கொள்கலன் தோட்டம்தோட்டம்

கொள்கலன் தோட்டத்தின் அடிப்படைகள்

Spread the Green love!

வணக்கம் நாம் இன்றைக்கு பார்க்க போகும் தலைப்பு Container Gardening அதாவது கொள்கலன்களில் தோட்டம்.

இன்றைய சூழலில் மக்கள் இந்த கொள்கலன் தோட்டங்களில் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு முக்கியமான காரணம் இடம் தான். தொட்டிகளில் செடிகளை வளர்ப்பதன் மூலம் இடப்பற்றாக்குறையை நம்மால் சமாளிக்க முடியும். ஏற்கனவே தோட்டம் வைத்திருப்பவர்களுக்கும் இது செடி வளர்க்க கூடுதல் இடத்தை கொடுக்கின்றது. இதில் அப்படி என்னதான் பெரிதாக வளர்த்திட முடியும் என்று தானே நினைக்கிறீர்கள்! எல்லாமே வளர்க்கலாம் என்பது தான் இங்கு நமக்கு கூடுதல் அனுகூலம். ஆம் முளைக்கீரையிலிருந்து பழங்காய்க்கும் மரம் வரை இந்த முறையில் எல்லாமே வளர்க்கலாம்.

கேட்க நல்லாருக்கு இல்லையா? சரி அப்படியே இதற்கான சில முக்கிய குறிப்புகளை பார்ப்போம். தொட்டிகளில் அல்லது கொள்கலன்களில் தோட்டம் அமைப்பதற்கு நாம் முக்கியமாக 5 விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

  1. இடம்
  2. நீர் ஊற்றுதல்
  3. சிறந்த கொள்கலன்கள்
  4. வடிகால்
  5. வளர்க்கும் மண்

நாம் ஒன்றொன்றாக பார்ப்போம்.

இடம்

பொதுவாக எல்லா காய்கறிகளுக்கும் நிறைய சூரிய வெளிச்சம் தேவைப்படும். எனவே 5-6 மணி  நேரம் வரை சூரிய வெளிச்சம் கிடைக்குமாறு இருக்கும் இடத்தை தேர்வு செய்ய வேண்டும். இதற்கு தொட்டிகளை மேற்கு அல்லது தெற்கு நோக்கி இருக்குமாறு வைப்பது நல்லது. தொட்டிகளை வீட்டிற்கு அருகாமையில் அதாவது கைக்கெட்டும் தூரத்தில் வைத்துக்கொள்வது அதனை பராமரிக்க உதவுகின்றது. ஜன்னல் லாஃப்டுகளிலும், பலகணிகளிலும் செடிகளை வளர்ப்பது செடி வளர்க்க துவங்குவதற்கு சிறந்த வழியாகும். ஆனால் தொட்டிகள் காற்றில் கீழே விழாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

தண்ணீர் ஊற்றுதல்

தொட்டிகளில் வளர்க்கப்படும் செடிகளுக்கு நிலத்து நீர் கிடைக்காததால் தண்ணீர் ஊற்றுவது என்பது அவைகளுக்கு மிகவும் பிரதானமானது. வெப்ப காலங்களில் நாளிற்கு இரண்டு முறை தண்ணீர் ஊற்றுவது செடிகளை காய்ந்து போகாமல் காக்கிறது. செடிகள் வறட்சியால் காயாமல் இருக்க வேர் ஈரமாகும் வரை நீர் ஊற்றுவது அவசியமானது. நமது வசதிக்காக சொட்டு நீர் பாசனம் செய்துகொள்வதும் நாம் வீட்டில் இல்லாத நேரங்களில் நமக்கு கைகொடுக்கும்.

சிறந்த கொள்கலன்களை தேர்வு செய்தல்

தொட்டிகள்/கொள்கலன்கள் எல்லா அளவுகளிலும், வடிவங்களிலும், ரகங்களிலும் கிடைக்கின்றன. மண், நெகிழி(PLASTiC) மற்றும் மரத்திலான தொட்டிகளையே இதுவரை பரிசோதிக்கப்பட்டும் பயன்படுத்தப்பட்டும் வருகின்றனர். ஆனால் நீங்கள் இங்கு உங்கள் கற்பனை குதிரையை அவிழ்த்து விடலாம். கொள்கலன்கள் சுத்தமாகவும், நீண்ட காலம் பயன்படுத்தினால் ஏதும் ரசாயனக்ங்களை வெளியிடாதவாறும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பெரிய கொள்கலன்களில் நமது சூழலில் வளரும் குட்டை வகை மரங்களை கூட வளர்க்கலாம். வெர்டிகல் கார்டன் எனப்படும் செங்குதான தோட்டம் அமைப்பதிலும் நிறைய சாதகங்கள் இருக்கின்றன. இந்த வகை தோட்டங்களை சுவரின் பக்கத்தில் அமைப்பதன் மூலம் நாம் இடத்தை சாமர்த்தியமாக பயன்படுத்த உதவுவதோடு இரவு நேரங்களில் செடிகளை கதகதப்புடனும் வைத்துக்கொள்ள உதவுகின்றன.

வடிகால்

நீர் வடிய நல்ல வடிகால் அமைப்பது மிகவும் அவசியமானது. வேரில் நீர் தேங்கினால் செடிக்ள் அழுகி விடும். எனவே தொட்டிகளில் போதுமான வடிகால் துளைகள் இருக்குமாறும் அவை அடைந்திருக்காதவாறும் பார்த்துக்கொள்ள வேண்டும். தொட்டியின் அடி பாகத்தில் மெல்லிய அடுக்கு கற்கள் அல்லது உடைந்த பானைத்துண்டுகளை போடுவது இதற்கு உதவும். இப்படி செய்வதன் மூலம் அந்த துளைகளின் வழியாய் மண் வெளியேறாதவாறும் அதே சமயம் நீர் வடிய வழியும் அமைக்கலாம்.

வளர்க்கும் மண்

தொட்டிகளை தொட்டிக்கலவை மண் அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட கம்போஸ்டு (COMPOST) எனப்படும் கலப்புரம் கொண்டு நிரப்ப வேண்டும். நம் தொட்டத்தில்(நிலத்தில்) இருக்கும் மண் பொதுவாக கனமாக இருப்பதுடன், மண் வாழ் தொற்றுகளும், களைகளும் இருப்பதால் அதனை தொட்டிகளில் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இலகுவான மற்றும் ஈரப்பதம் தங்கக்கூடிய கலவையை பயன்படுத்துவதே சிறந்தது. ஒவ்வொரு பருவகாலத்திற்கும் அதில் சத்து சேர்க்க உரமும் மண் கலவையும் சேர்ப்பது அவசியம்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம்! எங்களுக்கு தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்களை சந்திக்கிறோம். அதுவரை பயிரிட்டு மகிழுங்கள் நன்றி!

One thought on “கொள்கலன் தோட்டத்தின் அடிப்படைகள்

உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள்...