பிரண்டையின் 18 முக்கிய மருத்துவ குண நலன்கள்

பிரண்டையின் 18 முக்கிய மருத்துவ குண நலன்கள்
Spread the Green love!

#மூலிகை_05

பிரண்டையை பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். நாம் அனைவருக்கும் தெரிந்திருக்கும் இந்த மூலிகை தாவரத்தை பற்றி உண்மையில் நமக்கு எவ்வளவு தெரியும்? அண்மையில் நான் ஒரு விபத்தில் சிக்கினேன். என் அம்மா இந்த மூலிகையைப் பற்றி அறிந்து, இதனை ஊரிலிருக்கும் எங்கள் சொந்தங்கள் மூலமாக அடிக்கடி கொண்டுவர செய்து எனக்கு சமையல் செய்து கொடுத்தார். அப்போது இது உடைந்த எலும்புகளை குணப்படுத்துவதற்கு மிகவும் உதவும் என கூறினார்.

இதையும் மற்ற இயற்கை மருத்துவ உணவுகள் பலவும் உண்டதாலும், கடவுளின் கிருபையினாலும் மருத்துவர்களே ஆச்சரியப்படும் அளவுக்கு வேகமாக என்னால் குணமடைய முடிந்தது. இதை உண்ணத்தகுந்ததாக மாற்றும் பெரும் பொறுப்பு வீட்டிலுள்ள சமையல் சாம்பியன்களிடம் தான் உள்ளது. என் அம்மா செம்மயாக இதை சமைத்து கொடுத்தார்(இல்லை என்றால் மூலிகையை சாப்பிட சொன்னால் யாரானாலும் இந்த காலத்தில் யோசிக்க தான் செய்வோம்).

முன்னமே இதனை வீட்டில் தொட்டியில் வளர்த்துக்கொண்டு வந்தேன். ஆனால், இதற்கு பிறகு தான் இந்த மூலிகையை பற்றி அதிகம் ஆராய ஆரம்பித்தேன். அப்படி நான் தெரிந்துக்கொண்ட பயன்கள் தான் இந்த பதிவுக்கு காரணம்.

உங்களுக்கு தெரியுமா, முடக்கத்தானால் 300கும் மேற்பட்ட நோய்களை குணப்படுத்த முடியும் என்று? இது நம் தமிழ் இலக்கியத்தில் இருக்கிறது. அவை மொத்தமும் நமக்கு தெரியவில்லை. தலை தொடங்கி கால் மட்டும் அனைத்து வகையான நோய்களையும் குணமாக்கும் திறன் இதற்கு உள்ளதாம். அவற்றுள் சிலவற்றை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இதற்கு இருக்கும் மற்ற பெயர்கள்:

நம் பதிவுகளை பின்பற்றுபவர் ஒருவர் முடக்கத்தான் பதிவை படித்து விட்டு “இதை பெங்களூரில் என்னவென்று கேட்டு வாங்குவது?” என என்னை தொடர்பு கொண்டார். எனவே இது நம் பதிவை தொடரும் பல ஊர்களில் வாழும் தமிழர்களுக்காக

 • அறிவியல் பெயர் : சிசஸ் குவாட்ராங்குலாரிஸ் (Cissus quadrangularis)
 • ஆங்கிலத்தில் : அடமண்ட் கிரீப்பர்(Adamant Creeper) | டெவில்ஸ் பாக் போன்(Devil’s Back Bone) |வெல்ட் கிரேப் (Veldt Grape)
 • ஹிந்தியில் : அட்ஜோட்
 • தெலுங்கில் : நல்லெரு
 • மலையாலத்தில் : பெரண்ட
 • கன்னடத்தில் : வஜ்ரபல்லெ

பிரண்டையில் செய்யக்கூடிய சில உணவு வகைகள்:

இந்த செடியில் இரண்டு முக்கியமான பகுதிகள் இருக்கின்றன. ஒன்று சதைப்பற்றான இதன் தண்டுகள், இதை தான் நாம் நிறைய சமையலில் பயன்படுத்துவோம். மற்றொன்று இதன் இலைகள். இவை மிக குறைவாகவே இருக்கும். இதையும் சமையலில் பயன் படுத்தலாம். அப்படிப்பட்ட சில உணவுகள் பின்வருமாறு

 • பிரண்டை ரசம்
 • பிரண்டை துவையல்/சட்னி
 • பிரண்டை பொடி
 • பிரண்டை உப்பு
 • பிரண்டை வற்றல்/அப்பளம்
 • பிரண்டை ஊறுகாய்
 • பிரண்டை குழம்பு

இவற்றை எப்படி செய்வது என்பதைப்பற்றியும், பிரண்டையை பற்றிய இன்னும் சில தகவல்களையும் வேறொரு பதிவில் விரைவில் பதிவிடுகிறேன்.

இப்போது பிரண்டையின் 18 முக்கிய மருத்துவ குண நலன்கள் பற்றி பார்ப்போம் வாருங்கள்!

பிரண்டையின் மருத்துவ நலன்கள்:

1. சருமம் வயதடைவதை தடுக்கும் பிரண்டை:

பிரண்டையில் ஆன்டி ஆக்ஸிடன்ட் (Anti-oxidant)நிறைய உள்ளது. இவை ஃப்ரீ ராடிகல்ஸ்(free radicals)இனால் சருமத்தின் செல்கள் வயதாவதை தடுக்கின்றது. இந்த தாவரத்தில் அதிகமாக உள்ள பீட்டா கரோட்டீன்(Beta Carotine) தான் ஆன்டி-ஆக்ஸிடன்டிற்கு காரணம்.

2. எலும்புகளை குணப்படுத்துவதில் பிரண்டை:

நான் சொன்னது போல் காலம் காலமாக பிரண்டையை எலும்புகளை குணப்படுத்துவதற்கு நம்ம ஊரில் பயன்படுத்தி வருகின்றனர். இது பிரபலமானதும் கூட. உடைந்த எலும்புகளை குணப்படுத்த பிரண்டையை பாதிக்கப்பட்ட இடத்தின் மேல் பற்று போடலாம், உணவாகவும் உட்கொள்ளலாம். இதற்கு காரணம் பிரண்டையில் இருக்கும் பைட்டோ ஈஸ்ட்ரோஜெனிக் ஸ்டெராய்டுகள்(phytoestrogenic steroids), கால்சியம் மற்றும் பாஸ்பரஸ்.

3. அல்சர் குணப்படுத்துவதில் பிரண்டை:

பிரண்டை அல்சரையும் குணமாக்குகிறது. இது அல்சருக்கு எதிராக மிக நன்றாகவே செயல்படும். இதற்கு காரணம் இதில் இருக்கும் சிட்டோஸ்டெரால்(sitosterol) மற்றும் ட்ரைடர்பெனாய்டுகள்(triterpenoids) தான். இவை இயற்கையாகவே பெப்டிக் அல்சருக்கு(Peptic Ulcer) காரணமான பாக்டீரியாவை எதிர்க்கும் தன்மை கொண்டது. நீங்கள் அல்சர் பிரச்சனையால் அவதி படுபவரா? இதை தொடர்ந்து உங்கள் உணவுகளில் எடுத்து கொள்ளுங்கள். கண்டிப்பாக வித்தியாசத்தை காண்பீர்கள்.

4. வீக்கம் மற்றும் வலிக்கு உதவும் பிரண்டை:

பிரண்டையின் மற்றொரு ஆச்சர்யமான மருத்துவ குணம் இதற்கு இருக்கும் வீக்கத்தையும் வலியையும் குறைக்கும் தன்மையே. வீக்கம் குறைக்கும் குணாதிசயத்திற்கு இதில் இருக்கும் ஃபிளாவனாய்டுகள் (flavonoids) தான் காரணம்.  இதில் இருக்கும் கால்சியம் ஆக்சலேட்(Calcium oxalate), கரோட்டின்(carotene), டெட்ரா டெர்பெனாய்டுகள்(tetra terpenoids), அமிரின்(amyrin) மற்றும் பீட்டா சிட்டோஸ்டெரால் (beta sitosterol) போன்ற ரசாயனங்கள் தான் இதன் வலியை குறைக்கும் தன்மைக்கு காரணம்.

5. மாதவிடாய் நின்ற பெண்களுக்கு உதவும் பிரண்டை

மாதவிடாய் நின்று போன பின்னர் அநேக பெண்கள் மூட்டு வலி, திடீரென உடலில் வெப்பம் ஏறுவது போலிருப்பது போன்ற அறிகுறிகளால் அவதி படுகின்றனர். இதற்கு இப்போது இருக்கும் ஒரே சிகிச்சை ஹார்மோன் சிகிச்சை தான். இது இந்த அறிகுறிகளை கட்டுப்படுத்தினாலும் கூடவே உப்புசம், தலைவலி, குமட்டல் போன்ற நிறைய பக்க விளைவுகளையும் தருகின்றது. ஆனால் பிரண்டை ஈஸ்ட்ரோஜெனை(estrogenic) போல் செயல்பட்டு பக்க விளைவுகளையும் தராமல் இதற்கு தீர்வளிக்கிறது.

6. எலும்புப்புரைக்கு(osteoporosis) உதவும் பிரண்டை:

எலும்புகள் ஆரோக்கியமாக வளர பிரண்டை பெரிதும் உதவும். அதனால் இது எலும்புப்புரை பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. இதுமட்டுமல்லாமல் கர்ப்பினிகள் பிரண்டை உண்பதன் மூலம் உள்ளே சிசுவின் எலும்பு வளர்ச்சி முறைப்படுகிறது என கண்டறிந்துள்ளனர்

“புள்ளபெத்த வயித்த பெரண்டையால அடி” – என்று தமிழில் ஒரு பழமொழி இருக்கின்றது. அதாவது பிள்ளை பேற்றுக்கு பின்னர் வலு குறைந்திருக்கும் கர்ப்பப்பையை வலுவூட்ட இதனை கொடுக்கலாம்.

7. எடை குறைப்பதில் பிரண்டை:

பாரம்பரியமாக எடையை குறைக்க பிரண்டை பயன்படுத்தப்பட்டு வருகின்றது. எடை குறைப்பதற்கு உடல் பயிற்சியும் உணவு கட்டுப்பாடும் முக்கியமாய் இருந்தாலும், பிரண்டை போன்ற மூலிகைகளை உடன் எடுத்துகொள்வது வேகமாய் எடையை குறைக்க உதவுகிறது. பிரண்டையை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உடல் எடை குறைவதோடு மட்டுமல்லாமல் உடல் கொழுப்பையும் இது குறைக்கிறது.

8. சர்க்கரை நோய்க்கு உதவும் பிரண்டை:

உடலில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பிரண்டை பெரிதும் உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் சர்க்கரை நோயால் ஏற்படும் மற்ற சிக்கல்களையும் சமாளிக்க உதவுகிறது. பிரண்டை, மாவு சத்தை ஜீரணிக்க உதவும் நொதிகளை(enzymes) முறையாக கட்டுப்படுத்தி இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது. எனவே நீங்கள் சர்க்கரை நோயால் அவதிப்படுபவராய் இருந்தால் பிரண்டையை தொடர்ந்து சாப்பிடுவது உங்களுக்கு உதவும்.

9. வயிற்றுப்பிரச்சனைகளுக்கு உதவும் பிரண்டை:

நம் வீடுகளில் பொதுவாக நாம் செய்யும் பிரண்டை சட்னி அல்லது துவையல் உட்கொள்வதால், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீருகின்றது.

10. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பிரண்டை:

பிரண்டையிலுள்ள அஸ்கார்பிக் அமிலங்கள்(ascorbic acids) மற்றும் வைட்டமின் சி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உத்வுகிறது. இது இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் உற்பத்தியை அதிகரித்து, நம் உடலை தாக்கும் அனைத்து கிருமிகளிடமிருந்தும் அதை பாதுகாக்கிறது.

https://www.instagram.com/p/BzcJw7KFU4g/

11. காது மூக்கு தொண்டை(ENT) தொடர்பான பிரச்சனைகளுக்கு பிரண்டை:

பிரண்டையிலிருந்து எடுக்கப்படும் சாறு மூக்கிலிருந்து இரத்தம் வருவதையும், மூச்சுக் கோளாறுகளையும், ஆஸ்துமா பிரச்சனையையும் குணப்படுத்த உதவுகிறது. இத்துடன் காதில் சீழ் வடியும் பிரச்சனைக்கும் இது தீர்வளிக்கிறது.

12. இரைப்பை அழற்சி, அஜீரணம், பசியின்மை குணமளிக்கும் பிரண்டை:

அஜீரணம் சம்பந்தமான எல்லா கோளாறுகளுக்கும் பிரண்டை துவையல் கையில் இருந்தாலே போதும். இந்த துவையலை செய்வதும் எளிதானது. அதே சமயத்தில் செம்ம சுவையாகவும் இருக்கும். நீங்கள் அடிக்கடி வெளியே உண்பராயிருந்தாலும், உங்களுக்கு இரைப்பை அழற்சி, அஜீரணம், பசியின்மை போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் வாரம் இருமுறை இந்த துவையலை உட்கொள்ளுங்கள் போதும். எல்லாம் சரியாகிவிடும்.

13. மூலப்பிரச்சனைக்கு உதவும் பிரண்டை:

மூலமென்றாலே வலியும், அவஸ்தையும் தான். மூலப்பிரச்சனையால் நீங்கள் அவதிபடுகிறீர்களா? கவலையை விடுங்கள்! உங்களுக்கு உதவுவதற்கென்றே பிரண்டை இருக்கிறது. இதற்கு பிரண்டையின் இலைகளை நெய்யில் வறுத்து உண்டு வாருங்கள். இது குறிப்பாக பவுத்திர மூலத்திற்கும்(Fistula), மூல உதிரத்திற்கும் சிறந்த மருந்து.

14. சோர்வு மற்றும் இளைப்பிற்கு உதவும் பிரண்டை;

எப்போதுமே சோர்வாக உணர்கிறீர்களா? எந்த வேலை செய்தாலும் எளிதில் களைத்துப்போகிறீர்களா? பிரண்டையை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இது களைப்பை கலைத்து உடலுக்கு நல்ல சுறுசுறுப்பை கொடுக்கும்.

15. குடல் தொற்றை குணப்படுத்தும் பிரண்டை:

பிரண்டையின் இலைகலையும், இளம் துளிர்களையும் காய வைத்து தூளாக்கி அதை உண்ணுங்கள். இது குடல் தொற்றுக்கு காரணமான கிருமிகளை சாகடிக்கிறது. இதற்கு தேவையான பாக்டீரியா எதிர்ப்பு(antibacterial), பூஞ்சை ஏதிர்ப்பு(antifungal), ஆக்ஸிஜனேற்றும் தன்மை(antioxidant), ஆன்தெல்மிண்டிக்(anthelmintic), ஆன்டிஹெமோர்ஹாய்டல்(antihemorrhoidal) மற்றும் வலி நிவாரணம் செய்யும் தன்மைகள் இதனிடம் இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், நீண்டநாள் நோயால் உண்டான பலவீனத்தையும் இது கூடவே சரி செய்கிறது.

16. ஞாபசக்திக்கும், மூளை செயல்பாட்டிற்கும் உதவும் பிரண்டை:

அம்மா மார்களே! இது உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். பிரண்டையை தொடர்ந்து உண்டு வந்தால் ஞாபக சக்தி வளர்வதுடன் மூளை நரம்புகள் வலுவடைகிறதாம். அவ்வளவு தான் இனி உங்கள் பிள்ளைகளுக்கு பிரண்டை உணவுகளாய் செய்து தள்ளிட மாட்டீங்களா?

17. பசியையும் ருசியையும் தூண்டும் பிரண்டை:

“பசியே இல்லை!” “எதை சாப்பிட்டாலும் சுவையே இருக்க மாட்டேங்குது, நாக்கு செத்துவிட்டது!” என்றெல்லாம் சொல்ல கேள்விப்பட்டிருப்பீர்கள். இதற்கெல்லாம் பிரண்டை தீர்வளிக்கிறது. உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமில்லை இது பசியை தூண்டி, ஜீரணத்திற்கு உதவி இப்படி உங்களை ஆரோக்கியமாக இருக்க செய்கிறது.

By SKsiddhartthan – Own work, CC BY-SA 4.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=60446474

18. புற்று நோயை தவிர்க்க உதவும் பிரண்டை:

முன்பெல்லாம் நாம் உணவுகளில் நிறைய  மஞ்சள் சேர்த்துக்கொண்டு வந்தோம். இப்போதெல்லாம் அந்த வழக்கம் குறைந்து போனதுடன், கிடைக்கும் மஞ்சள் பொடியும் அதிக காலம் கெடாமல் காக்க பொடியை IR ரேடியேஷனால் சுத்தப்படுத்துகின்றனர். மஞ்சள் தான் நம்மை புற்று நோயிலிருந்து காத்து வந்தது இப்போ அதுவும் போச்சு. ஆனால் இயற்கை நமக்கு இன்னொரு மருந்தை கொடுத்திருக்கிறது. அது தான் பிரண்டை. பிரண்டையை தொடர்ந்து உண்டு வந்தால் குடல் மற்றும் வயிற்று புற்று நோயை நாம் தவிர்க்கலாம்.

இவ்வளவு நன்மைகளை சும்மா தரும் பிரண்டையை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இதை வீட்டிலயே வளர்த்து எப்போதும் உபயோகத்திற்கு வைத்திருப்பது நல்லது தானே?

இதை தவிர உங்களிடம் வேறு ஏதேனும் பயன்கள் இருக்கிறதா? அனைவருக்கும் அது பயன்தர கமெண்டில் அதை தெரியப்படுத்துங்கள். ஏதேனும் சந்தேகங்களோ, கேள்விகளோ இருக்கிறதா? தொடர்பு பக்கத்தின் மூலமாகவோ, இடப்பக்கத்திலுள்ள WhatsApp Iconஐ கிளிக் செய்தும் என்னை தொடர்பு கொள்ளலாம்.

அநேகர் என்னை தொடர்பு கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறீர்கள். உங்கள் அனைவருடைய அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி!

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் சுற்றத்திற்கு இதை பகிர்ந்து ஆர்கானிக் பசுமை அன்பை பரப்பலாமே!

ஒன்றாய் விதைப்போம்! ஒன்றாய் வளர்வோம்! நன்றி

இது ஒரு இரு மொழி பதிவு. To read this post in English click here!

2 thoughts on “பிரண்டையின் 18 முக்கிய மருத்துவ குண நலன்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது