கத்தரிக்காயை தொட்டிகளில் வளர்ப்பது எப்படி?

கத்தரிக்காயை தொட்டிகளில் வளர்ப்பது எப்படி? - மாடித்தோட்டத்தில் கத்தரி வளர்க்க ஒரு வழிகாட்டி
Spread the Green love!

மக்களே மக்களின் மக்களே! வணக்கம்! வந்தனம்!

நான் மாடி தோட்டம் ஆரம்பித்த உடன் முதன்முதலில் வளர்த்த செடிகளுள் கத்தரிக்காயும் ஒன்று. கத்தரிக்காய் வளர்ப்பதற்கு எளிதானது மட்டுமல்லாமல் நீங்கள் காட்டும் அன்பிற்கு தக்கதாய் உங்களுக்கு அள்ளி அள்ளி தரும் செடி இது. இதற்காகவோ என்னவோ கத்தரிக்காயை ‘காய்கறிகளின் ராஜா’ என பல கலாச்சாரங்களில் அழைக்கின்றனர். இது இந்தியாவை பூர்வீக மாக கொண்டது என்பதிலிருந்து ஏன் இதை இங்கே வளர்ப்பது எளிது? என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

https://www.instagram.com/p/BzH7PPUFLIh/?igshid=q8etc4jv0x8s

கத்தரிக்காயில் இரும்பு, கால்சியம் மற்றும் நார்ச்சத்து நிறைய உள்ளது. அதுமட்டுமல்லாமல் இது ஒரு குறைந்த-கொழுப்பு, குறைந்த- கலோரி உள்ள உணவு. அதனால் இது உடல் எடையை பராமரிக்க அல்லாடுபவர்களுக்கு ஏற்றது.

இது என்ன தான் வளர்க்க எளிதான செடியாக இருந்தாலும், இதற்கும் நம்மை போலவே சில சாஃப்ட் ஸ்பாட்ஸ்கள்(Soft Spots) உள்ளது. இந்த பதிவில் அந்த மென்மை புள்ளிகளையெல்லாம் எப்படி சமாளித்து மாடித்தோட்டத்தில் வெற்றிகரமாக எப்படி வளர்ப்பது என நாம் பார்ப்போம்.

அதற்கு முன் நீங்கள் செடிவளர்ப்பதில் அனுபவமிக்கவர், அதனால் சிறு குறிப்பு மட்டும் போதுமென்றால், இந்த பதிவின் கீழே ஸ்க்ரால் செய்து பாருங்கள்.

விதைகளில் தொடங்கலாம்:

விதைகளை நர்சரிகளிலிருந்தோ, கடைகளில் நல்ல முற்றின கத்தரிக்காயை வாங்கி, அதை பழுக்க வைத்து, அதிலிருந்து விதைகளை எடுத்து வெய்யிலில் வைத்து அதையும் பயன்படுத்திக்கொள்ளலாம். (இது சுத்தமான அங்கக முறையிலான விதையாக இல்லாமலிருக்கலாம், ஆனால் சோதனை செய்து பார்ப்பதில் தவறு இல்லை அல்லவா?)

விதைகள் தயாரானதும் நேரடியாக அவற்றை வளர்க்கும் கொள்கலன்களிலேயே விதைக்கலாம். என்றாலும் இதனை முதலில் விதை தட்டில்/ நாற்று தட்டில் விதைத்து பின் நாற்றை கொள்கலன்களில் மாற்றலாம்.

விதை தட்டில்/காகித கப்பில்(Paper Cup) வளர்க்க படிகள்:

Eggplant Seedling
விதை தட்டு

முளைக்க வைப்பது:

விதை தட்டு இல்லை என்றால் பேப்பர் கப்புகளை பயன்படுத்திகொள்ளலாம்.

 • விதை தட்டை/கப்பை அதற்கான கலவைகளால் நிரப்பி மெதுவாக தட்டி மண் கலவையை சமப்படுத்தி கொள்ளுங்கள்.
 • அந்த தட்டினில் 3-4 கத்தரி விதைகளை ஒரு கப்பில் வைத்து, அதன் மேல் 1-2 அங்குலம் மண் கலவையை இட்டு அதையும் சமப்படுத்திக்கொள்ளவும்.
 • பின்  மண் கலவையை  தொந்தரவு செய்யாதவாறு கொஞ்சமாய் நீர் ஊற்றுங்கள்
 • பின் அந்த தட்டினை/கப்பினை, பிளாஸ்டிக் ஷீட்டினை வைத்து மூடி அதை வெதுவெதுப்பான இடத்தில் வையுங்கள். அப்படி மூடும்போது மண் கலவைக்கும் பிளாஸ்டிக் ஷீட்டிற்கும் இடையே 1-2 அங்குல இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்வது முக்கியம்.
 • இந்த பிளாஸ்டிக் ஷீட் ஈரப்பதத்தை தக்க வைப்பதற்காக தான். இந்த ஸ்டெப்பினை செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை.
 • என்றாலும் அந்த தட்டில்/கப்பில் ஈரப்பதம் குறையாமல் பார்த்துகொள்ள வேண்டும்.
 • 6-7 நாட்களுக்குள் விதைகள் முளைத்து, செடி வெளியே வர ஆரம்பிக்கும்.
 • முதல் விதை முளைத்ததும் பிளாஸ்டிக் ஷீட்டினை எடுத்து விட்டு, குறைந்த பட்சம் 4-6 மணி நேரம் சூரிய வெளிச்சம் கிடைக்கும் இடத்தில் தட்டினை/கப்பினை வையுங்கள்.

தனிபட்ட முறையில் விதைகளை இப்படி நான் முதலில் கப்புகளில் விதைத்து பின் இடமாற்றுவது எல்லாம் செய்தது இல்லை. நேரடியாக கொள்கலன்களில் விதைப்பது எனக்கு வேலை செய்தது.  நீங்கள் இரண்டையும் முயற்சி செய்து பாருங்கள். பின் எது உங்களுக்கு வேலை செய்கிறது என எனக்கு சொல்லுங்கள்.

நாற்றுகளுக்கு நீர் ஊற்றுதல்:

 • தேவைக்கேற்ப நீர் ஊற்றுங்கள்
 • மழையிலும், கடுமையான வெய்யிலிலும் வைக்க வேண்டாம்
 • இந்த நிலையில் இவற்றில் வேர் எளிதாக அழுகி விடும். அழுகலை தடுக்க நாற்றுகளுக்கு அமிர்த-கரைசலை வாரம் ஒரு முறை ஊற்றலாம்.

அமிர்த-கரைசல் எப்படி செய்வது என விரைவில் ஒரு பதிவில் பதிவிடுகிறேன்.

கொள்கலன்களில் நாற்றுகளை மாற்றுவது:

 • பத்திரமாக நாற்றினை இடமாற்றம் செய்ய தட்டிலிருந்து நாற்றினை எடுத்து, கொள்கலன்கலனுக்கு நடுவில் அதனை நடுங்கள்
 • தொட்டியில் நீர் ஊற்றி நேரடி சூரிய வெளிச்சத்தில் தொட்டி/கொள்கலனை வையுங்கள்.
 • 7-10 நாட்களுக்கு பின்னர் நாற்றுகள் புது மண்ணிற்கு பழகியதும் பலவீனமான நாற்றுகளை வெட்டி விடுங்கள்.
 • ஒரு தொட்டிக்கு ஒரு நாற்றினை மட்டும் விட்டுவிட்டு மற்றதை நறுக்கி விடுங்கள். 15-30லி கொள்கலன் ஒன்றில் ஒரு செடி வளர்ப்பது நல்ல விளைச்சலுக்கு உதவும்
 • உங்களிடம் பெரிய கொள்கலன் உள்ளது என்றால், இரண்டு செடிகளை கூட வைக்கலாம். ஆனால், இரண்டு செடிகளுக்கும் இடையில் 2-அடி இடைவெளி அவசியம் வேண்டும்.

நான் முன்னமே சொன்னது போல இந்த விதை தட்டினில் விதைக்காமல் நேரடியாக கொள்கலனிலேயே விதைத்து வளர்க்கலாம்.

கொள்கலன்களில் கத்தரிக்காய் வளர்ப்பது எப்படி?

கீழே நான் பேச போகும் படிகள் எனக்கு உதவிய அடிப்படையானதும், முக்கியமானதுமான படிகள். இவற்றை பின்பற்ற நான் பரிந்துரை செய்கிறேன்.

தண்ணீர் ஊற்றுதல்:

இவை நல்ல சூரிய ஒளியை விரும்ப கூடியவை. ஆனால் அதே காரணத்தால் இவை இருக்கும் தொட்டிகளில் ஈரப்பதம் சீக்கிரமாய் காய்ந்து விடும். அதனால் மண்ணை எப்போதும் காயாமல் ஈரமாக வைத்திருப்பது மிக முக்கியம். கடும் வெய்யிலில் இவை நீர் அழுத்தத்திற்குள்ளாக( Water Stress) கூட வாய்ப்பிருக்கிறது.

கத்தரித்தல்:

தக்காளியை போலவே கத்தரி செடிகளிலும் இலைகளுக்கும், தண்டிற்கும் இடையில் புதிதாய் கிளைகள் முளைக்கும். இவற்றினை சக்கர்ஸ்(Suckers) என அழைக்கின்றனர். இவற்றை அப்படியே விடுவதும், இல்லை வெட்டி விடுவதும் நம் இஷ்டம் தான். என்ன இவற்றை விட்டால் தனி கிளைகளாக முளைத்து அவற்றிற்கும் சத்து தேவைப்படும்.

ஆனால், செடி அடர்த்தியாய் வராமல் படர வேண்டுமென்று நினைத்தால் அதனை நறுக்கி விடலாம்.

பழைய பழுத்த இலைகளையும், மண்ணை தொடும் இலைகளையும் வெட்டி விடுதல் நல்லது. இது தொற்றுகளை தவிர்க்க உதவும். அதுவுமல்லாமல் மற்ற இலைகளுக்கு சூரிய ஒளி கிடைக்காமல் அவற்றை மறைக்கும் இலைகளையும் வெட்டி விடுங்கள். இது காற்றோட்டத்திற்கும் உதவும்.

உரமிடுதல்:

 • 10-15 நாட்களுக்கு ஒரு முறை அமிர்த-கரைசலோ வேறு எதாவது அங்கக, திரவ உரங்களையோ இட்டு, மண்னை வளமாய் வைத்துக்கொள்ளுங்கள்.
 • பூ பூக்கும் போது 7 நாட்களுக்கு ஒரு முறையென உரமிடும் சுழற்சியினை அதிகரியுங்கள்
 • நாம் கத்தரி செடிகளை தொட்டிகளில் வளர்ப்பதால் அவற்றிற்கு தொடர்ந்து ஊட்டசத்து அளித்துக்கொண்டே இருக்க வேண்டும். இதற்கு அமிர்த கரைசலுடன் அடிக்கடி கலப்புரம்(Compost) இடுவது உதவும். இதற்கு மண்புழு உரம் சிறந்தது.
 • மாதம் ஒரு முறை இப்படி தொட்டியிலிருக்கும் மேல்தட்டு மண்ணை எடுத்துவிட்டு அதற்கு பதில் அங்கே உரமிட்டு வந்தால் செடி ஆரோக்கியமாக இருக்கும். (செடியும் நல்லா இருக்கும் நாமும் நல்லா இருப்போம்). இதோடு முடாக்கிடுவதும் நீர் மேலாண்மைக்கு அவசியமானது. இப்போ இருக்கும் தண்ணீர் திண்டாட்டத்தில் இது மிக முக்கியம்.

இப்படி உரமிடும் போது பூ பூத்து காய்க்கும் காலத்தில் அதிகம் நைட்ரஜன் நிறைந்த உரங்களை தவிர்ப்பது நல்லது. இது காயை விட்டு விட்டு, இலைகளுக்கு ஊட்டசத்து அளித்து, செடி இன்னும் அடர்த்தியாக புதர் போல வளரவே உதவும்.

பூச்சி மேலாண்மை

அசுவினி பூச்சிகளும்(Aphids), மாவு பூச்சிகளும்(Mealy Bugs) தான் கத்தரி செடிகளுக்கு பெரிய எதிரிகள். நம் செடியை தாக்குவதால் நமக்கும் பெரிய எதிரிகள் இவை தான். இவற்றை கட்டுப்படுத்த தவறாமல் இலைகளின் அடிபாகத்தை திருப்பி பாருங்கள். ஒருவேளை அவை தென்பட்டால் தண்ணீரை வீச்சி அடித்தோ, கைகளால் நசுக்கியோ அவற்றை அகற்றி விடுங்கள்.

நான் கைகளால் நசுக்கி பின் நீரினால் இலைகளை கழுவி விடுவேன். ஆனால் ஒன்னும் செய்யாமல் மட்டும் இருந்து விடாதீர்கள் விஷம் வைத்ததுபோல செடி மெல்ல மெல்ல இறந்து விடும்.

வேப்பெண்ணெயையோ, நீரில் கலந்த கோமியத்தையோ தெளிப்பதும் இதற்கு உதவும். (ஆம் கோமியம் இயற்கையான பூச்சு கட்டு படுத்தி). மாவு பூச்சியை கட்டுப்படுத்த மெத்திலேட்ட ஸ்பிரிட்(Methylated Spirit)-குடிநீர்மையற்ற எரிநீர்/எரிசாராயம்(எனக்கு Methylated Spiritற்கு தமிழில் என்னவென்று தெரியவில்லை, கூகுள் சொல்வதையே வேதவாக்காக நம்பி சொல்கிறேன். அது தவறாயிருந்தால் மன்னிப்பதுடன் எனக்கு கொஞ்சம் சொல்லுங்களேன்! பிளீஸ்!) 

காய் காய்க்கும் போது தாக்கும் பூச்சிகள்:

காய் காய்க்கும் போது துளையிடும் பூச்சிகள் தாக்க ஆரம்பிக்கும். எங்கிருந்து எப்படி தகவல் கிடைத்து இவை வருகின்றன என்று யோசித்துக்கொண்டே இருக்கும் நேரத்தில் இவை தன் வேலையை பார்க்க துவங்கி விடும். இவற்றை கட்டுப்படுத்த வாரமொரு முறை பஞ்சகாவியம் தெளிப்பது பயனளிக்கும். (இந்த பஞ்ச காவியத்தை பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள், இதை பற்றியும் ஒரு பதிவை எழுத திட்டமிட்டுள்ளேன்.)

ஒருவேளை நீங்கள் தக்காளி செடிகளும் வளர்ப்பதாயிருந்தால் இரண்டு செடிகளையும் தள்ளி தள்ளி வையுங்கள். கத்தரியை தாக்கும் பூச்சிகள் தக்காளியையும் தாக்க வாய்ப்புள்ளது(முக்கியமாக துளையிடும் பூச்சிகள்).

அறுவடை:

சொபா… எவ்வளவு வேலை? இவ்வளவும் செய்ததற்கு நாம் சந்தோஷப்பட்டு அதை புது ஸ்டேடஸ் ஆக போடும் கட்டத்திற்கு போவது அந்த கத்தரிக்காய்களை அறுவடை செய்து கையில் தொடும் பொழுது தான். அந்த தருணம் நாம் ஏதோ ஒரு அதிசயத்தை கண்டது போலும், அற்புதத்தை நாமே நிகழ்த்தி விட்டது போலும் உணர்வோம்! (இயற்கையின் எல்லா செயல்களுமே அற்புதம், அதிசயம் தான்!)

https://www.instagram.com/p/BkoxxLqnGGp/?igshid=87qjspmnnhva

பொதுவாக செடி முளைத்ததிலிருந்து காய் காய்த்து அறுவடை செய்ய 60-80 நாட்கள் பிடிக்கும். ஆனால் அந்த கட்டத்திற்கு செல்வதற்கு முன் இன்னும் கொஞ்சம் படிகளை நீங்கள் கடைபிடிக்க வேண்டி இருக்கிறது.

மகரந்த சேர்க்கை:

 • நிறைய செடிகளுக்கு மகரந்த சேர்க்கைக்கு துணை தேவைப்படும். ஆனால் கத்தரி சுயமாய் அந்த வேலையை செய்து கொள்ளும்.
 • அதற்கு உதவ அதன் பூக்களை வேண்டுமானால் லேசாக தட்டி விடலாம்.

ஆதாரம்:

இதை பற்றி முன்னமே சொல்லியிருக்கலாம் ஆனால் இதற்கான தேவை என்ன என்பது இப்பகுதியில் தான் உங்களுக்கு புரிய வரும்.

2009-11-16 - The Land - Eggplant "Tree"
மரம் போல் வளர்ந்திருக்கும் கத்தரி சேடி
 • காய் காய்க்கும் போது அதன் எடையால் செடி தொங்கி விடும்.
 • எனவே அதை தாங்க அதற்கு ஆதாரமாய் ஒரு கொடிக்கொம்பு நடுங்கள்
 • இதனை செடி சின்னதாய் இருக்கும் போதே நட்டு விடுங்கள். அப்படி செய்வது செடியின் வேரை பாதிக்காமல் காப்பதுடன்(வேர் நன்றாய் படர்ந்த பின் கொம்பை சொருகினால் வேர் பாதிப்படைய வாய்ப்புள்ளது), செடி காற்றடிக்கும் போது உடையாமல் பாதுகாக்கவும் உதவும்.

காய்களை பறித்தல்:

 • காய் காய்க்க ஆரம்பித்து 15-20 நாட்களில், அது பறிக்க தயாராகி விடும்.
 • அது பறிக்க தயாரா என கண்டுபிடிக்க காயை அழுத்தி பாருங்கள்.
 • மிகவும் மென்மையாக இருந்தால் இன்னும் காய் வளரும்.
 • தொட்டால் கொஞ்சம் கடினமாக இருந்தால் அது அறுவடைக்கு தயார் என அர்த்தம்
 • மிகவும் மென்மையாக இருக்கும் போதும் சரி, நன்கு கடினமாகி கல்லை போன்று ஆனாலும் சரி இரண்டுமே சாப்பிட ஏற்றது இல்லை. இந்த இரண்டு நிலைக்கும் இடையில் சரியான  நேரத்தில் பறிப்பது முக்கியம். இது பழக்கத்தில் தான் வரும்.
 • மற்றுமொரு முக்கியமான விஷயம் கத்தரிக்காயை பறிக்க அதனை பிடித்து இழுக்காதீர்கள். அது செடியை தான் சேதப்படுத்தும். அதற்கு பதிலாக கத்தரிக்கோலால் வெட்டி எடுங்கள்.

செடிக்கு புது வாழ்வு அளிப்பது:

இதை பற்றி சமீபத்தில் தான் படித்தேன். எனவே நான் இதை முயற்சித்தது இல்லை. ஆனால் இது சுவாரஸ்யமாக தான் இருக்கிறது. முயற்சி செய்து எப்படி வேலை செய்கிறது என எனக்கும் கூறுங்கள்!

தொட்டிகளில் கத்தரி வளக்கும் போது 5-7 மாதங்களில் முதல் அறுவடைக்கு பின் காய்க்கும் காய்கள் சிறிதாகிக்கொண்டே போவதை பார்க்க முடியும்(ஆனால் இது ஒரு வருடாந்தர பயிர்.) அப்படி நிகழும் போது செடியில் சில முக்கியமான கிளைகளை மட்டும் விட்டுவிட்டு, மொத்தமாய் செடியும் ஒரு 8-10 இலைகள் மட்டும் இருக்குமாறு மேலிருந்து செடியை விட்டி விடுங்கள்.

இதை செய்ய சரியான நேரம் மழை காலம் தான். இதை கடும் வெய்யில் காலங்களில் செய்யாதீர்கள். கொஞ்சம் நாட்களில் புதிய, பெரிய இலைகள் தோன்றுவதை பார்க்க முடியும். அதோடு இல்லாமல் பெரிய காய்களும் முளைக்குமாம். இப்படி வருடம் முழுக்க காய்களை அந்த செடிகளிலிருந்து பெறமுடியுமாம்.

விரைவான தகவல்கள்:

கத்தரி வளர்க்க தேவையான மற்ற தகவல்கள் இதோ

வளர தேவையான தட்பவெப்பம் 15 – 30 °C
விதை முளைக்க தேவையான தட்பவெப்பம் 25-30 °C உகந்தது
முளைக்க எடுக்கும் நேரம் 6-12 நாட்கள்
தேவையான் மண்ணின் கார அளவு 6 to 7
தேவையான சூரிய வெளிச்சம் தினமும் 6-8மணி நேரம் நேரடி சூரிய வெளிச்சம்
பரிந்துரைக்கப்படும் வளர்க்கும் முறை நாற்று மாற்றம்
தேவையான கொள்கலன் அளவு 15-20லிட்டர்
அறுவடைக்கான காலம் முளைத்ததிலிருந்து 60-80 நாட்கள்
மொத்த அறுவடை காலம்  8-12 மாதங்கள்
மகரந்த சேர்க்கை முறை சுய சேர்க்கை
தாக்கும் பூச்சிகள் மாவுப்பூச்சி, அசுவினி பூச்சி, துளைக்கும் பூச்சி
உரமிடுதல் அங்கக உரங்களான அமிர்த கரைசல், மண்புழு உரம், பஞ்சகாவியம்.
இந்தியாவில் விதைக்க ஏற்ற மாதங்கள் ஜூன் – நவம்பர்

இதை தவிர உங்களிடம் வேறு ஏதேனும் டிப்ஸ் இருக்கிறதா? அனைவருக்கும் அது பயன்தர கமெண்டில் அதை தெரியப்படுத்துங்கள். ஏதேனும் சந்தேகங்களோ, கேள்விகளோ இருக்கிறதா? தொடர்பு பக்கத்தின் மூலமாகவோ, இடப்பக்கத்திலுள்ள WhatsApp Iconஐ கிளிக் செய்தும் என்னை தொடர்பு கொள்ளலாம்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் சுற்றத்திற்கு இதை பகிர்ந்து ஆர்கானிக் பசுமை அன்பை பரப்பலாமே!

ஒன்றாய் விதைப்போம்! ஒன்றாய் வளர்வோம்! நன்றி

இது ஒரு இரு மொழி பதிவு. To read this post in English click here!

One thought on “கத்தரிக்காயை தொட்டிகளில் வளர்ப்பது எப்படி?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது