எப்படி வளர்ப்பது?கொள்கலன் தோட்டம்செடிகள்தர்பூசணிபழச்செடிகள்

தர்பூசணி வளர்ப்பது எப்படி? [கொள்கலங்களில்]

Spread the Green love!

கோடைக்காலம் நெருங்கிக்கொண்டே இருக்கிறது. கோடைக்கால வெப்பம் நம்மை தாக்கு தாக்கு என தாக்கும்போது தான் நமக்கு நமது கோடைகால நண்பர்களை பற்றி நினைவுக்கே வரும். ஆனால் அதுவரை ஏன் காத்திருக்க வேண்டும்? வாருங்கள் நம் தாகத்தை தணிக்க இப்போதே களத்தில் இறங்குவோம். இந்த கோடையை தர்பூசணியின் புத்துணர்ச்சியால் கொண்டாடுவோம்.

பொதுவாக தர்பூசணி வளர்க்க நிறைய இடம் பிடிக்கும். ஆனால் கவலை வேண்டாம் நாம் பார்க்க இருக்கும் பதிவின் மூலம் தொட்டிகளிலேயே தர்பூசணிகளை அறுவடை செய்யலாம். நம்மிடம் இடப்பற்றாக்குறை இருக்கிறதோ அல்லது இருக்கும் இடத்தை ஆற்றலுடன் கையாள விரும்புகிறீர்களோ எப்படிப்பார்த்தாலும் தொட்டிகளில் தர்பூசணி வளர்ப்பது சுவாரஸ்யமான ஒன்று தான். ஆனால் தர்பூசணி வளர்ப்புக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டிய சில குறிப்புகளுண்டு, இந்த பதிவின் மூலம் அவற்றை பார்ப்போம்.

 சரியான கொள்கலனை தேர்ந்தெடுப்பது

விதைகளை விதைப்பதற்கு முன் முதலும் முக்கியமுமாக நாம் கவனிக்க வேண்டியது வளர்க்க போகும் கொள்கலங்களின் அளவு. தர்பூசணி வளர்வதற்கு பெரிய கொள்கலங்கள் தேவைப்படுகின்றன. இவை சீக்கிரமாக வளரக்கூடியவை அதே நேரத்தில் நிறைய தண்ணீர் குடிக்ககூடியவை இதனால் சுமார் 20 லிட்டர் அல்லது அதற்கும் மேற்பட்ட அளவு கொண்ட தொட்டிகளையோ கொள்கலங்களையோ உபயோகிப்பது நல்லது. முக்கியமாக அவற்றில் நீர் வடிய வடிகால் துளைகள் இருக்க வேண்டும்.

மண்

கொள்கலனை தேர்ந்தெடுத்தபின் அதனை தொட்டி கலவையாலோ மண்ணல்லாத வேறு கலவையாலோ நிரப்பவேண்டும். தோட்டத்தில் இருக்கும் மண்ணை பயன்படுத்த கூடாது அதை பயன்படுத்தினால் சீக்கிரத்தில் இறுகிவிடும் தர்பூசணி செடிகளுக்கு மண் இறுகி இருப்பது அதன் வளர்ச்சியை தடுப்பதாக இருக்கும்.  இதுமட்டுமல்லாமல் தர்பூசணி செடி அதிகமான தொற்றுதலுக்கு எளிதாக ஆளாகிவிடும், இந்த மண்ணில் செடியை தாக்க கூடிய கிருமிகள் இருக்க அதிக வாய்ப்பு இருக்கின்றது எனவே இதனை தடுப்பது நல்லது.  நாம் உபயோகிக்கபோகும் மண்ணானது தளர்வாகவும் நன்கு நீர் வடியகூடியதாயும் இருக்க வேண்டும். செடியின் வேர் காற்றோட்டத்துடன் இருப்பதற்கு இது உதவுகிறது தர்பூசணி செடிகளுக்கு இது மிகவும் முக்கியமானது. இதோடுகூட இவைகளுக்கு நிறைய நைட்ரஜன் தேவைப்படுவதால் அதற்கேற்ப இயற்கை உரங்களை போட்டு இந்த கலவையை ஏற்படுத்துவது நல்லது. மீன் அமிலம், மண்புழு உரம் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

கொடி கொம்பு

தர்பூசணி வளர்ப்பில் நாம் முதலில் கவனிக்க்வேண்டிய ஒன்று இடம். தர்பூசணி செடிக்கு வளர நிறைய இடம் தேவைப்படுகின்றது. ஆனால் நம்மில் அநேகருக்கு அவ்வளவு இடம் இருப்பதில்லை. அதனால் தான இந்த பதிவை நீங்கள் படித்து கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் இச்செடி படர கண்டிப்பாக இடம் வேண்டும் அதற்காக நாம் இச்செடிக்கு ஒரு கொடி கொம்பை தரப்போகிறோம். இந்த விஷயத்தில் கொடியை தாங்க ஒரு கொம்பு போதாது, எனவே டிரெல்லிஸ் என்று அழைக்ககூடிய செங்குத்தான வலைபோன்ற அமைப்பை கொடி படர பயன்படுத்துவது நல்லது. நம் இடம் மற்றும் பொருள் வைத்து இந்த டிரெல்லிஸ் அமைப்பை நமக்கேற்றாற்போல் அமைத்துக்கொள்ளலாம்.

தர்பூசணி வகையை தேர்ந்தெடுப்பது.

அடுத்ததாக தொட்டிகளில் நன்கு வளரகூடிய எந்த வகை தர்பூசணியை வளர்க்கபோகிறோம் என்று தேர்ந்தெடுக்க வேண்டும். இயற்கையாகவே தர்பூசணி கொடிகள் தர்பூசணி பழத்தின் மொத்த எடையை தானே தாங்குமாறு வடிவமைக்கபடவில்லை. எனவே நாம் சிறிய ரக பழவகைகளை தேர்வு செய்ய வேண்டும். அவற்றுல் சில:

  • மூன் அண்ட் ஸ்டார்ஸ் வகை (Moon and Stars watermelon)
  • சுகர் பேபி வகை (Sugar Baby watermelon)
  • கிரிம்சன் சுவீட் வகை (Crimson Sweet watermelon)
  • எர்லி மூன்பீன் வகை (Early Moonbeam watermelon)
  • ஜூப்லீ வகை (Jubilee watermelon)
  • கோல்டன் மிட்ஜெட் வகை (Golden Midget watermelon)
  • ஜேட் ஸ்டார் வகை (Jade Star watermelon)
  • மில்லேனியம் வகை (Millennium watermelon)
  • ஆரஞ்ச் சுவீட் வகை (Orange Sweet watermelon)
  • சாலிடர் வகை (Solitaire watermelon)

நடுதல்

இப்போது விதையை நடுவதா இல்லை செடியை வாங்கி அல்லது விதையை முன்னமே வீட்டில் நட்டு செடி வளர்ந்த பின் அதை கொள்கலனின் நடுவதா என்று ஒரு கேள்வி அநேகருக்கு இருக்கலாம். ஏன் எங்களுக்கே இருந்தது. இரண்டையும் முயற்சி செய்யுங்கள் என்பதே எங்கள் பரிந்துரை. இந்த வகையில் ஒரு முறை கைகொடுக்காமல் போனாலும் இன்னொன்று கைகொடுக்கும். அதுவுமில்லாமல் இரண்டு செடிகளிலும் வெவ்வேறு காலத்தில் காய்ப்பதால் சீசன் முழுக்க அறுவடை இருந்துகொண்டே இருக்கும்.

எந்த முறையை பின்பற்றினாலும் விதை விதைக்கும் போது விதையை விட மூன்று மடங்கு ஆழத்தில் அதனை விதைக்க வேண்டும். இதை நீங்கள் நேரடியாக கொள்கலனிலேயே விதைக்கலாம் அல்லது மேல்சொன்னவாறு வீட்டிற்குள் ஒரு சிறு குடுவைக்குள் விதைத்து செடி முளைத்து சிறிது பெரிதானவுடன் கொள்கலனில் அதனை நடலாம். ஆனால் இப்படி நடும் போது வேர்கள் எந்த பாதிப்பும் அடையாதவாறு பார்த்துக்கொள்வது மிக அவசியமானது. இந்த விதை நடும் விஷயத்தை நீங்கள் உங்கள் பிள்ளைகளுடன் செய்யலாம் அவர்களுக்கு இது பிடித்த பகுதியாக இருக்கும்.

தண்ணீர் ஊற்றுதல்

இவை நிறைய தண்ணீர் குடிக்ககூடிய செடிகள் அதனால் தான் ஆங்கிலத்தில் இதனை வாட்டர் மெலன் என்று அழைக்கின்றனர். எனவே இதன் வேர்கள் நீரின்றி காயாமல் பார்த்துக்கொள்வது மிக முக்கியம். அதே சமயத்தில் அதிகமாக நீர் ஊற்றி வேர்கள் அழுகுமாறு செய்து விட கூடாது. இது இரண்டிற்கும் நடுவில் எப்படி சமநிலையில் இருப்பது என்று கேட்கிறீர்களா? அதற்கு எளிமையான ஒரு முறை உண்டு. தண்ணீர் தேவையை அறிந்துகொள்ள நமது விரலை 3-5 அங்குலங்கள் மண்ணில் விட்டு ஈரப்பதத்தை தெரிந்துகொள்ளலாம். ஒருவேளை காய்ந்துபோயிருந்தால் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று அர்த்தம்.

தண்ணீர் ஊற்றுவதில் நாம் கவனிக்கவேண்டிய மற்றொரு விஷயம் தண்ணீர் இலைகள் மேல் தங்காதவாறு பார்த்துக்கொள்வது. ஏனென்றால் ஈரப்பதம் பூஞ்சை தொற்றுகளை ஈர்க்கும். இதற்கு காலையில் தண்ணீர் ஊற்றுவது உதவி செய்யும் எப்படியென்றால் காலையில் இலைகள் மேல் இருக்கும் நீர் வெய்யில் ஏற ஏற வெப்பத்தில் காய்ந்துவிடும்.

தர்பூசணி செடிகளை கொள்கலங்களில் வெற்றிகரமாக வளர்ப்பதன் முதல் பகுதியை நாம் முடித்து விட்டோம். இந்த பதிவு உங்களுக்கு மிக பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம். இதன் அடுத்த பகுதியில் தர்பூசணி செடிகளை எப்படி பராமரிப்பது என்பதை பற்றி பார்ப்போம். எங்களின் பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள சப்ஸ்கிரைப் செய்யுங்கள். இதுமட்டுமல்லாமல் எங்களை நீங்கள் சமூக வலைதளங்களிலும் தொடரலாம். இன்னும் நிறைய விஷயங்களை வீடியோ வாயிலாக தெரிந்துகொள்ள எங்கள் யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள். உங்கள் சந்தேகங்களை கமென்டில் எங்களுக்கு தெரிய படுத்துங்கள். இந்த பதிவை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதையும் எங்களுக்கு தெரிய படுத்துங்கள். அடுத்த பதிவில் மீண்டும் உங்களை சந்திக்கிறோம் அதுவரை பயிரிட்டு மகிழுங்கள்!

One thought on “தர்பூசணி வளர்ப்பது எப்படி? [கொள்கலங்களில்]

உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள்...