நறுமண பொருட்களின் பின்னால் உள்ள இரகசியம்!

Spread the Green love!

“உணவு” இந்த சொல்லை கேட்கும்போதே நம் எல்லோருக்குமே ஏதோ ஒரு இனிய நினைவு வரும். உலகில் பல்வேறு நாடுகளில் பலவிதமான உணவு பழக்கங்கள் இருக்கின்றன. நம்மில் பலருக்கும் பல்வேறு அயல் நாட்டு உணவுகள் பிடித்திருக்கும். ஆனாலும் இந்திய உணவு என்றாலே தனி சிறப்பு தான். இங்குமே ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாதிரியான உணவு. பொதுவாகவே இந்திய உணவுகளில் நறுமணப்பொருட்கள் மிகுதியாக பயன்படுத்தப்படுகின்றன என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள், அவை உணவிற்கு எவ்வளவு சுவை ஊட்டுகின்றன என்பது நன்கு தெரிந்த ஒன்று. ஆனால் அது மட்டுமே அவற்றை பயன்படுத்துவதற்கான காரணம் என நீங்கள் நினைக்கிறீர்களா?

அப்படியானால் எங்கள் பதில் இல்லை என்பதே.

நம் முன்னோர்கள் எதையுமே காரணமின்றி செய்ததில்லை. அக்காலத்தில் ‘உணவே மருந்து’ என்னும் மொழிக்கேற்ப தான் எல்லா உணவு பண்டங்களையும் வடிவமைத்துள்ளனர். இன்றும் நாம் அதை வழக்கமாக்கலாமே! அதற்கு நாம் சமையலில் வழக்கமாக பயன்படுத்தும் நறுமணப்பொருட்கள் சிலவற்றின் பயன்களை அறிய வேண்டும். அதற்காகவே இந்த பதிவு.

வாருங்கள் தினசரி உணவில் மருந்தாகும் பொருட்களை பற்றி பார்ப்போம்.

மஞ்சள்

மிக பழமையான நறுமண பொருட்களுள் ஒன்றான மஞ்சள் அழகிற்கு பயன்படுத்த படுகிறதை நீங்கள் அறிவீர்கள். இது சருமத்தை பாதுகாப்பது மட்டும் இல்லாமல் மூளை செயல்பாட்டிலும் உதவுகிறது. மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதோடு நரம்பியல் குறைபாடுகளையும் சரி செய்கிறது. இதுமட்டுமல்லாது இருதய நோய், புற்றுநோய் போன்ற அபாயகரமான நோய்களையும் தடுக்கிறது.

கடுகு

தென் இந்தியாவின் ஏறக்குறைய எல்லா வகையான உணவுகளிலும் காணக்கூடிய ஒன்றானது கடுகு. நீங்கள் இதை தினமும் பயன்படுத்தி இருப்பீர்கள். ஆனால் ஏன் பயன்படுத்துகிறோம் என யோசித்ததுண்டா? இதில் பல பயன்பாடுகள் அடங்கி உள்ளன. வயிறு சம்பந்தப்பட்ட பல நோய்களை இது குணப்படுத்துகிறது. இரைப்பை புற்றுநோயை தடுக்க உதவுகிறது. மலச்சிக்கல், மூல வியாதி மற்றும் பிளவுகளையும் குணப்படுத்துகிறது.

பூண்டு

தன் நறுமணத்தாலே பசியை தூண்டும் இது பல நலன்களை பெற்றிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? இரத்த சுத்திகரிப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது இந்த வெள்ளை பூண்டு. இது பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்துகிறது.

வெந்தயம்

நம் வீட்டு பெரியவர்கள் வயிறு தொடர்பான எந்த சிக்கலுக்கும் வெந்தயத்தை உண்ண சொல்வது இதன் முக்கியதுவத்தை அறிந்ததால் தான். செரிமான அமைப்பில் ஏற்படும் சிறிய கோளாறுகள் பலவற்றை இது தீர்க்கிறது. இது அதிகப்படியான கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது. மேலும் தாய்ப்பால் சீராக வருவதற்கும் இது உதவுகிறது.

பெருஞ்சீரகம்

பெருஞ்சீரகத்தின் மணத்தை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதன் மற்ற பயன்களை பற்றி தெரியுமா? இது நம் உடலில் சிவப்பு இரத்த அணுக்கள் தயாரிப்பை மேம்படுத்த உதவுகிறது. இதுமட்டும் இல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியையும் இது அதிகரித்து நம்மை பல விதமான நோய்களில் இருந்து காக்கிறது.

கறிவேப்பிலை

இந்த சிறிய இலைகள் நம் உணவிற்கு நல்ல நறுமணத்தை அளிக்கும். இதன் மிக முக்கியமான மற்றொரு பயன் உலகில் மிகுதியாக காணப்படக்கூடிய நோய்களில் ஒன்றான நீரிழிவு நோயை குணப்படுத்துவது. நாம் தினசரி உணவில் இதை சேர்த்துக்கொண்டாலே நீரிழிவு நோயின் பாதிப்பு குறையுமே. இது மேலும் ஒரு அதிகப்படியாக காணப்படும் பிரச்சனையை தீர்க்கிறது – அது வெள்ளை முடியையும் தடுப்பதாகும்.

சிவப்பு மிளகாய்

நாம் அனைவரும் காரத்திற்காக சிவப்பு மிளகாயை பயன்படுத்துகிறோம். ஆனால் சிறிதளவு சிவப்பு மிளகாயை உணவுடன் சேர்ப்பதனால் பசி உணர்வு அதிகரித்து நன்றாக சாப்பிட முடியும் என்பது உங்களுக்கு புதிய செய்தியாய் இருக்கலாம். ஒரு நாளில் ஒரு சிவப்பு மிளகாய் உணவுடன் சேர்ப்பதனால் நீண்ட மற்றும் ஆழ்ந்த உறக்கத்தையும் பெற முடியும்.

ஏலக்காய்

மிகவும் சிறந்த நறுமணத்தை கொண்ட ஏலக்காய் நம் உணவிற்கு சுவை அளிப்பதுடன் உடல் நலத்திலும் பங்கு வகிக்கவில்லை என்றால் நம் உணவிலோ இந்த பதிவிலோ பங்கு வகிக்காது என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதன் தசைகளை தளர்க்கும் தன்மை விக்கலை குணப்படுத்துகிறது. இதன் நுண்ணுயிர்களை கொல்லும் தன்மையால் வாய் ஆரோக்கியம் அதிகரிக்கிறது. மேலும் இதனால் பல் சொத்தை மற்றும் சுவாச துர்நாற்றத்தை குணப்படுத்த முடியும்.

கொத்துமல்லி

இதன் இலைகள் மற்றும் விதைகள் இரண்டையுமே உணவில் சுவையூட்டுவதற்கு பயன்படுத்தி இருப்போம். சுவையுடன் சேர்த்து இது நம் உடலிற்கு தேவையான நல்ல கொழுப்புசத்தை அதிகரிக்கிறது. இதுமட்டுமல்லாது மூளையின் செயல்பாடுகளுக்கு மிகவும் முக்கியமான இரும்பு சத்து இதில் அதிகம் உள்ளதால் மூளை செயல்பாடுகள் வலுவடையும்.

சீரகம்

கேரளத்தை சேர்ந்தவர்கள் நீரில் சீரகம் சேர்த்து அருந்துவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அது ஏன் என்று சிந்தித்ததுண்டா? ஏன் என்றால் இது மலச்சிக்கலை குணப்படுத்த உதவுகின்றது. சுவாசம் மற்றும் நரையீரல் தொடர்பான ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற நோய்களையும் குணப்படுத்துகிறது. தூக்கமின்மைக்கும் இது ஒரு நல்ல தீர்வாகும்.

இந்த தகவல்கள் உங்களுக்கு புதியதாய் இருந்திருக்கும் ஆனால் உபயோகமானவை அல்லவா? இனி வரும் பதிவுகளில் அவற்றை வளர்க்கும் முறை பற்றி பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். இந்த பதிவினை பற்றிய உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது