சீதா பழம் மரம் வளர்ப்பது எப்படி?

சீதா பழ மரம் வளர்ப்பது எப்படி? - ஆர்கானிக்காக
Spread the Green love!

90’s கிட்ஸ்களுக்கு தெரியும் இந்த பழத்தை பற்றி. எங்க ஜெனெரேஷனுக்கு இது பெரிய விஷயமாக தான் இருந்தது. எங்கள் வீட்டில் ஒரு சீதா மரம் இருந்தது. காய்க்கும் காலத்தில் சரமாரியாக காய்த்துக் கொட்டும். ஒவ்வொரு சீசனுக்கும் எக்கசெக்க பழங்களை சாப்பிட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் அது எவ்வளவு பெரிய ஆசீர்வாதம் என்பது புரியவில்லை. இப்போது இதை ஒன்று இரண்டு என காசு கொடுத்து வாங்கியும், பழத்தில் அந்த சுவை பெற முடியவில்லை. இப்போது தான் அந்த மரத்தின் அருமை தெரிகிறது.

Custard Apples
Pic by: Sujith Nair

இந்த ஜெனெரேஷன் குட்டி பசங்களுக்கு அந்த மரத்தின் அழகை ரசிப்பதற்கோ, பழம் பழுத்ததா என தினமும் காத்திருக்கும் காத்திருப்போ, குட்டி கோலி சைசிலிருந்து டென்னிஸ் பந்து அளவுக்கு அந்த பழம் படி படியாய் வளர்வதை ரசிப்பதற்கோ, பழங்களை திருடி தின்ன வரும் அணில்களுடன் போட்டி போடுவதற்கோ, அதன் பூக்களின் வாசத்தை அனுபவிப்பதற்கோ வாய்ப்பே கிடைப்பதில்லை. நீங்கள் இதற்கு முன் இம்மரத்தினை வளர்த்திருந்தால் நான் பேசுவது உங்களுக்கு புரிந்திருக்கும்.

Indian palm squirrel feeding on custard apple
Pic By: praveen pandian

போனது போகட்டும், கவலையை விடுங்கள். சீதா பழ மரம் வளர்ப்பது மிகவும் சுலபமானது தான். இது ரொம்ப அலட்டிக்கொள்ளாத மரம். இந்த பதிவில் இந்த மரத்தினை எப்படி வளர்ப்பது என என் அம்மாவிடம் நான் கேட்டறிந்தது, என் நண்பர்களிடம் கேட்டறிந்தது, நான் கற்றது என எல்லாவற்றையும் பகிர முயல்கிறேன். இந்த பதிவில் சீதா பழம் வளர்ப்பது எப்படி- ஆர்கானிக் (அங்கக முறையில்) என பார்ப்போம்.

(இதற்கான நிறைய தகவல்கள் என்னிடம் உள்ளது, ஆனால் எல்லாவற்றையும் இந்த பதிவிலேயே சொல்ல வேண்டுமென்றால் இந்த பதிவு நீண்டு கொண்டே போகும். அதனால் அடிப்படையான எல்லாவற்றையும் இந்த பதிவில் சொல்கிறேன். நீங்கள் விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள ஆசைப்படுபவராக இருந்தால் உங்களுக்கெனவே எல்லாவற்ரையும் தனி பதிவுகளில் எழுத முயல்கிறேன். )

சீதா பழம் ஒரு சின்ன அறிமுகம்:

நாம் சொந்தம் கொண்டாடும் இந்த பழம் உண்மையில் நமக்கு சொந்தமானதே கிடையாது. இந்த பழம் அமெரிக்காவின் வெப்பமண்டல பகுதியிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது. அதனால் இது வெப்பமண்டல பகுதிகளிலும், அதன் அருகிலுள்ள பகுதிகளிலும் நன்றாக வளர கூடியது. இதன் அறிவியல் பெயர் அன்னோனா ஸ்குவாமோசா(Annona squamosa).

இந்தியாவில் வளர்க்கப்படும்  சீதா ரகங்கள்:

இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு வகையான  சீதா பழங்கள் வளர்க்கப்படுகிறது. அவற்றுள் சில:

 • சிவப்பு சீதா
 • ஹைப்ரிட்
 • பாலநகர்
 • வாஷிங்டன்,
 • புரந்தர்
 • அட்டெமோயா
 • பிங்க்ஸ் மாமத்

சீதா பழம் மரம் வளர்ப்பது எப்படி?

எப்படி வளர்ப்பது என்னும் விவரங்களுக்குள் நுழைவதற்கு முன் இந்த மரத்தை பற்றி நீங்கள் இன்னும் சில விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. அவை பின்வருமாறு:

 • சீதா பழ மரம் வருடாந்தரம் இலை உதிர்க்க கூடியது
 • இவை வெப்பமண்டல பகுதியை சார்ந்தது என்பது நமக்கு தெரியும், எனவே அவை வறட்சியிலும், வெப்பமான பகுதிகளிலும் நன்றாகவே வளரும்.
 • மேற்கண்ட காரணத்தால், குளிர் அதிகம் உள்ள போது இதன் வளர்ச்சி குன்றியே இருக்கும்.
 • இவை பூ வைக்கும் போது இதற்கு உலர்ந்த, வெப்பமிகுந்த சூழலும், காய் வைக்கும் போது கொஞ்சம் காற்றில் ஈரப்பதம் இருப்பது அவசியம்.

இப்போது நாம் இந்த செடியை பற்றி இன்னும் கொஞ்சம் புரிந்து கொண்டிருப்போம். எனவே மேற்கண்ட வற்றில் ஏதேனும் பிரச்சனைகளை கண்டால் என்ன காரணம் என்று உங்களுக்கு தெரியும்.

https://www.flickr.com/photos/[email protected]/16560728532/in/photolist-gjxncp-pQ4riX-aw1oDf-fWDMSh-3vRdP-8Tihqj-nsDDy-2dLwuCE-6vVfDV-hJJFR-fPpbcb-7tdXEd-yxdtH-28VDGWH-5iAzgn-dqAZ4F-rh8g4u-kJXQ3K-28DetPp-4jEre-2doYNyx-78F4na-azsZQ8-2b2RRpV-osRkA9-9pCEzD-TBstPa-7ckvJF-iqdyJ8-XJZQ5H-bbzAc8-cnHNc3-dfMU1W-6Ksjo9-MQWKzM-5AMDex-req4Ch-nZ1TQ-aiNqkd-fdrmAJ-6vjS7w-PSa5aM-czmRBW-rkRm5c-W3oTt-RutocQ-g23Ayd-caCMRw-bPSMNR-rDYKBB/
Pic by: AshCian

தோட்டத்தில் வளர்ப்பது எப்படி?

நம் தளத்தை பின்பற்றுபவர்கள் அநேகர்  கொள்கலன்களில் செடிகளை வளர்ப்பதை பதிவிடுவதோடு, தோட்டத்திலும் எப்படி வளர்ப்பது என பதிவிட சொல்லி கேட்கின்றனர்.

எனவே அவர்களுக்கான பகுதி தான் இது.

மண்:

 • இந்த தாவரம் எல்லா மண்ணிலும் வளரும். இதற்கென தனி விருப்பு வெறுப்புகள் இல்லை. (நான் தான் இது அலட்டிக்கொள்ளாத மரம் என்று சொன்னேனே!)
 • ஆனால் இவற்றால் தண்ணீர் தேங்குவதை மட்டும் பொறுத்துக்கொள்ள முடியாது
 • எனவே நன்கு நீர் வடியக்கூடிய ஒரு மண் கலவையில் இதை வளர்ப்பது நல்லது.
 • இதற்கு செம்மண் அல்லது தோட்ட மண், மணல், மற்றும் எரு, மட்கும் உரம் எல்லாவற்றையும் கலந்து ஒரு கலவையை செய்துகொள்ளுங்கள்
 • மண்: உரம் : மணல் பகுதி வீதம் 40 : 20: 20 இருப்பது நல்லது.

இப்போது இதனை நடப்போகும் இடத்தை எப்படி தயார் செய்வது என பார்ப்போம்

நடுதல்:

 • நல்ல சூரிய ஒளியும், காற்றோட்டமும் உள்ள இடத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்
 • இதற்கு முன் அந்த இடத்தில் கத்தரிக்காய், குடை மிளகாய், தக்காளி, உருளை கிழங்கு போன்ற செடிகளை வளர்த்திருந்தால் அந்த இடத்தை தவிர்ப்பது நல்லது. இது பாக்டீரியல் வில்ட் நோய் தாக்குவதிலிருந்து செடியை காப்பாற்றும்
 • நாம் மேலே சொன்னது போல இதற்கு நன்கு நீர் வடிய கூடிய தளம் தேவை. அதை உருவாக்குவோம் வாருங்கள்
 • 60x60x60 செமீ என்கின்ற அளவில் ஒரு குழியை தோண்டி கொள்ளுங்கள்
 • பின்னர் அந்த குழியை வெய்யிலில் 4 நாட்கள் வரை காய விடுங்கள். இது அந்த குழியை தூய்மை படுத்தும்.
 • பின்னர் நாம் மேலே தயாரித்த மண் கலவையை அதில் கொட்டுங்கள்

எல்லாம் ரெடி. இப்போது செடி நடுவது தான் பாக்கி. ஆமாம் செடி எங்கே?

செடியை தயார் செய்தல்:

இதை முன்னமே சொல்லவேண்டுமல்லவா? என நீங்கள் யோசிப்பது சரி தான். ஆனால் நாம் செடி எப்படி முளைப்பிப்பது என பார்த்து விட்டு மற்ற முக்கியமான குறிப்புகளை பார்க்க மறந்து விடுகிறோம். அதனால் தான் அதனை பின்னால் சொல்லலாம் என விட்டு விட்டேன்.

விதைகளிலிருந்து சீதா செடையை வளர்ப்பது எப்படி

சீதா பழங்களில் எக்கசெக்க விதைகள் இருக்கும். எனவே அதிலிருந்து செடி வளர்ப்பது என்பது சுலபம் தான். அனால் இதற்கு நிறைய பொறுமை அவசியம். பின் வரும் குறிப்புகளை பின்பற்றுங்கள்:

 • நீங்கள் வாங்கும் பழத்திலிருந்து விதைகளை எடுத்துக்கொள்ளுங்கள்
 • விதைகளை 24 மணி நேரம் நீரில் ஊற வையுங்கள்
 • அடுத்த நாள் சில விதைகள் பாத்திரத்தின் கீழே தங்கியிருப்பதை பார்க்க முடியும். அவை தான் நல்ல விதைகள்
 • சில விதைகள் மேலே மிதக்கும் அவற்றை எறிந்து விடுங்கள். அவற்றால் செடி முளைப்பிக்க முடியாது.
 • நல்ல விதைகளை எடுத்து நேரடியாக மண்ணில்(தொட்டியிலோ, தோட்டத்திலோ) நடலாம்.
 • இதற்கு விரலால் ஒரு சிறு குழியை செய்து அதனுள் விதையை போட்டு அதனை மூடி விடுங்கள்
 • மண் காயாமல் அதற்கு தொடர்ந்து நீர் ஊற்றி வாருங்கள்
 • 4 விதைகளை விதைத்தால் 2 தான் முளைக்கும்
 • இது இல்லாமல் டிஷ்யூ பேப்பரில் முளைக்க வைக்கும் முறையையும் பின்பற்றலாம்
 • எந்த முறையை பின்பற்றினாலும் விதைகள் முளைத்து வர 2-4 வாரங்கள் ஆகும்

விதைகளை எப்படி எல்லாம் முளைப்பிக்கலாம் என்று வேறொரு பதிவில் பதிவிடுகிறேன்.

சீதா பழ மரத்தை கிளையிலிருந்து எப்படி வளர்ப்பது?

கிளைகளிலிருந்து இம்மரத்தினை வளர்க்க முடியாது. ஆனால் பதிய முறையில் பதியம் போட்டு அதனை வளர்க்கலாம். பதியம் என்பது நன்கு வளர்ந்த செடியிலிருந்து ஆரோக்கியமான கிளை ஒன்றை தேர்ந்து எடுத்து, அதில் மண் பையை கட்டி, வேர் வர வைத்து, பின் அந்த கிளையிலிருந்து புது செடியை உருவாக்குவது

இம்முறையில் வளர்க்கப்படும் கன்றுகள் காய் காய்க்க நிறைய காலம் பிடிக்காது. எனவே இந்த முறையிலும் நீங்கள் வளர்க்கலாம்.

சீதா பழ மரத்தில் எப்படி பதியம் போடுவது அதனால் என்ன பயன் என்பதை பற்றி வேறொரு தனி பதிவில் பதிவிடுகிறேன்.

சீதா பழ கன்றுகளை நர்சரிகளிலிருந்து பெற்று வளர்ப்பது:

இந்த முறை தான் இருப்பதிலேயே மிகவும் சுலபமானது. அதோடு இந்த முறையில் நமக்கு தேவையான ரகங்களை தேடி வாங்கி வளர்க்க முடியும். வாங்கி அதனை கொள்கலன்களிலோ, தோட்டத்திலோ நட்டு வளர்க்கலாம்

சீதா பழத்தை தொட்டிகளில்(கொள்கலன்களில் வளர்ப்பது எப்படி):

இம்மரம் ஆழமாக வேர் விடுவதில்லை. எனவே இதனை தொட்டிகளில் வளர்ப்பது சுலபம் தான்.

 • மேலே கண்டது போல நல்ல நீர் வடிய கூட மண் கலவையை தயாரித்து கொள்ளுங்கள்
 • மேல் சொன்னது போல் செடியை வாங்கியோ விதையிலிருந்து வளர்த்தோ வைத்துக்கொள்ளுங்கள்
 • சின்ன தொட்டியிலிருந்து ஆரம்பித்து வளர வளர பெரிய தொட்டிக்கு மாற்றுங்கள்
 • இப்படி செய்வதன் மூலம் செடிக்கு தொடர்ந்து புது மண்ணும் அதனால் ஊட்டசத்தும் குறையாமல் பார்த்துக்கொள்ளலாம்.
 • தொட்டியில் வளர்ப்பதற்கேற்ப செடியை கவாத்து(கத்தரித்து) செய்து கொள்ளலாம்.
 • தொட்டிகளில் வளர்ப்பதால் ஊட்டசத்துகள் விரைவாக காலி ஆகி  விடும். எனவே அடிக்கடி உரமிடுதல் வேண்டும்
 • எல்லாவற்றுக்கும் மேல் முக்கியம், நிறைய தண்ணீர் ஊற்றாதீர்கள்

இதை பற்றியும் விரிவாக ஒரு தனி பதிவை விரைவில் பதிவிடுகிறேன்.

நீர் ஊற்றுதல்:

நாம் முன்னமே பார்த்தது போல இதற்கு நீர் தேங்குவது பிடிக்காது. நீர் தேங்கினால் வேர் அழுகி விடும். எனவே அதை மனதில் வைத்து நீர் ஊற்றுங்கள்

 • மேலிருக்கும் மண் 2-3 அங்குலம் உலர்ந்திருந்தால் மட்டும் நீர் ஊற்றுங்கள்
 • கோடை காலங்களில் அடிக்கடி நீர் ஊற்றலாம்
 • பூ வைக்கும் போதும், காய் வைக்கும் போதும் கொஞ்சம் நிறைய நீர் தேவை படும்
 • மற்ற படி இது வறட்சியிலும் கிண்ணென நிக்கும்

கவாத்து செய்தல்:

இவை 10-20 மீட்டர் வரை பெரிய மரங்களாக வளர கூடியவை. உங்களுக்கு பழம் பறிக்க எளிதாக இருக்க இதனை குட்டையாக வைத்துகொள்ள நினைத்தால் கவாத்து செய்து கொள்ளலாம்

 • செடியில் புது துளிர்கள் முளைக்கும் போதே அதனை கிள்ளி விடலாம்
 • இது நிறைய கிளைகள் முளைக்க ஊக்குவிக்கும்
 • அப்படி, இல்லையென்றால் செடி கொஞ்சம் நன்றாக வளர்ந்த பின்னரும் நேராய் வளரும் கிளைகளை கவாத்து செய்து விடலாம்

இது உங்கள் விருப்பம் தான்.

முடாக்கிடுவது:

முடாக்கு என்பது செடியின்/மரத்தின்  அடிபாகத்தை சுற்றி காய்ந்த இலை தழைகளை இடுவது. இது நீர் ஆவி ஆவதை குறைப்பதால் நீர் மேலாண்மைக்கு ஏற்றது. அதுமட்டுமல்லாமல் இது களைகள் முளைப்பதையும் தடுக்கும். அதோடு பல்லுயிர் பெருக்கத்திற்கும் பெரிதும் உதவும்.

அதுமட்டுமல்லாமல் குளிர் நிறைய இருக்கும் பகுதிகளில் முடாக்கிடுவது வேரினை குளிர் தாக்காமல் பாதுகாக்கும். உரமிடும் போது மட்டும் இலை தழைகளை ஒதுக்கி விட்டு இடுங்கள்

உரமிடுவது:

எல்லா செடிகளை போலவே இதற்கும் NPK என அழைக்கப்படும் நைட்ரஜன்- பொட்டாசியம்- பாஸ்பரஸ் ஊட்ட சத்து தேவை. சீதாவிற்கு 2:1:1 என்ற அளவில் NPK தேவைப்படுகிறது. இத்தாதுக்கள் உள்ள உரங்கள் சில பின்வருமாறு:

 • மாட்டு சாணம்/ ஆட்டு சாணம், எரு, மட்கு உரம் இவற்றை எல்லா வித செடிகளுக்கும் இடலாம்
 • மண்புழு உரத்திலும் நைட்ரஜன் அதிகமாக உள்ளதால் அதையும் இதற்கு இடலாம்
 • மண்ணிற்கு பஞ்சகாவியம் கொடுக்கலாம். இதில் இருக்கும் தாதுக்கள் தவிர, இது மற்ற தாதுக்களை மண்ணில் தங்க வைக்கும் நுண்ணுயிர் பெருக்கத்திற்கு உதவும்.
 • பொட்டாசியத்திற்கு வழக்கம் போல் வாழைப்பழ தோல் சிறந்தது அது மட்டுமல்லாமல் சாம்பல் இடுவதும் இதற்கு உதவும்
 • பாஸ்பரசிற்கு மீன் அமிலம் சேர்க்கலாம். மீன் அமிலத்தில் மற்ற ஊட்டசத்துக்களும் உள்ளது.
 • சாப்பிட்டு மீதமிருக்கும் மீன் முற்கள், கோழி எலும்புகள் ஆகியவற்றை அரைத்தும் செடிக்கு இடலாம். இதுவும் பாஸ்பரஸ் பெருக்கத்திற்கு உதவும்
 • வேப்பம்/ கடலை பிண்ணாக்கு இடுவதும் நைட்ரஜன் பெருக்கத்திற்கு உதவும்

மாதத்திற்கு 1-2 முறை உரமிடுங்கள்

செடி வளர வளர அதற்கேற்ப அதன் ஊட்டசத்து தேவைகளும் வளரும். எனவே உரத்தின் அளவினை அதற்கேற்ப அதிகரித்து கொண்டே வாருங்கள்.

பூ பூப்பது:

https://www.flickr.com/photos/3point141/7763051910/in/photolist-cPZESA-2fG9NSY-dqugTX-irGecD-dCiMos-9HD2yQ-rSVREx-92Keon-exTtbn-DsTRz-5Erbop-63s3c2-5ErdeP-WR7Kc-e6jHJf-exTqAi-238sD33-5EvtqU-63whKU-4JMDVx-24AVzy9-CF6uoq-2faEiez-ipTVT-ogM5vd-nZfoi-MWrjUX-gwHB7K-9jXWxR-ZHJrm7-dCiLjo-7pqhS3-7EC5xN-dCiKT7-qqhvLp-5Fiaxk-8QCiQ3-eGhFMA-p7H4SG-7yZKME-9n44pZ-dzFmem-qErLZq-qqbet7-aQFpPH-7jsevp-5og5gY-28pTj9X-dzzRUD-dceaZF
Pic by: 3Point141

பொதுவாக மே மாதத்தில் தான் சீதா மரம் பூ வைக்கும். இதன் பூக்களில் 3 இதழ்கள் தான் இருக்கும். இதழ்கள் நல்ல சதை பற்றுள்ளதாக இருக்கும். இதன் மணமும் நன்றாக இருக்கும். இதன்பூக்கள் பிரோட்டொகைனஸ் (Protogynus) என அழைக்கப்படுகிறது. அதாவது இந்த பூக்கள் பூத்தது முதல் 36 மணி நேரத்திற்கு பெண் பூக்களாக இருக்கும். அதற்கு பின் ஆண் பூக்களாக மாறிவிடும். விசித்திரம் இல்லையா!

பெண் பூக்கள் பேருக்கு ஏற்ப கூச்ச சுபாவமாக கொஞ்சம் குறைவாக விரிந்திருக்கும். ஆண் பூக்களோ பப்பரபானென நன்கு விரிந்திருக்கும். இதை வைத்து தான் இரண்டிற்கும் வித்தியாசம் கண்டு பிடிக்க முடியும். இதை எதற்கு கண்டு பிடிக்க வேண்டும் என்கிறீர்களா? அதை கீழே பார்ப்போம்.

மகரந்த சேர்க்கை:

நம்மில் அநேகருக்கு தெரியாத ஒன்று – இதன் பூக்கள் சுயமாக மகரந்த சேர்க்கை செய்யாது. அதாவது பூ பூத்தாலே பழம் காய்த்து விடாது. அதற்கு சில வேலைகள் செய்ய வேண்டும்.

இயற்கையில் இந்த வேலையை தேனீக்களும், பட்டாம்பூச்சிகளும் செய்யும். நாம் தான் அவற்றை கொன்று விட்டோமே எனவே அவற்றின் வேலையை நாம் தான் செய்ய வேண்டும்.

 • இதற்கு ஒரு பெயிண்ட் பிரஷினை எடுத்து கொள்ளுங்கள்
 • அதை கொண்டு ஆண் பூக்களை தேடி அதில் இருக்கும் மகரந்த துகள்களை சேமியுங்கள்
 • அதை பெண் பூக்கள் மீது பூசி விடுங்கள்
 • இதில் நாம் செய்யும் தவறு என்னவென்றால், ஆர்வ கோளாறில் எல்லா பூக்களுக்கும் இதை நாம் செய்து விடுவோம். ஆனால் அப்படி செய்ய கூடாது
 • அப்படி செய்தால் அவை எல்லம் காய் வைக்கும். இது மரத்திற்கு அழுத்தத்தை தந்து பழங்களின் தரத்தை கெடுத்து விடும்.

பழங்கள்:

பழத்தினை பற்றி சொல்லவே வேண்டாம். அதற்காக தானே நாம் வளர்க்கவே நினைக்கிறோம்! சுவை மட்டுமல்லாமல் இப்பழத்தில் நிறைய சத்துக்கள் அடங்கி இருக்கின்றன. இவை குறைந்த கொழுப்பையும், சோடியத்தையும், அதிகமான வைட்டமின் சி, இரும்பு, மாங்கனீஸ், மற்றும் பொட்டாசியத்தை கொண்டது.

 இப்பழத்திலுள்ள ஊட்டசத்துக்கள் மற்றும் அதன் பயன்களை பற்றி வேறொரு தனி பதிவில் பார்ப்போம்.

https://www.flickr.com/photos/mmbsingh/33696819238/in/photolist-TkF1o3-RHvHFM-21UwxdE-eRQh3B-8JwDV1-2biVM6p-hgSq9C-8y5vPN-giiTHD-9R7QtD-gDpjyu-7yVZDk-6FZZoX-4SeoDM-oenwcS-Lyc3F-rKuZnj-8fFtDy-JKvwSm-98r7MD-m2HLhd-JBaaCz-TCx3Rd-aEUggH-nZ1TQ-MQWKzM-m2GhMB-fMBP1N-7ckvJF-czmRBW-L74heh-dL4T7m-agpaDs-dcebya-b8JyZH-6RRVHJ-ZMwMBh-schc7u-L3bEf6-6yacLr-TPnxrg-nmBo4P-Vr6cxs-fdhbho-7jsguk-dkdKQz-cPZESA-2fG9NSY-dqugTX-irGecD
Pic by : MM Singh

அறுவடை:

மே மாதத்தில் பூக்கத்தொடங்கி ஆகஸ்டு-அக்டோபரில் அறுவடைக்கு தயாராகிவிடும்.

 • பழத்தின் நிறம் பச்சையிலிருந்து சாம்பல் பச்சைக்கு மாறும் போது பழம் பழுக்க துவங்கி விட்டது என தெரிந்து கொள்ளலாம்.
 • செடியிலேயே அதனை முழுதாய் பழுக்க விட்டு அதன் தோலில் வெடிப்பு வந்தவுடனும் பறித்து உண்ணலாம். ஆனால் நமக்கு முன் இதை அணில், வௌவ்வால், காக்கை, கிளி போன்ற விலங்குகள் உண்டு விடும்.
 • எனவே முழுதாய் பழுக்கும் முன் அறுவடை செய்வது நல்லது. இவை அறுவடை செய்த 2-3 நாட்களிலேயே பழுத்து, உண்ண தயாராகி விடும்.

இப்பதிவை இதற்கும் மேல் இழுத்துக்கொண்டே போனால் நன்றாக இருக்காது. எனவே சீதா வளர்ப்பில் எல்லாரும் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றியும் அவற்றை எப்படி எதிர் கொள்வது என்பதை பற்றியும் மற்றொரு பதிவில் பதிவிடுகிறேன்.

இதை தவிர உங்களிடம் வேறு ஏதேனும் டிப்ஸ் இருக்கிறதா? அனைவருக்கும் அது பயன்தர கமெண்டில் அதை தெரியப்படுத்துங்கள். ஏதேனும் சந்தேகங்களோ, கேள்விகளோ இருக்கிறதா? தொடர்பு பக்கத்தின் மூலமாகவோ, இடப்பக்கத்திலுள்ள WhatsApp Iconஐ கிளிக் செய்தும் என்னை தொடர்பு கொள்ளலாம்.

அநேகர் என்னை தொடர்பு கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறீர்கள். உங்கள் அனைவருடைய அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி!

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் சுற்றத்திற்கு இதை பகிர்ந்து ஆர்கானிக் பசுமை அன்பை பரப்பலாமே!

ஒன்றாய் விதைப்போம்! ஒன்றாய் வளர்வோம்! நன்றி

இது ஒரு இரு மொழி பதிவு. To read this post in English click here!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது