கறிவேப்பிலை வளர்ப்பது எப்படி?

கறிவேப்பிலை வளர்ப்பது எப்படி?
Spread the Green love!

தோட்டத்தில் கறிவேப்பிலை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு

கறிவேப்பிலை இல்லாமல் நம் நாட்டில் சமையலே கிடையாது. இப்படி நாம் மார்க்கெட்டில் வாங்கும் கறிவேப்பிலை கடைசியாக அறுவடை வரையும் கூட மருந்து தெளிக்கப்பட்டு தான் நம் கைக்கு வருகிறது. இதற்கு எக்கசெக்க காரணங்கள் கூறப்பட்டாலும் ரசாயனம் ரசாயனம் தானே. இந்த ரசாயனங்களிலிருந்து நம்மையும் நம் குடும்பத்தையும் காப்பாற்றும் ஒரு சிறு பகுதியாக கறிவேப்பிலையை நாம் வீட்டிலேயே வளர்க்கலாம்.

Fresh

கறிவேப்பிலையை வீட்டில் வளர்ப்பது பெரிய ராக்கெட் சயின்ஸ் இல்லை. இந்த பதிவில் அதனை எப்படி தோட்டத்தில் வளர்ப்பது, அதனை எப்படி பராமரிப்பது, என்ன உரமிடுவது, அதை தாக்கும் நோய்கள்/பூச்சிகள் என்னென்ன, அதற்கு என்ன செய்வது என எல்லாவற்றையும் பார்ப்போம்.(இதனை தொட்டிகளிலும் வளர்க்க முடியும், தற்போது அதை முயற்சி செய்து வருகிறேன். அது வெற்றி அடைந்ததும் அதை பற்றியும் ஒரு பதிவை இடுகிறேன்)

கறிவேப்பிலை ஒரு அறிமுகம்:

இத்தாவரத்திற்கு அறிமுகமே தேவையில்லை. இது இந்தியாவை பூர்வீகமாக கொண்டது. இது வெப்பமண்டல தாவரம். அதாவது இது ஒரு ஒளி/வெப்ப விரும்பி. இதன் அறிவியல் பெயர் (Bergera Koenigii)பெர்கெரா கொயினிகிஐ . இதன் இதர பெயர்கள் : கறி பட்டா, கடி பட்டா, கரிவேப்பாய், கறி இலை, கறிவேபல்லா, கறி பட்டா மரம், முர்ராயா கொயினிகிஐ, இனிப்பு வேம்பு மரம்.

வீட்டில் கறிவேப்பிலை வளர்ப்பது எப்படி?

இது பொதுவாக 6 மீட்டருக்கும் மேல் வளர கூடியது. அப்படி இவை அவ்வளவு உயரம் வளரும் போது இதன் தண்டு 40செமீ அளவுக்கு அகலமாய் வளரும்.

இதன் வகைகள்:

இந்த தாவரத்தில் மூன்று முக்கிய வகைகள் உள்ளன

வழக்கமான ரகம்: இவை வேகமாக வளரும், நமக்கு மார்க்கெட்டில் கிடைப்பது இவ்வகை தான்.

குட்டை ரகம்: இது பெரிய மரமாக வளராது, இலைகளும் பெரியதாய் இருக்குமாம்.

கம்தி வகை: இந்த வகை தான் மற்ற இரண்டையும் விட அடர் மணம் கொண்டது. இது மிக மெதுவாக வளரும். இலைகளும் அடர்த்தியாக இருக்கும்.

இவற்றை பற்றி நான் படித்ததோடு சரி, நம் ஊரில் பொதுவாக இரண்டு பிரிவாக பிரிப்பர். ஒன்று காட்டு வகை- காட்டில் மட்டும் வளரகூடியது, மற்றொன்று நாட்டு வகை- நாம் பயன்படுத்தும் வகை.

வளர்க்க தேவையான மண்:

a taste catalyst...

இதற்கு நல்ல நீர் வடிய கூடிய மண் கலவை இருந்தால் நன்றாக, பிரச்சனை கொடுக்காமல் வளரும்.

 • இச்செடிக்கு செம்மண் ரொம்ப பிடிக்கும். அதனால், செம்மண், மணல் கிடைத்தால் அதையும், இல்லாவிட்டால் கொக்கோ பீட், கலவையை எடுத்துகொள்ளுங்கள்
 • இதன் கூட எரு, மட்கின உரம், இவற்றையும் கலந்து
 • நீங்கள் நடப்போகும் இடத்தில் ஒரு குழி தோண்டி இந்த கலவையை அதில் கொட்டி விடுங்கள்.
 • இது எதற்கு என்றால், மண் உதிரியாய் இருப்பது அதில் நிறைய நீர் தங்குவதை தடுப்பதோடு, இளஞ்செடிகளின் வேர்கள் வளரவும் மிக உதவியாக இருக்கும்.

கறிவேப்பிலை செடியை எப்படி வளர்ப்பது?

 • கறிவேப்பிலையை நீங்கள் விதையிலிருந்தும் வளர்க்கலாம், கிளைகளிலிருந்தும் வளர்க்கலாம். செடி முளைத்து நன்றாய் வளர 1-2 வருடங்கள் பிடிக்கும்.
 • என்னை கேட்டால் இதனை விதைகளிலிருந்து தொடங்குவதை பரிந்துரைக்க மாட்டேன். அதற்கு நிறைய பொறுமை தேவை. அதுமட்டுமல்லாமல் இம்முறையில் வெற்றியும் குறைவு தான்.
 • இவ்விரண்டு முறைகளை விட நர்சரிகளில் ஒரு கன்றை வாங்கி வளர்ப்பது எளிதானது.

மற்றொரு பதிவில் மேலிருக்கும் இரண்டு முறைகளையும் பற்றி விரைவில் எழுதுகிறேன்.

Vermicompost

உரமிடுதல்:

நட்டவுடன் செடிக்கு உரத்தை அள்ளி வீச வேண்டியதில்லை. நாம் தான் கலவையிலேயே உரத்தை கலந்துள்ளோமே. சில காலம்(செடி நன்றாக சூழலுக்கு ஒத்துபோன பின்னர்) சென்ற பின்னர் 15 நாட்களுக்கு ஒரு முறை உரமளிப்பது நல்லது.

மண் புழு உரம்:

 • மண் புழு உரத்தையோ, வேறு ஏதாவது மட்கும் உரத்தையோ அளிக்கலாம்.
 • இலைகள் வளர்வதற்கான நைட்ரஜனை இவை செடிக்கு தருகின்றன.
 • இதனை இட மேல்தட்டு மண்ணை கிளறி அதில் உரமிட்டு மீண்டும் ஒரு முறை கிளறி விட்டு தண்ணீர் ஊற்றுங்கள்

வெங்காயத்தோல்

நாம் வேண்டாமென வீசி விடும் வெங்காய தோல் இந்த செடிக்கு ஆச்சரியப்படும் அளவில் உதவுகிறது.

onion skin
 • பொதுவாக நாம் எறிந்து விட வைத்திருக்கும் வெங்காய தோலையும், அழுகின வெங்காயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்
 • அவற்றை மிக்சியில் போட்டு அரைத்து எடுத்து அதனுடன் தண்ணீர் கலந்துகொள்ளுங்கள்
 • இந்த கலவையை மாதத்திற்கு 1-2 முறை செடிக்கு ஊற்றலாம்.
 • இது செடி நன்றாக தழைத்து வளர உதவும்.

வேப்பம்/கடலை பிண்ணாக்கு

 • வேப்பம் பிண்ணாக்கையோ, கடலை பிண்ணாக்கையோ எது விலை குறைவாக உள்ளது என பார்த்து அதை  வாங்கிகொள்ளுங்கள்
 • அதை தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரினை செடிக்கு ஊற்றலாம்
 • இதுவும் செடிக்கு தேவையான நைட்ரஜனை அதற்கு அளித்து நிறைய இலைகள் வளர உதவும்

பொட்டாசியம்

 • இலைகள் நன்றாய் வளரவும், ஒளிசேர்க்கைக்கும் பொட்டசியம் மிகவும் முக்கியமானது
 • இதற்கு சாம்பல் கிடைத்தாலும், கரிதுண்டு கிடைத்தால் அதை தூளாக்கி செடிக்கு இடலாம்.

மோர் ஊற்றுங்கள் மக்களே:

 • மனிதனுக்கு மட்டுமல்ல மரத்துக்கும் மோர் கொடுக்கலாம். ஆம் கறிவேப்பிலைக்கு வீட்டில் தயாரிக்க கூடிய மிகவும் எளிதான உரமிது.
 • கறிவேப்பிலைக்கு காரம்(அசிடிட்டி) மிகவும் தேவை. மோர் இதற்கு பெரிதும் உதவுகிறது.
 • ஆனால் இதற்கு நன்கு புளித்த மோரினை தான் பயன்படுத்த வேண்டும்.

 நீர் ஊற்றுவது:

 • நாம் முன்னமே பார்த்தது போல இச்செடி நிறைய தண்ணீர் தேக்கத்தில் இருக்க கூடாது
 • அப்படி இருந்தால் இதன் வேர்கள் அழுகி விடும். எனவே இதற்கு தேவையான தண்ணீரை மட்டும் ஊற்றுவது நல்லது.
 • நிலம் காய்ந்த பிறகே நீர் ஊற்றுங்கள்
 • குளிர் காலத்தில் இதன் வளர்ச்சி குறைவாகவே இருக்கும் அப்போது நீரும் அவ்வளவு தேவைப்படாது.

பராமரிப்பு குறிப்புகள்:

இளம் செடிகளுக்கு அதிக வெய்யில் தாங்காது. நிறைய நீரும் தாங்காது.

Curry leaf berries / करी पत्ती जामुन

கத்தரித்தல்(கவாத்து செய்தல்):

 • செடி நன்றாக வளர்ந்து வரும் போது அதன் முளைக்கும் துளிரை கிள்ளி விடுங்கள். இது செடியின் உயர வளர்ச்சியை கட்டுப்படுத்தும்
 • அதுமட்டுமல்லாமல் செடி புதரை போல அடர்த்தியாய் வளர, பக்கவாட்டில் கிளைகள் முளைக்க இது தூண்டும்.
 • எவ்வளவு அடர்த்தியாக புதரை போன்று வளர்கிறதோ அவ்வளவு இலைகளை அறுவடை செய்யலாம்.
 • ஆனால் இது உங்கள் இஷ்டம் தான். நீங்கள் இதனை பெரிய மரமாக வளர்க்க நினைத்தால் தொடக்கத்தில் கவாத்து செய்யாமல், நன்றாக வளர்ந்த பின்னர் கவாத்து செய்யலாம்.

பூ-மொட்டுகளை கிள்ளி விடுதல்

 • இந்த செடி கொத்து கொத்தாய் தான் மொட்டு விடும், அப்படி விடும் போது அதனை கிள்ளி விடலாம்
 • இப்படி செய்வதன் மூலம் செடியின் சத்துகளை இலை முளைப்பிப்பதில் நாம் திருப்ப முடியும்
 • இல்லையென்றால் பூக்களுக்கும், அதன் பின் காய் வைப்பதற்குமே நிறைய சத்தை இது செலவு செய்து விடும்.
 • இதுவும் உங்கள் இஷ்டம் தான். ஏனென்றால் இதன் மலர்கள் அடர் நறுமணத்தை கொண்டவை. உங்களுக்கு அது பிடித்திருந்தால் நீங்கள் அதை வைத்து கொள்ளலாம்

குளிர்காலத்தில்:

இது வெப்பமண்டல செடி/மரம். எனவே இதற்கு வெப்பம் மிக பிடிக்கும். எனவே குளிர்காலத்தில் வெப்பம் மிகவும் குறைந்தால் இதன் வளர்ச்சியும் குறையும். இது இயற்கையானது தான். அப்போது இலைகள் பழுப்பாய் மாறி உதிர்வதும் சகஜம் தான்.

கறிவேப்பிலை அறுவடை:

பொதுவாக பெரியளவில் வளர்ப்பவர்கள் இதனை 2-3 மாதத்திற்கு ஒரு முறை அறுவடை செய்கின்றனர். நம் சொந்த தேவைகளுக்கு வளர்ப்பதால் நம் தேவைக்கேற்ப அவ்வப்போது ஃப்ரெஷாக பறித்து பயன்படுத்தி கொள்ளலாம். இதனை உலர வைத்தும் சேமித்துக்கொள்ளலாம்.

"Cabbage White Butterfly" making a quick ascent from the flower (Back flip)

கறிவேப்பிலை பூக்கள்:

கறிவேப்பிலை பூக்களிலிருந்து அதன் பழங்கள் தோன்றும். அவற்றை பிழிந்து தான் விதைகளை எடுப்பர். இந்த விதைகளை வைத்து நாம் புது கறிவேப்பிலை செடிகளை வளர்க்கலாம். இதன் பழங்கள் உண்ணத்தக்கவை என்றாலும் இதன் விதைகளின் விஷத்தன்மையினால் நாம் இதை உண்ணுவதில்லை. பறவைகள் இதனை உண்டு விதைகளை வெளியேற்றுவதன் மூலம் தான் இது மற்ற இடங்களில் விருத்தி அடைகிறது.

கறிவேப்பிலையை தாக்கும் நோய்களும் பூச்சிகளும்:

கறிவேப்பிலையிலிருக்கும் வலுவான மணம் பல பூச்சிகளை விரட்டி விடும். இருந்தும் இதில் பூச்சிகளின் தொல்லை கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. இப்பகுதியில் கறிவேப்பிலையில் இருக்கும் பிரச்சனைகள் பற்றியும் அவற்றிற்கான தீர்வுகள் பற்றியும் நாம் பார்ப்போம்.

பிரச்சனைகள்:

curry leaves
 • கரும்புள்ளிகள், பழுப்பு புள்ளிகள், வெள்ளை பூஞ்சை – இவை இலைகளையும், கிளைகளையும் தாக்குவதை நம்மால் பார்க்க முடியும்.
 • சில சமயங்களில் இலைகள் சுருண்டு கொள்ளும் அல்லது பிசு பிசுவென இருக்கும். இதற்கெல்லாம் காரணம் அசுவினி பூச்சி, செதில் பூச்சி, மாவுபூச்சி, சைலிடிஸ் தான் காரணமாயிருக்கும்.
 • செதில் பூச்சிகளும், அசுவினி பூச்சிகளும் இலைகளை உறிஞ்சி அவற்றை தளர்வாக்கி, பழுப்பாக்கி விடும். செதில் பூச்சிகளை எதிர்க்கும் இயற்கையான போராளிகள் எறும்புகள் தான்.
 • மாவுபூச்சிகளும், வெள்ளை பூச்சிகளும் செடியின் சாற்றினை உறிஞ்சிக் கொண்டு, நூற்றுக்கணக்கான முட்டைகளை இலைகளின் மீது இட்டுவிடும். இவை மஞ்சள் புழுக்களை பிறப்பிக்கின்றன.
 • இதையெல்லாம் விட மிகவும் பொதுவாக காணப்படும் பிரச்சனை இலைகளில் தோன்றும் வெண் புள்ளிகள். இதனை இலைப்புள்ளி நோய் என அழைக்கின்றனர்.
 • இலைகளின் நுனி கறுகுவதும் ஒரு பொதுவான பிரச்சனை.

தீர்வுகள்:

பூச்சிகளுக்கு:

 • 1லி தண்ணீரில் 1மிலி வேப்பெண்ணெயை கலந்து அதனுடன் ஆர்கானிக் சோப்பையும் சேர்த்து ரெகுலராக ஸ்ப்ரே செய்து வந்தால் பூச்சிகளை கட்டுப்படுத்த அது பெரிதும் உதவும்.
 • இதேபோல் பஞ்சகாவியத்தையோ, அமிர்த கரைசலையோ நீரில் கலந்து தெளிக்கலாம். இது பூச்சிகளை விரட்டுவதோடு இலைவழி ஊட்ட சத்தாகவும் உதவுகிறது. எனவே இலைகள் மேலும் செழித்து வளரும்
 • அடிக்கடி உப்பு-நீர் கலவையை இலைகளுக்கு தெளிப்பதும் இலைகளின் ஆரோக்கியத்திற்கு உதவும்.

இலைப்புள்ளிகளுக்கு:

 • இலைப்புள்ளிகளை தீர்க்க 3-5 நாள் புளிக்க வைத்த மோரினை 9 மடங்கு தண்ணீருடன் கலந்து அடிக்கடி தெளிப்பது உதவும்.

இலைகள் கருகுவதற்கு:

 • இலையின் நுனிகள் கருகி போனால் பொட்டாசிய குறைபாடு என அர்த்தம். இதற்கு சாம்பல் இடுவதும், வாழைப்பழ தோலை அரைத்து இடுவதும் உதவும்.

சில நாட்களுக்கு முன் என் நண்பர் ஒருவர்(என் பதிவுகளை படிப்பவர்) என்னிடம் கறிவேப்பிலை செடியில் அவர் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு ஆலோசனை கேட்டார். அதன் விளைவு தான் இந்த பதிவு. இந்த பதிவுக்கு தூண்டுதலாக இருந்த அவருக்கு(அசுத்தோஷ்) என்னுடைய நன்றிகள்.

இதை தவிர உங்களிடம் வேறு ஏதேனும் டிப்ஸ் இருக்கிறதா? அனைவருக்கும் அது பயன்தர கமெண்டில் அதை தெரியப்படுத்துங்கள். ஏதேனும் சந்தேகங்களோ, கேள்விகளோ இருக்கிறதா? தொடர்பு பக்கத்தின் மூலமாகவோ, இடப்பக்கத்திலுள்ள WhatsApp Iconஐ கிளிக் செய்தும் என்னை தொடர்பு கொள்ளலாம்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் சுற்றத்திற்கு இதை பகிர்ந்து ஆர்கானிக் பசுமை அன்பை பரப்பலாமே!

ஒன்றாய் விதைப்போம்! ஒன்றாய் வளர்வோம்! நன்றி

இது ஒரு இரு மொழி பதிவு. To read this post in English click here!

2 thoughts on “கறிவேப்பிலை வளர்ப்பது எப்படி?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது