தேமோர் கரைசல் என்றால் என்ன? அதை தயாரிப்பது எப்படி?

தேமோர் கரைசல் என்றால் என்ன> எப்படி தயார் செய்வது?
Spread the Green love!

சென்ற பதிவுகளில் இந்த கரைசல்கள் நிறையவற்றை பற்றி தொடர்ந்து பேசி வருகிறேன். அவற்றை படித்துவிட்டு நண்பர் ஒருவர் “இந்த கரைசல்களை பற்றி பதிவிடுகிறாயே, இதனை எப்படி செய்வது என்று பதிவிட்டிருக்கிறாயா?” என்று கேட்டார். நான் இல்லை என்றேன். அதற்கு “அப்போது இதை படிப்பவர்கள் எப்படி இதை பற்றி புரிந்து கொள்வார்கள்?” என்றார். இதை கேட்டதும் என் தலையில் ஒரு பல்பு எரிந்தது. அதன் விளைவாக இப்படிப்பட்ட கரைசல்களை பற்றியும் அவற்றின் தயாரிப்பு முறைகளை பற்றியும் பதிவிடலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.

இந்த பதிவில் தேமோர் கரைசல் என்றால் என்ன? அதனை எப்படி தயார் செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.

இந்த தேமோர் கரைசல் என்றால் என்னங்க?

ஆர்கானிக் விவசாயத்தில் ஆர்வமுள்ளவர்கள் இந்த சொல்லை கேள்விப்பட்டிருப்பீர்கள் மற்றவர்களுக்கு இந்த கேள்வி இருக்கலாம். தேமோர் கரைசல் என்பது தேங்காய் பால், மற்றும் மோரின் கலவை தான். இந்த கரைசலில் வேறு எதுவுமே கிடையாது.(கொஞ்சம் தண்ணீர் வேண்டுமானால் இருக்கலாம்.)

இதனை பற்றி நீங்கள் முன்னமே கேள்வி பட்டிருக்கிறீர்களா? கேள்வி பட்டிருந்தால் எங்கே எப்படி என்று கீழே கமெண்டில் எனக்கு தெரிவியுங்கள்!

தேமோர் கரைசலின் பலன் என்ன?

Butter Milk

நாம் வளர்க்கும் எல்லா செடிகளிலும் முக்கியமான இரண்டு பகுதிகள் பூ பூப்பதும், பூக்களிலிருந்து காய் வைப்பதும் தான். இதை வைத்து தான் அந்த செடியை நாம் சரியாக பராமரித்து உள்ளோமா என தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் சில சமயங்களில் செடிகளில்/மரங்களில் பூக்கள் மிக குறைவாக பூக்கலாம், அல்லது பூக்கள் எல்லாம் கொட்டி விடலாம். இதனால் காய்ப்பு மிக குறைவாக இருக்கும்.

இதற்கெல்லாம் காரணம் சரி இல்லாத நிலம்/மண், சரி இல்லாத விதைகள், குறைவான தண்ணீர் என இதில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஆனால் இந்த பிரச்சனைகளைஎல்லாம் தாண்டி செடியை காக்க இந்த தேமோர் கரைசல் பெரிதும் உதவும்.

அது எப்படி? என்கிறீர்களா?

ஆர்கானிக் உழவர்கள் இதற்கு எளிமையான பதிலை வைத்துள்ளனர். பூக்கும் காலத்தில் செடிக்கு எக்கசெக்க ஆற்றல் தேவைப்படும். அதற்கு அவை மண்ணிலிருந்து வேர் மூலமாக சத்துகளை உறிகின்றன. பின்னர் அடிமரம், கிளைகள் என இவ்வளவு இடத்தையும் கடந்து பின்னர் பூக்களை அடைய வேண்டும். இதற்கான ஆற்றல் பல நேரங்களில் செடிகளில் இருப்பதில்லை.

தேமோர் கரைசல் இதை தான் தீர்க்கிறது. இது இலை வழி ஊட்டசத்தாக உள்ளே சென்று பூக்களை எளிதாய் சேர்வதுடன், இலைகளில் ஒளி சேர்க்கையையும் அதிகரிக்கிறது. இதனால் பூக்கள் பூக்கவும், பூத்த பூக்கள் கொட்டாமல் நன்கு முதிர்ச்சி பெறவும் முடிகிறது. கடைசியில் நமக்கு நிறைய அறுவடை கிடைக்கும்.

தேமோர் கரைசல் எப்படி செய்வது?

இதை தயார் செய்வது மிகவும் எளிதானது தான்.

  • இந்த கரைசலில் பெரும்பகுதி – 60% மோர் தான். எனவே முதலில் அதை தான் நாம் தயார் செய்ய வேண்டும்.
  • இப்படி தயார் செய்யும் மோரினை 5 நாட்கள் வரை நன்றாக புளிக்க வைக்கவேண்டும்
  • எந்த அளவுக்கு என்றால் பாத்திரத்தின் மூடியை திறந்தாலே வாடையில் மூக்கை மூடும் அளவுக்கு இருக்க வேண்டும்.
  • பின்னர் 6வது நாள் ஃப்ரெஷாக தேங்காய் பால் எடுத்துக்கொள்ளுங்கள்
  • இது கரைசலின் மீதம் 40% இருக்க வேண்டும்
  • ஒருவேளை நீங்கள் 1லிட்டர் கரைசல் தயார் செய்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். அதில் 600மிலி புளித்த மோர், 400மிலி தேங்காய் பால் இருக்க வேண்டும்.
  • அப்படி நீங்கள் எடுக்க முயற்சி செய்தும் தேங்காய் பால் போதவில்லை என்றால் கொஞ்சம் தண்ணீரும் சேர்த்துக்கொள்ளலாம்.
  • இரண்டையும் கலந்து இன்னும் 4 நாட்கள் வைக்க வேண்டும்

அவ்வளவு தான் பூக்களுக்கான மாய கரைசல் தயார். செய்து பார்த்து விட்டு எப்படி வந்தது என கமென்டில் எனக்கு தெரிய படுத்துங்கள்!

Coconut Milk and Cream

தேமோர் கரைசலை எப்படி பயன்படுத்துவது?

தேமோர் கரைசல் இலைவழி ஊக்கி. எனவே இதனை நீரில் கலந்து இலைகள் மேல் தெளிக்க வேண்டும். 1 லிட்டர் தண்ணீரில் 50-100மிலி கரைசல் கலந்து தெளிக்கலாம்.

  • இந்த அளவு செடியின் தேவைக்கு ஏற்ப மாறுபடும். சில செடிகள் பூக்கவே பூக்காமலிருக்கலாம். அவற்றுக்கு 75-100மிலி வரை கலந்து அடிக்கலாம்.
  • மற்றவை பூக்கும் ஆனால் உங்களுக்கு இன்னும் பூக்கள் தேவையாக இருக்கலாம் அவற்றுக்கு 50-75மிலி வரை கரைசல் கலந்து தெளிக்கலாம்.
  • பூக்கும் காலத்துக்கு முன்னர் சரியாக 9-10 நாட்களுக்கு முன் இந்த கரைசலை தயார் செய்ய தொடங்குங்கள். தயார் செய்து ஒரு முறை மொட்டுகள் மேல் தெளிக்கலாம்.
  • பின்னர் பூக்கள் நன்றாய் பூத்த பின் (7 நாட்களுக்கு பின்) ஒரு முறை தெளிக்கலாம்
  • இதனை சாயங்காலம் தெளிப்பது நல்லது. அப்படி செய்வது இரவு முழுதும் இலைகளில் கரைசல் ஊற உதவும்.
  • தெளிக்கும் போது மரம்/செடிக்கு மேலிருந்து கீழாக இலைகளிலிருந்து கீழே சொட்டும் வரை தெளிப்பது நல்லது.

ஒரு செடியோ மரமோ பூக்கவே இல்லை என்றாலோ, அல்லது ஒரு மரம் ஒரு பக்கம் மட்டும் தான் பூக்கிறது என்றாலோ இந்த கரைசலை மாதம் ஒரு/இரு முறை பூக்காத இடத்தில் தெளித்து வருவது பலனளிக்கும்.

அவ்வளவு தாங்க. இதை தவிர உங்களிடம் வேறு ஏதேனும் டிப்ஸ் இருக்கிறதா? அனைவருக்கும் அது பயன்தர கமெண்டில் அதை தெரியப்படுத்துங்கள். ஏதேனும் சந்தேகங்களோ, கேள்விகளோ இருக்கிறதா? தொடர்பு பக்கத்தின் மூலமாகவோ, இடப்பக்கத்திலுள்ள WhatsApp Iconஐ கிளிக் செய்தும் என்னை தொடர்பு கொள்ளலாம். அதை விட கீழே கமெண்டில் அதை தெரிவித்தால் பதிவை படிக்கும் அனைவருக்குமே அது உதவும்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் சுற்றத்திற்கு இதை பகிர்ந்து ஆர்கானிக் பசுமை அன்பை பரப்பலாமே!

ஒன்றாய் விதைப்போம்! ஒன்றாய் வளர்வோம்! நன்றி

இது ஒரு இரு மொழி பதிவு. To read this post in English click here!

13 thoughts on “தேமோர் கரைசல் என்றால் என்ன? அதை தயாரிப்பது எப்படி?

    1. வாழ்த்துக்கு நன்றி கௌதம். பதிவு பிடித்திருந்தால் நண்பர்களுக்கும் பகிருங்கள்! விவசாயத்தை விட்டு விட வேண்டாம். தொடர்ந்து வையத்துக்கு உணவளியுங்கள்.

    2. வணக்கம்.
      தேமோர் கரைசல் செய்முறை பற்றி சந்தேகம்:
      1. பால் காய்சி, உரை ஊற்றுணுமா? அல்லது காய்க்காமலா?

      2. Packet பாலில் செய்லாமா?

      3. எவ்வளவு நால் கிடாமல் வைத்திருக்கலாம்?

  1. தங்களது பதிவு அருமையாக இருக்கிறது. நான் ஒரு சிறிய மாடித்தோட்டம் வைத்திருக்கிறேன்.மிகவும் பயனுள்ள தகவல்கள் அளிக்கிறீர்கள். இது போல் ஒவ்வொரு தாவரத்திற்கும் குறிப்பாக தொட்டியில் வைத்து வளர்க்கப்படும் செடிகளுக்கான பராமரிப்பு பற்றி தொடர்ந்து பகிர வேண்டுகிறேன்.நன்றி

    1. தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி… கண்டிப்பாக தங்கள் கருத்தை நினைவில் வைத்து கொள்கிறேன்… சொல்லப்போனால் இங்கு பதிவிடப்படும் எல்லா தாவரங்களையும் தொட்டியில் எப்படி வளர்ப்பது எனவும் சேர்த்து தான் பதிவிட்டு வருகிறேன்… தொடர்ந்து இணைந்திருங்கள்!

  2. மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க மகிழ்சி
    எனது வீட்டில் உள்ள செம்பருத்தி அரும்புகள் விரிந்து பூக்கும் தருவாயில் காம்பு பழுத்து உதிர்ந்து விடுகின்றன.
    அதற்கு இக்கரைசலை பயன்படுத்தலாமா?

      1. அழகான அழுத்தமான பதிவு. உங்கள் பதிவில் முக்கியமாக ஒன்றை சொல்ல வேண்டும் சொல்லும் விதம் பயன்படுத்தும் வார்த்தைகள் அழகாக படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது.
        இக்கரைசலை காலையில் தெளிக்கலாம்?நீங்கள் தெளிக்கும் பொழுது நீரின் அளவை குறிப்பிட வேண்டும்.அப்போதுதான் பயனாக இருக்கும்.
        நன்றி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது