க்கக்கூடிய முதல்10 காய்கறிகளுள் தொடர்ந்து தன் இடத்தை இது தக்க வைத்து கொண்டிருக்கிறது.
இவை ஈரமும், வளமும் கலந்த மண்ணில், சூரியவெளிச்சம் நிறைந்த பகுதியில் வளர விரும்புபவை. ஆனாலும் தொட்டிகளிலும், கொள்கலன்களிலும் இவற்றால் சுலபமாக தாக்கு பிடிக்க முடியும். கொள்கலன்களில் இவற்றை எப்படி வளர்ப்பது என்பதை பற்றி பின்வரும் பதிவுகளில் பார்ப்போம்.
வீட்டு காய்கறி தோட்டத்தில் கட்டாயம் இருக்கவேண்டிய பிரதான காய்கறியான இது உண்பதற்கு சுவையானது மட்டுமல்லாமல், நாம் முன் பார்த்தது போல் வளர்க்க மிக எளிமையானது. இவற்றை விதைகளிலிருந்தே எளிமையாக வளர்க்கலாம். இவற்றை அறுவடை செய்யவும் நிறைய நாட்கள் தேவைப்படாது.
இது எல்லாவற்றிற்கும் மேல் இவற்றை நம்மால் எளிமையாக அங்கக(Organic) முறையில் வளர்க்க முடியும். இந்த பதிவில் பீட்ரூட்களை அங்கக முறையில் வளர்ப்பது எப்படி என பார்ப்போம்.
என்னவெல்லாம் செய்ய வேண்டும்
விதைகள் அல்லது நாற்றுகளை தேர்ந்தெடுத்தல்: இவை நாற்றுபண்ணையிலும், விதை கடைகளிலும் எளிமையாக கிடைக்கும். இவற்றை விதைகளிலிருந்து வளர்ப்பது சுலபமானது.
விதங்கள்/ரகங்கள்: அறுவடை செய்ய உங்களிடம் நிறைய காலமிருந்தால் ‘போல்டார்டி’(Boltardy) என்கிற ரகம் உங்களுக்கு ஏற்றது. வெள்ளை மற்றும் தங்க நிற ரகங்கள் வளர இதின் பாதி நாட்கள் தான் எடுப்பதோடு சாலட்களில் இவை சிவப்பு நிறத்தை சிந்துவதில்லை. இவற்றை அல்லாமல் அநேக ரகங்கள் உள்ளது நம் சுவை மற்றும் இஷ்டத்தை பொறுத்து நாம் ரகத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.
சில நல்ல ரகங்கள் பின்வருமாறு:
- டெட்ராட் டார்க் /Detroit Dark Red(59 நாட்கள்)
- கிரிம்சன் கிலோப்/Crimson Globe(29 நாட்கள்)
- கிராஸ்பி எஜிப்டியன்/Crosby Egyptian (55 நாட்கள்)
- சியோகியா/Chioggia(55 நாட்கள்)
- ஃபார்மனோவா/Formanova(60 நாட்கள்)
- தங்க நிற ரகம்/Golden(55 நாட்கள்).
- லட்ஸ் கிரீன் லீஃப்/Lutz Green Leaf(80 நாட்கள்).
- போல்டார்டி /Boltardy (70 நாட்கள்)
இவற்றில் முதல் மூன்று ரகங்கள் இந்தியாவில் பொதுவாக வளர்க்க பரிந்துரைக்கப்படுபவை.
மண்ணை தயார் படுத்துதல்
பீட்ரூட்கள் ஈரப்பதமான, வளமான, நடுத்தரமான காரஅளவு (pH 6.5-7.0) கொண்ட மண்ணை விரும்பகூடியவை. அதிக களிமண்ணும், அதிக மணலும் இல்லாத மென்மையான மண் இவை வளர்வதற்கு தேவை. இருப்பினும், இவை மேல்புறமாக வளர்வதால் மேல் அடுக்கை மட்கிய பழைய அங்கக கழிவுகளை கொண்டு கலந்து தளர்வாக்கினால் களிமண்ணிலும் தாக்குபிடிக்க கூடியவை. இவற்றிற்கு நிறைய சூரிய வெளிச்சம் தேவை. ஆனால் பகுதி நிழலிலும் இவை தாக்கு பிடிக்கும்.
மண்ணை தயார் செய்ய அதனை சிறிது உழ வேண்டும்: களைகளையும், மற்ற குப்பைகளையும், கற்கள் ஏதாகிலும் இருப்பின் அவற்றையும் நீக்குவது முக்கியமானது. இவை பீட்ரூட்டின் வளர்ச்சியை தடுக்கும். ஒரு மண்வெட்டி ஆழம் மண்ணை உழுதால் போதும். உழுத பிறகு மண்ணை சமபடுத்தி மேல் அடுக்கை தளர்வாக வைத்துக்கொள்ள வேண்டும்.
உரமிடுதல்: உழும்போது மட்கிய எரு இடுவது போதுமானது. தொழுவுரம் இடுவதாயிருந்தால் வேதிபொருட்கள் தெளிக்கப்படாத அங்கக பொருட்களிலிருந்து தயார் செய்யப்பட்ட தொழுவுரத்தையே பயன்படுத்தவும். நைட்ரஜன் இலைகள் வளர உதவ கூடியவை. ஆனால் பீட்ரூடில் இது இலைகளை வளர்த்து வேரின் அளவினை பாதிக்கும். எனவே இந்த உரங்களில் அதிகம் நைட்ரஜன் இல்லாதவாறு பார்த்துகொள்ள வேண்டும்.
விதைப்பு
எப்போது விதைப்பது: இவற்றை எப்போது எந்த காலநிலையில், எந்த பருவத்தில் விதைப்பது என யோசிக்கிறீர்களா? கவலையே வேண்டாம், இவற்றை வருடம் முழுக்க எப்போது வேண்டுமானாலும் விதைக்கலாம்.
எப்படி விதைப்பது: விதைகள் முளைப்பதற்கு உதவுவதற்கு விதைப்பதற்கு முன் விதைகளை 24 மணி நேரம் நீரின் ஊறவைப்பது நல்லது. ஒரு குச்சியை வைத்து 2 செ.மீ ஆழத்திற்கு குழிசெய்து, ஒவ்வொரு குழியிலும் 2 விதைகள் விகிதம் போட வேண்டும். குழிகளுக்கு 10-15செ.மீ இடைவேளை இருத்தல் அவசியமானது. இவற்றை வரிசையில் விதைப்பது நல்லது.
ஒருவேளை பீட்ஸ்களின் இலைகளுக்காக மட்டும் இவற்றை வளர்ப்பதால் இருந்தால்(ஆம், வெறும் இலைகளுக்காக கூட இவற்றை வளர்க்கலாம்.), விதைகளை எல்லா திசையிலும் 1.5செமீ அல்லது ½ அங்குலம் இடைவேளை இருக்குமாறு விதைக்க வேண்டும்.
உங்களுக்கு நீண்ட காலத்துக்கு புதுமலர்ச்சியான பீட்கள் வேண்டும் என்றால், எல்லா மாதமும், மாதத்திற்கு ஒரு முறை என 20செமீ இடைவேளையில் புதிதாய் ஒரு வரிசையில் நட்டு வாருங்கள்.
விதைத்தபிறகு குழிகளை மூடி, நீரிட்டு, லேபிலிட்டுகொள்ளுங்கள்.
அவற்றை மெல்லியதாக்குங்கள்: நிறைய பீட்ரூட் விதைகள் கூட்டு விதைகள் ஆகும். அதாவது ஒரு விதையில் நிறைய விதைகள் இருக்கும். எனவே ஒரே குழியிலிருந்து அநேக செடிகள் முளைக்கும்.
பீட்ரூட் மீது முளைக்கும் இலைகள் 2 செமீ வளர்ந்ததும் பலவீனமான துளிர்களை கத்தரித்து விடுங்கள். ஒவ்வொரு செடிக்கும் 10 செ.மீ இடைவேளை வரும் வரை இப்படி தொடர்ந்து செய்ய வேண்டும். சிலபேர் சொல்வது போல இவற்றை கைகளால் பிடுங்காதீர்கள். அப்படி செய்வதனால் அருகிலிருக்கும் செடியின் வேரும் பாதிப்படைய வாய்ப்பிருக்கிரது. சிலபேர் செடிகளுக்கிடையில் 10செ.மீ க்கும் அதிகமான இடைவெளி இருத்தல் வேண்டும் என கூறுகின்றனர். உங்களுக்கு நிறைய இடம் இருக்குமானால் கொஞ்சம் அதிகம் இடைவெளி விடுவதானாலும் விடலாம்.
கீரைக்காக மட்டும் இவற்றை வளர்ப்பதாயிருந்தால் இந்த மெல்லியதாக்கும் செயல்முறையே தேவையில்லை.
பின்னலம் பேணுதல்(After Care)
இலைகள் முளைத்து வரும்வரை தண்ணீர் ஊற்றுங்கள்: தொடக்கத்தில் விதைகள் முளைப்பதற்கு நிறைய தண்ணீர் தேவைப்படுகிறது. முளைத்தபின் வேர்கள் மண்ணிலிருந்து ஈரத்தை உறிஞ்சி கொள்ளும். இதனால் நிறைய நீர் ஊற்றுவதை தவிர்க்க வேண்டும்.
அப்படி அதிகம் நீர் ஊற்றுவது, செடிகள் நிறைய இலைகளை வளரச்செய்து, வேரின் வளர்ச்சியினை குறைத்து, ‘போல்டிங்க் (bolting)’ என்னும் பூ பூக்கவைத்து பீட்ரூட் உண்டாகதவாறு தடுக்கும் செயல்முறைக்கு செடியை தள்ளி விடும். அதே சமயத்தில் குறைவான நீர் ஊற்றினால் மிருதுவான வேர்களை பிறப்பிப்பதற்கு பதிலாக கடினமான கட்டை போன்ற வேர்களை செடிகள் பிறப்பித்து விடும்.
அதனால் முளை வந்தவுடன், வறண்ட வானிலை இருந்தால் ஒழிய, 10-14 நாட்களுக்கு ஒரு முறை இவற்றிற்கு நீர் ஊற்றினால் போதுமானது. அதாவது மண்ணில் நன்கு ஈரப்பதம் போன பின்பே நீர் ஊற்ற வேண்டும்.
களை மற்றும் பறவைகளை குறித்து கவனமாயிருங்கள்: நீங்கள் வசிக்கும் இடத்தை பொறுத்து மிருகங்களிடமிருந்து இச்செடிகளை பாதுகாக்க ஏதாவது திட்டம் வகுத்து அவற்றை மூடி வைக்க வேண்டும். களைகளை பொறுத்தவரை, அவற்றை கையால் தான் நீக்க வேண்டும். ஒரு களை முளைப்பதை பார்க்கும்போதே அதை பிடுங்கி விட வேண்டும். அதற்கு மண்கிளரி() போன்ற கூர்மையான உபகரணங்களை உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது. அவை களைகளுடன் சேர்த்து பீட்ஸையும் சேதப்படுத்தி விடும். எனவே கைகளால் அவற்றை நீக்குவதே சிறந்தது.
அறுவடை மற்றும் சேமித்தல்
அறுவடை
பீட் ரூட்டின் ரகத்தை பொறுத்து அவற்றின் அறுவடை காலமும் வேறுபடும். பொதுவாக இவற்றை அறுவடை செய்ய விதைப்பிலிருந்து, சராசரியாக 50-90 நாட்கள் பிடிக்கும். ரகத்தை பொறுத்து சிறிய கோல்ஃப்(Golf) பந்து அளவிலிருந்து, டென்னிஸ் பந்து அளவு வரை அவை வளர்ந்திருக்கும்.
அறுவடை செய்ய மேலே இலைகளை பிடித்து மெதுவாய் மேலே இழுத்த வாறு வேர்களுக்கு கீழே முட்கரண்டியால்(Hand Fork) மென்மையாக தோண்டி விட வேண்டும்.
சிலர் மொத்தமாய் அறுவடை செய்யாமல், சிலவற்றை அறுவடை செய்து மற்றதை நன்கு முற்றும் வரை மண்ணிலேயே விட்டுவிடுவர். இப்படி செய்வதன் மூலம் அவை சீக்கிரமாய் முதிர்ச்சி பெற உதவலாம்.
மேலிருக்கும் இலைகளை கைகளால் திருகி எடுத்து விடலாம். கைகள் உபயோகிப்பதன் மூலம் பீட்ரூட்களிலிருந்து சாறு கசியாமல் தடுக்கலாம். ஆனால் கீரையை எரிந்து விடாதீர்கள், அவற்றில் எக்கசெக்க சுவை இருக்கும். அவற்றை பாலக் போன்று சமைத்து உண்ணலாம்.
சேமித்து வைத்தல்
வேர்வகை காய்கறிகளும், கிழங்குகளும் எளிதாக சேமித்து வைக்ககூடியவை. பீட்ரூட்களை மரப்பெட்டிகளில் மணல் அடுக்குகளுக்கிடையே சேமித்து வைக்கலாம். பெட்டியை உலர்வான இடத்தில் வைப்பது முக்கியமானது.
இதை செய்ய ஒரு மரகொள்கலனை எடுத்து அடிபாகத்தில் 5 செ.மீ வரை மணலால் நிரப்ப வேண்டும். பின் ஒரு அடுக்கு பீட்ரூட்களை அடுக்கி வைக்க வேண்டும். பின்னர் திரும்பவும் மணல் கொட்ட வேண்டும். இப்படி இந்த செய்முறையை திரும்ப திரும்ப கொள்கலன் நிறையும் வரை செய்ய வேண்டும். உள்ளிருக்கும் மணல் அவற்றை முளைக்காமல் காப்பதோடு, அவற்றின் ருசியையும் கசியாமல் பாதுகாக்கும்.
இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்திருக்கும் என நம்புகிறோம். இதை போன்ற இன்னும் சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து எங்கள் வலைதளத்துடன் தொடர்பில் இருங்கள். புது பதிவுகளை பற்றி மின்னஞ்சல் பெற எங்கள் வலைதள செய்தி மடலுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, சந்தேகங்களோ இருந்தால் அதனை கமென்டில் தெரிய படுத்துங்கள். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இதை உங்கள் நண்பர்களுக்கும், அன்பானவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். நினைவிருக்கட்டும் ‘பகிர்தலே அக்கறை காட்டுதல்’
நன்றி! பயிரிட்டு மகிழுங்கள்.
To read this in English click here.