எப்படி பராமரிப்பது?செடிகள்தர்பூசணிபழச்செடிகள்

தர்பூசணி பராமரிப்பில் தெரிய வேண்டிய 6 விஷயங்கள்

Spread the Green love!

தொட்டிகளில் தர்பூசணி வளர்ப்பது எப்படி என்பதை பற்றின எங்கள் முந்தின பதிவை  பார்த்து வளர்க்க தொடங்கி விட்டீர்களா? இல்லையா? இப்போதே ஆரம்பிப்போம் வாருங்கள். அதற்கு முன் தர்பூசணி பராமரிப்பு பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கிறது. தர்பூசணி செடிகளை(தொட்டிகளில் வளரும்) பராமரிப்பது கொஞ்சம் அதிக வேலை தான். யாருக்கு தான் கூடுதல் வேலை பிடிக்கும்? இருந்தும் அதனால் நாம் நட்ட செடியிலிருந்து நிறைய பழம் கிடைத்தால் நல்லா தானே இருக்கும்! சரி வாருங்கள் தர்பூசணி பராமரிப்பை பற்றி பார்ப்போம்.

தர்பூசணி வளர்ப்பை பற்றி தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உரங்கள்

இவை பெருந்தின்னிகள் அளவைப்பார்த்தாலே தெரிகின்றது இல்லையா! எனவே இவைகளுக்கு தொடர்ந்து நாம் ஊட்டச்சத்து அளித்துக்கொண்டே இருக்க வேண்டும். வாரத்திற்கு ஒருமுறையாவது நைட்ரஜன் பொட்டாசியம், ஆகியவை நிறைய இருக்கும் உரங்களை கொள்கலன்களில் இடுதல் அவசியமானது. அதிலும் திரவ உரங்களை உபயோகிப்பது நல்லது. காய் காய்க்க ஆரம்பித்ததும் நைட்ரஜன் குறைவாயிருக்கும் உரங்கள் பயன்படுத்த வேண்டும். திரவ கடல் பாசி உரத்தை பயன்படுத்திப்பாருங்கள்.

கத்தரித்தல்

இதை பற்றி நம்மில் அனேகருக்கு தெரிவதும் கிடையாது அதை பற்றி யோசிப்பதும் கிடையாது. இதில் தப்பொன்றும் கிடையாது இதன் பயன்கள் தெரியாததால் அதை செய்யாமலிருந்தோம் இப்போது தெரியப்போகிறது செய்யவும் போகிறோம். எதை கத்தரிப்பது என பார்ப்போம்: தர்பூசணி செடிகளுக்கு மற்ற படரும் செடிகளை போன்று ஆங்காங்கே வேர்கள் முளைக்காது. இவை ஆணிவேர் கொண்டவை எனவே எவ்வளவு அதிகமாய் கிளைகள் விடுகிறதோ அவ்வளவு அதிகமாய் செடிகள் பலவீனமாகும். எனவே முக்கியமான கிளைகளை தேர்ந்தெடுத்து அவற்றிலிருந்து முளைக்கும் மற்ற கிளைகளை வளர விடாமல் ஆரம்பத்திலேயே கத்தரிக்க வேண்டும். இதுமட்டுமல்லாமல் நோய் தொற்றியிருக்கும் கிளைகளையும்,  சேதமடைந்த கிளைகளையும் நறுக்கிவிடலாம்.

மகரந்த சேர்க்கை

தர்பூசணி செடிகள் ஆண் பூக்கள்,பெண் பூக்கள் என இருவேறு பூக்களை உண்டுபண்ணுகின்றன. பொதுவாக இவற்றின் மகரந்த சேர்க்கைக்கு தேனீக்கள் மற்றும் பட்டாம்பூச்சிகள் ஆகியவை உதவுகின்றன. ஆனால் நம்மில் அனேகர் நகரப்பகுதிகளில் வாழ்கிறோம் எனவே இவற்றை பார்க்கமுடிவதே இல்லை.  அதனால் நாமே மரகந்த சேர்க்கைக்கு உதவ போகிறோம். பெண் பூக்களில் சின்ன தர்பூசணி போன்ற வடிவம் இருக்கும். ஆண் பூக்களில் இந்த வடிவம் காணப்படுவதில்லை அதுமட்டுமல்லாமல் ஆண் பூக்களே செடியில் நிறைய காணப்படும். ஒரு ஆண் பூவை எடுத்து அதனை பெண் பூவின் மீது மகரந்தம் பரவுமாறு தேய்த்து விட வேண்டும் அவ்வளவு தான். மகரந்த சேர்க்கை நடந்து சுமார் 40 நாட்களில் பழுத்த பழம் நமக்கு கிடைக்கும்.

                                             ஆண் பூ

நோய்தொற்று மற்றும் பூச்சி தாக்குதல்கள்

பொதுவாக தொட்டிகளிலும் கொள்கலன்களிலும் வளர்க்கப்படும் தர்பூசணி செடிகளை பராமரிப்பது என்பது எளிதான ஒன்று. இருந்தாலும் அதிகமான வெப்பமோ, ஈரப்பதமோ, குளிரான தட்ப வெப்ப நிலைகளில் இருக்கும்போது நோய் தொற்றுக்கு எளிமையாக ஆளாகின்றன. வெள்ளரி செடிகளை தாக்கும் அஃபிட்ஸ், வெள்ளரி வண்டுகள் போன்ற பூச்சிகளும் இதனை தாக்க வாய்ப்புள்ளது. தோட்டமண் அல்லாது வேறு மண் பயன்படுத்துவதன் மூலம் வேர் தொற்றுகளை தவிர்க்கலாம்.

நத்தைகளும், எலி போன்ற கொரித்து தின்னும் பிராணிகளும் செடியையும், பழத்தையும் சேதப்படுத்தக்கூடும். நத்தைகளை கைகளால் நீக்கி விடலாம். எலிகளால் வரும் தொல்லையை தவிர்க்க செடியை செங்குத்தாக பரவ விடுவதும், பூனை வளர்ப்பதும் உதவும். அதுமட்டுமல்லாது பூனை வளர்ப்பது பழங்களை பறவைகளிடத்திலிருந்தும் பாதுகாக்கும்.

பழம் மட்டும் செடிக்கு ஆதரவு அளித்தல்

காய் காய்க்க தொடங்கியதும் அதை தாங்க அதற்கு ஆதரவாக துணியையோ, பையையோ வைக்க வேண்டும். நல்ல தரமான பழங்களை பெற சிறந்த வழி ஒரே செடியில் நிறைய காய்களை வளரவிடக்கூடாது. பெரிய பழ வகை செடிகளில் 2-3 பழங்களும் சிறிய பழ வகை செடிகளில் 4-5 பழங்களும் வளரவிடுவது நல்லது. நல்ல ருசியுள்ள பழங்களை பெற பழங்கள் முழு அளவை அடைந்ததும் ஊற்றும் தண்ணீரின் அளவை குறைத்து விட வேண்டும். ஆனால் ரொம்பவும் குறைத்து விடவும் கூடாது.

அறுவடை

அப்பாடா! கடைசியாக நாம் செய்த எல்லா வேலைக்கும் பலன் கிடைக்கபோகிறது. பொதுவாக சீதோஷணம், தட்பவெப்பம் போன்றவற்றை சார்ந்து விதை விதைத்ததிலிருந்து பழம் பழுக்க சுமார் 80-90 நாட்களும், பூ பூத்ததிலிருந்து சுமார் 30-50 நாட்களும் ஆகும். பூ பூப்பதும் காய் காய்ப்பதும் தகுந்த தட்ப வெப்பம் நிலவும் வரை நடந்து கொண்டே இருக்கும். இவ்வாறு நீண்ட காலம் அறுவடை செய்துகொண்டே இருக்கலாம்.

பழம் பழுத்ததும் எதுவும் தனி சிறப்பாக தெரிவதில்லை. நறுமணத்திலோ பழத்தின் நிறத்திலோ எந்த மாற்றமும் தெரிவதில்லை. பழம் பழுத்து விட்டதா என தெரிந்துகொள்ள பழத்தை விரலால் தட்டி பாருங்கள். அப்படி தட்டும் போது ஒரு வெறுமையான சத்தம் வந்தால் பழம் பழுத்து விட்டது என அர்த்தம். இதனை அறிந்து கொள்ள இன்னும் இரண்டு முரைகளும் இருக்கிறது. கொடிச்சுருள் பாதி பொலிவிழந்தும் நிறமிழந்தும் காணப்பட்டாலோ, பழத்தின் அடிபாகம் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தை அடைந்தாலும் பழம் பழுத்து விட்டது என அறிந்து கொள்ளலாம்.

அவ்வளவு தாங்க கொள்கலன்களில் தர்பூசணி வளர்ப்பதற்கான அனைத்து வித்தைகளையும் நீங்கள் அறிந்து கொண்டீர்கள். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம். அப்படி இருந்தால் இதனை பகிர்வதன்மூலம் மற்றவர்களுக்கு உதவுங்கள். உங்கள் சந்தேகங்களை கமென்டின் மூலம் எங்களுக்கு தெரியபடுத்துங்கள்.

To read this in English click here

One thought on “தர்பூசணி பராமரிப்பில் தெரிய வேண்டிய 6 விஷயங்கள்

உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள்...