#மூலிகை_4
திருநீற்று பச்சையை பற்றி நம்மில் அநேகருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் பேசில் என்று சொன்னால் நமக்கு தெரியும். உண்மையில் திருநீற்று பச்சையும் பேசில் வகையை சேர்ந்தது தான் என சொன்னால் நம்புவீர்களா? இந்தியாவை பூர்வீகமாக கொண்டுள்ள இது சுவீட் பேசில்(Sweet Basil) இனத்தை சார்ந்தது.
ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் சாலை ஓரங்களில் இதனை எளிதாக காணமுடியும். மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் நகரமயமாதலால் காணாமற்போய்கொண்டிருக்கும் மூலிகை இனங்களுள் இதுவும் ஒன்று. உலகளவில் இதனை பல்வேறு உணவுகளில் சேர்த்துக்கொண்டாலும் இந்தியாவில் இதனை இதன் மருத்துவ நலன்களுக்கே பயன்படுத்துகிறோம். இதன் மருத்துவ நலன்களை பற்றி இப்போது பார்ப்போம்.
திருநீற்று பச்சையின் மருத்துவ பயன்கள்
இது காலம் காலமாக பல நோய்களுக்கு மருந்தாக பயன்படும் மூலிகை. இதன் இலைகளில் மெதில்கெயில்கால் (methylchaylcol), லினலால் (linalol), யூகெனால் (eugenol), தைமால்(thymol) மற்றும் சாந்தமைக்ரால் (xanthamicrol) போன்ற வேதி பொருட்கள் உள்ளன. இதன் இலைகளில்லிருந்து எடுக்கப்படும் சாற்றை மூச்சு பிரச்சனை, காய்ச்சல், காது வலி போன்ற நோய்களை குணப்படுத்த கை வைத்தியத்தில் பயன்படுத்துவர்.
இதன் பூக்கள் ஊக்கமூட்டியாகவும்(stimulant), இரைப்பைக் குடல் வலி நீக்கியாகவும்(stimulant), வலிப்பு குறைக்கும் மருந்தாகவும்(antispasmodic), சிறுநீர் பிரிப்பியாகவும்(diuretic) ஒவ்வாமை நீக்கியாகவும்(demulcent ) பயன்படுகின்றன. இதன் இலைகளின் சாறு ஆன்டிபாக்டீரியலாக(antibacterial) இருக்கிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் பாக்டீரியாக்கள் எதிர்ப்பு(antibacterial), பூஞ்சை எதிர்ப்பு(antifungal), மற்றும் பூச்சுக்கொல்லியாகவும் பயன்படுகின்றது.
திருநீற்று பச்சையின் விதைகள்:
இதன் விதைகள் மிகவும் பிரபலமானவை இதனை சப்ஜா என்கிற பெயரில் கேள்விபட்டிருப்பீர்கள். சப்ஜா விதைகளை ருசியான ஆரோக்கியமான ஜிகிர்தண்டா தயாரிப்பதில் பயன்படுத்துவர். சப்ஜா விதைகளுக்கு உடம்பு சூட்டை தணிக்கும் பிரத்யேக குணம் உண்டு. செடியை போலவே இவற்றிலும் குணநலன்கள் உள்ளது.
திருநீற்று பச்சையின் முக்கியமான 16 மருத்துவ நலன்களை பற்றி பார்ப்போம்.
1.முகப்பருக்கள் மற்றும் பருக்களுக்கு:
துளசி இலைகளை போன்று பச்சிலை இலைகளையும் முகப்பருக்களால் ஏற்படும் தழும்புகளுக்கு பயன்படுத்தலாம். இதற்கு சில பச்சிலைகளை எடுத்து அதனை நசுக்கி பிழிந்து அதனோடு சிறிது வெந்நீர் கலந்து அந்த சாற்றை தழும்புகள் மீது இட்டு வர வேண்டும். தினமும் இதனை செய்வதால் நல்ல பலன் கிடைக்கும். பருக்களை போக்க இதன் இலை சாற்றினோடு பொடியாக்கப்பட்ட வசம்பு கலந்து பருக்கள் மீது இட்டு வர பருக்கள் மாயமாகும்.
2.விசாரம்(Anxiety) மற்றும் மனஅழுத்தத்திற்கு:
திருநீற்று பச்சிலை அமைதியூட்டும் நறுமணம் கொண்டது. இதினை பயன்படுத்த இதன் இலைகளையோ அல்லது பூக்களையோ உலர வைத்து பொடியாக்கி துணி பைகளில் வைத்து அவ்வப்போது முகந்து கொள்ளலாம். இலைகளை நேரடியாக முகர்வதும் பலன் அளிக்கும்.
3. காது தொற்றுக்கு:
பூண்டு எண்ணெயை போல திருநீற்று பச்சிலைகளையும் காது பிரச்சனைகளுக்கு உபயோகிக்கலாம். மேல் கண்டவாறு இலையிலிருந்து சாறு எடுத்து காதில் ஒரு முறைக்கு ஒரு சொட்டென நாளொன்றுக்கு இருமுறை விட்டு வந்தால் காது வலியும், அரிப்பும் குறையும்.
4. வாய்புண்களுக்கு:
திருநீற்று பச்சை இலைகளை மெல்லுவதன்மூலம் வாய்புண்களை குணப்படுத்த முடியும். எப்போதெல்லம் நீங்கள் வாய்புண்களால் அவதி படுகிறீர்களோ அப்போதெல்லாம் கைநிறைய பச்சிலைகளை எடுத்து மெதுவாக மென்று இலைகளை விழுங்கிவிடவேண்டும்.
5. பூச்சி கடிகளுக்கு:
திருநீற்று பச்சிலைகளை பூச்சி கடிகளுக்கும் பயன்படுத்தலாம். சில பச்சிலைகளை கிள்ளி அதனை அரைத்து பூச்சி கடித்த இடத்தில் பூசவேண்டும் இது எளிதான முதலுதவி ஆவதுடன், தேள்கடி போன்றவற்றிற்கு வலி குறைப்பானாகவும் இது செயல் படுகிறது.
6. தோல் தொற்றுகளுக்கு:
இலைகளை மஞ்சளுடன் சேர்த்து தோலின்மீது இடுவதன் மூலம் தோலில் ஏற்படும் சிறு தொற்றுகளை எளிதாக சரிசெய்ய முடியும். இதற்கு கைநிறைய புது மலர்ச்சி(fresh) இலைகளை எடுத்து அதை ஒரு துண்டு மஞ்சளுடன் அரைத்து தொற்று ஏற்பட்ட இடத்தின் மீது பூசவேண்டும்.
7. தலைவலிக்கு:
புதிதாக அரைத்த பச்சிலைகளுடன் சில துளி கற்பூர எண்ணெய் சேர்த்து அதனுடன் சிறு துண்டு கஸ்தூரி மஞ்சள் சேர்த்து தலையில் பத்து போட்டால் சைனஸ் பிரச்சனையால் வரும் தலைவலி குணமாகும்.
8. முடிக்கு:
மற்ற மூலிகைகளை போல திருநீற்று பச்சையிலிருந்தும் எண்ணெய் தயாரித்து நம் முடிக்கு பயன்படுத்தலாம். இதற்கு இலைகளை அரைத்து அதிலிருந்து சாற்றை பிழிந்து எடுத்துகொள்ள வேண்டும். இதனுடன் சம அளவு சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் சேர்த்து, ஈரப்பதம் போகும் வரை சூடுபடுத்தி, அதனை வடிகட்டினால் அருமையான திருநீற்று பச்சை எண்ணெய் தயார். இதனை முடி பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம்.
9. உடல் சூட்டை தணிக்க சப்ஜா விதைகள்:
முன் கண்டவாறு திருநீற்று பச்சை விதைகளை சப்ஜா விதைகள் என்று அழைப்பர். இந்த விதைகளை சூடான தண்ணீரில் 5-10 நிமிடங்கள் ஊறவைத்து, வடிகட்டின விதைகளை பசும்பாலில் சேர்த்து, உடன் வீட்டில் தயாரிக்கப்பட்ட ரோஜா சிரப் (Rose syrup) மற்றும் ரோஜா ஜாம் சேர்த்தால் குளுமை தரும் புத்துணர்ச்சி பானம் தயார். இதனை குளிரூட்டியும் குடிக்கலாம். இது வயிற்றில் ஏற்படும் எரிச்சலை நீக்குவதோடு சூட்டை சமாளிக்கவும் உதவுகிறது.
10. பச்சிலை வேது(steam):
மூக்கடைப்பால் நீங்கள் அவதி பட்டால் பச்சிலை கொண்டு வேது பிடிக்கலாம். ஒரு பாத்திரம் நிறைய தண்ணீர் எடுத்து கொதிக்கவைத்து, கொதி வரும் நேரத்தில் கை நிறைய பச்சிலைகளை சேர்த்து, கூட சில துளிகள் நீலகிரி தைலம் சேர்த்து வேது பிடிக்கலாம். இது மூக்கடைப்பை சரி செய்யும்.
11. வயிற்று பிரச்சனைகளுக்கு:
சப்ஜா விதைகளால் செய்யபட்ட கஷாயத்தை குடிப்பது பல்வேறு வயிறு கோளாறுகளை குணப்படுத்த உதவுவதுடன், சிறுநீர் உற்பத்திக்கும் உதவுகிறது. பச்சிலை சாறுடன் சம அளவு தேன் சேர்த்து உண்டு வந்தால் வாயு பிரச்சனைகள் குணமாகும். திருநீற்றுப் பச்சிலை செடியின் வேரை இடித்து, பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை அருந்தி வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழித்து வயிற்று புண்களை ஆற்றும். சிறுநீரை பெருக்கி ரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன், உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி நீர் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து காப்பாற்றும்
12. வெள்ளைப்படுதலுக்கு:
திருநீற்று பச்சை வெள்ளைப்படுதல் பிரச்சனையை சமாளிக்கவும் பெரிதும் உதவுகிறது. வெள்ளைபடுதலை குணப்படுத்த காலை தோறும் ஐந்து இலைகள் உண்டு வரலாம்.
13. பிரசவ வலிக்கு:
பிரசவத்தின்போது ஏற்படும் வலி சொல்லி முடியாதது. இந்த வலியை கட்டுபடுத்த பச்சிலைகள் மிகவும் உதவுகின்றன. இந்த இலைகளை கொண்டு செய்யப்படும் டீ பிரசவ வலியை குறைக்கிறது. பிரசவத்தையும் எளிதாக்குகிறது.
14. பிரசவத்திற்கு பின் ஏற்படும் சோர்வுக்கு:
பிரசவத்தின் பிற்பாடு ஏற்படும் சோர்வுக்கு பச்சிலைகள் மிக உபயோகமானது. இதன் விதையை பிரசவத்துக்குப் பிறகு சாப்பிட்டு வந்தால் பிரசவத்தால் ஏற்பட்ட வலி குறையும்.
15. மூலம் மற்றும் மலச்சிக்கலுக்கு:
மூலம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளை குணப்படுத்த திருநீற்று பச்சை பெரிதும் பயன்படுகிறது. அரை தேக்கரண்டி சப்ஜா விதைகளை வெது வெதுப்பான நீரில் போட்டு உண்டு வருவதன் மூலம் இந்த பிரச்சனைகள் குறையும்.
16. வாந்திக்கு:
சகல விதமான வாந்திகளுக்கும் இது நல்ல மருந்து. குறிப்பாக ரத்த வாந்தி, கப வாந்திக்கு மிகவும் பயன்படக்கூடிய மூலிகை இது. இந்தப் பச்சிலையின் சாறெடுத்து சுடுநீரில் கலந்து கொடுக்கலாம். கஷாயம் செய்தும் கொடுக்கலாம்.
திருநீற்றுபச்சை மூலிகை டீ:
மூலிகை டீ செய்ய 1 தேக்கரண்டி உலர வைக்கப்பட்டு பொடியாக்கப்பட்ட இலைகளையோ, அல்லது 3 தேக்கரண்டி நொறுக்கப்பட்ட பச்சை இலைகளையோ கொதிக்கும் நீரில் இட்டு டீ தயாராகும் வரை சிறிது நேரம் வைக்க வேண்டும். பிறகு விருப்பப்பட்டால் தேன் சேர்த்து பருகலாம். இது வாயு, தசைபிடிப்புகள், நரம்பு இழுப்பு,குமட்டல், மற்றும் ஜீரண கோளாறுகளுக்கு மிகவும் உபயோகமானது. இதற்கு கதகதபூட்டும் தன்மை உள்ளதால் இதனை சளி, இருமல் மற்றும் மற்ற சுவாச பிரச்சனைகளுக்கும் பயன்படுத்தலாம்.
பரிந்துரைக்கப்பட்ட அளவு:
கசாயம்: 50-100 மி.லிசப்ஜா விதை: 1-3 கி பொடிசாறு:நாளொன்றுக்கு 1-2 முறை, 1 தொன்னை(cup) தண்ணீரில் 1-2 தேக்கரண்டி
பக்க விளைவுகள்:
திருநீற்று பச்சை இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை குறைப்பதாய் கூறப்படுகிறது. எனவே நீங்கள் சர்க்கரை நோய்க்கு மருந்து உட்கொண்டு வந்தால் இதனை பயன்படுத்தும் போது தொடர்ந்து உங்கள் சர்க்கரை அளவை கவனிப்பது நல்லது. நிரம்ப காலமாய் மருந்துகள் சாப்பிடுபவரா நீங்கள்? அப்போது இதனை தொடர்ந்து சாப்பிட நினைத்தால் உங்கள் மருத்துவரிடம் அணுகி உறுதி செய்துகொள்வது நல்லது.
இச்செடியை எங்கே பெறுவது:
சப்ஜா விதைகளை அருகிலுள்ள நாட்டு மருந்து கடைகளிலிந்து பெறலாம். இச்செடியினை அருகிலுள்ள நாற்றுப்பண்ணையிலிருந்தோ அல்லது மூலிகை பண்ணையிலிருந்தோ பெற்று வளர்க்கலாம் அல்லது விதையிலிருந்தும் வளர்க்கலாம். ஒரு வேளை உங்கள் நண்பர்கள் யாரேனும் இச்செடியினை வைத்திருந்தால் அவர்களிடமிருந்து நாற்று வாங்கியும் வளர்க்கலாம்.
சில அறிவு துளிகள்:
‘எங்கே உப்பு நல்லதோ, அங்கே பேசிலும் நல்லது’ – இத்தாலிய பழமொழி
இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என் நம்புகிறோம். ‘இந்த மூலிகை நம் வீட்டில் இருந்தால் நல்லா இருக்குமே!’ என்று யோசிக்கிறீர்களா? யோசனையை விடுங்கள் எங்கள் அடுத்து வரும் பதிவுகளில் இதனை எப்படி வளர்ப்பது என பார்ப்போம் மற்றும் சில சுவாரஸ்யமான தகவல்களை பார்ப்போம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, பரிந்துரைகளோ, கருத்துக்களோ இருந்தால் கமென்டின் மூலம் எங்களுக்கு தெரிய படுத்துங்கள்.
இவ்வளவு நன்மைகள் தரும் இந்த மூலிகையை பற்றி நம் நண்பர்களிடம் பகிராமலிருக்கலாமா? நினைவு கொள்ளுங்கள் ‘பகிர்வதே அக்கறை காட்டுவது!’
One thought on “திருநீற்று பச்சையிலுள்ள(சுவீட் பேசில்) முக்கியமான 16 மருத்துவ நலன்கள்”
இந்த மருந்து கருத்தரிக்க உதவுமா ? அல்லது கருத்தடை செய்யுமா ?