எலுமிச்சை பராமரிப்பு

எலுமிச்சை பராமரிப்பு
Spread the Green love!

வணக்கம் மக்களே! எலுமிச்சை மரம் வளர்க்கும் எல்லாருக்கும் ஒரு சிறப்பு வணக்கம். எலுமிச்சை வளர்ப்பை பற்றின பதிவில் மீதமுள்ளதை எல்லாம் வேறே ஒரு பதிவில் பதிவிடுகிறேன் என கூறியிருந்தேன். வாருங்கள் நேரடியாக எலுமிச்சை பராமரிப்புக்குள் சென்று விடலாம்.

நீர் ஊற்றுதல்:

இதை பற்றி முன்னமே பேசியிருந்தேன் இருந்தும் இதை வலியுறுத்துவது அவசியம் என கண்டது. எலுமிச்சை மட்டுமல்ல, ஏறக்குறைய எல்லா பழ மரங்களுக்குமே இது தான் நீர் ஊற்றும் முறை. மண்ணை நன்றாக வற்ற விட்டு நீர் விடுங்கள். இது மிகவும் அவசியம் இது பூஞ்சை தொற்றுகளில் இருந்து கூட மரத்தை பாதுகாக்கும்.

சூழல்:

இவை குளிர் தாங்காதவை. எனவே நல்ல சூரிய ஒளி படக்கூடிய இடத்தில் வைப்பது அவசியம்.

முடாக்கிடுதல்:

நீர் நிர்வாகத்தை பற்றி பேசும்போது முடாக்கை பற்றியும் பேசாமலிருக்க முடியாது இல்லையா? எலுமிச்சைக்கு நீர் தேவை இருந்து கொண்டே இருக்கும். எனவே மரத்தை சுற்றி காய்ந்த இலை தழைகள், வைக்கோல் என எல்லாவற்றையும் வைத்து மண்ணை மூடி முடாக்கிடுங்கள்.

இது நீர் ஆவியாவதை தவிர்ப்பதோடு, களைகள் முளைப்பதையும் தடுக்கிறது. இதே முடாக்கு மட்கி மரத்திற்கு உரமாகவும் மாறி நமக்கு வேலையையும், செலவையும் மிச்சம் செய்கிறது. எனவே முடாக்கிட மறக்காதீர்கள்

உரமிடுதல்:

நிறைய பேர் செய்யும் தவறு இதில் தாங்க. மரம் ஒன்றை நட்டு விட்டால் நமது வேலை முடிந்துவிட்டது, மரத்தின் வேலை தான் இனி என நினைப்பது சரி இல்லை. இயற்கையில் எந்த பொருளும் ஒன்றுமில்லாமையிலிருந்து வருவதில்லை என நமக்கு தெரியும். இதனை அறிவியலும் ஒப்புக்கொள்கிறது. எனவே மரத்துக்கும், செடிக்கும் உணவு தேவை, வெறும் தண்ணீரில் மட்டுமே வளர்ந்து விடாது எதுவும்.

Compost
Pic by; photos.greenhows

சரியான நேரத்தில் தேவையான அளவு உரமிடுங்கள். என்ன உரமிடலாம்? என கேட்கிறீர்களா?

நைட்ரஜன்:

இது தாங்க சிட்ரஸ் வகை மரங்களுக்கு மிகவும் தேவையானது. மரத்தின் வளர்ச்சி, இலைகளின் வளர்ச்சி, பூக்கள், காய்கள் என அனைத்திலுமே நைட்ரஜனின் பங்கு மிகவும் அதிகம். எனவே நைட்ரஜன் நிறைய இருக்கும் இயற்கை உரங்களை இடுங்கள்.

இவை நாம் வீட்டில் தயாரிக்கும் கம்போஸ்ட்களிலும், மண் புழு உரங்களிலும், கால்நடை சாணங்களிலும், இலை தழைகளிலும் நிறைய கிடைக்கும்.

பாஸ்பரஸ்:

இது அடுத்த முக்கியமான ஊட்டசத்து. இது சரியான அளவில் இருந்தால் தான் மரத்தால் சரியாக சக்தியை சேமித்து பயன்படுத்த முடியும்.

இதை தவிர பொட்டாசியம், கால்சியம், மாங்கனீஸ், மக்னீசியம், , சாம்பல் சத்து, இரும்பு, சிங்க் என இவை அனைத்துமே எலுமிச்சைக்கு தேவைப்படுகிறது.

எப்போது இடுவது?

மாதம் ஒரு முறை உரமிடுவது செடியை நன்கு ஆரோக்கியமாக வைக்கும். இதனால் செடி நன்றாக வளர்வதோடு, பூச்சி தாக்குதல்களிலிருந்தும் தப்பிக்கும். அப்படி அடிக்கடி இட முடியவில்லை என்றால் 3 மாதத்திற்கு ஒரு முறையாவது உரமிடுதல் நல்லது.

என்னென்ன இடலாம்?

கால்நடை சாணங்கள், மட்கிய உரங்கள், மண் புழு உரம், வேப்பம்/கடலை பிண்ணாக்கு, கோழி கழிவு இவற்றை எல்லாம் இடலாம். இதை தவிர பஞ்ச காவியமும் இடலாம்

ஸ்பெஷல் கரைசல்:

இதை எல்லாம் தவிர எலுமிச்சைக்கு என தனிப்பட்ட கரைசல் ஒன்று இருக்கிறது. அது தான் புளித்த மோர்.

 • நன்றாய் புளித்த மோரினை செடியின் மேலும், செடியை சுற்றிலும் தெளிக்கலாம்.
 • எலுமிச்சைக்கு காரதன்மை அதிகம் இருக்கும் மண் தேவைப்படுகிறது. புளித்த மோரினை தெளிப்பது இதற்கு உதவுகிறது.

பூச்சி மற்றும் நோய் தாக்குதல்:

 • பூச்சிகளுக்கு வேப்பெண்ணெய்+காதி சோப்பு+ தண்ணீர் கலவையும், பூண்டு, மிளகாய் கரைசலும் நல்ல பலன் தரும்
 • இவற்றின் இலைகளை மண்ணில் படாதவாறு வைத்துக்கொள்வது முக்கியம். அப்படி படும் போது பூஞ்சை தொற்று ஏற்படும்
 • நிறைய பேருக்கு இலைகள் சுருளுவது மிக பெரிய கவலையாக இருக்கலாம். இதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் சில: பூஞ்சை தொற்று, இலை துளைப்பான் பூச்சி, சரியாக நீர் ஊற்றாமலிருப்பது.
 • இலைத்துளைப்பானின் புழு இதில் சேதத்தை செய்வதால் அந்த இலைகளை வெட்டி எரித்து விடுதல் நல்லது.
 • இலைகள் மஞ்சளாவது: இதற்கு சத்து குறைப்பாடு தான் பெரிய காரணமாக இருக்கும். இரும்பு, மக்னீசியம், நைட்ரஜன் என இவை குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பூ பூக்க:

காய்க்கும் காலம் நெருங்க நெருங்க பூக்கள் தோன்ற வேண்டும் அப்படி தோன்றவில்லை என்றால் தேமோர் கரைசல் தெளிப்பது மிகவும் உதவும்.

தேமோர் கரைசல் எப்படி செய்வது என நாம் எற்கனவே பார்த்திருக்கிறோம். அதை பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

காய்கள் வர:

Lemon Flower
Pic by: Blanca Rosa2008

பூ பூத்தாயிற்று, ஆனால் எல்லாம் கொட்டி விடுகிறது. காயே வைக்க மாட்டேங்குது. இது பல பேருக்கு பிரச்சனையாக இருக்கிறது. உண்மையில் இதை பற்றி என்னை ஒரு நண்பர் கேள்வி கேட்க போய் தான் எலுமிச்சை பற்றி பதிவிட முடிவெடுத்தேன்.

இதற்கு காரணம் என்னவென்றால் இவற்றுக்கு மகரந்த சேர்க்கைக்கு தேனீக்கள் போன்ற பூச்சிகள் தேவைப்படுகின்றன.

ஆனால் இப்போதான் நாம் அவற்றை வாழ விடுவதில்லையே. எனவே அவற்றின் வேலையை நாம் தான் செய்ய வேண்டி இருக்கிறது. இதை எப்படி நாம் செய்வது? இதே போன்று செயற்கை முறையில் மகரந்த சேர்க்கை செய்ய வேண்டிய மற்றொரு தாவரம் சீத்தா பழம். அதை பற்றி நாம் முன்னமே பார்த்திருக்கிறோம்.

என்றாலும் இப்போது மறுமுறையும் இதை எப்படி செய்வது என சொல்கிறேன்.

 • இதற்கு  முதலில் எலுமிச்சை பூவில் எவை எங்கே இருக்கின்றன என தெரிந்துகொள்ள வேண்டும்
 • பூவின் நடுவில் கம்பீரமாய் நிற்பது தான் பெண் பாகம், அதை சுற்றிலும் குட்டியாக இருப்பவை தான் ஆண் பாகங்கள்.
 • நன்கு முதிந்த மகரந்த துகள்களை ஆண் (மகரந்த கேசரம்)பாகத்திலிருந்து சேகரித்து அவற்றை பெண் பாகத்தின் மேல் பூசி விட வேண்டும்.
 • இதற்கு ஒரு பெயிண்டு பிரஷினை எடுத்து அதை மகரந்த கேசரத்தில் தடவி எடுத்து அதில் ஒட்டிக்கொண்டு வரும் மகரந்த துகள்களை பெண் பாகத்தில் பூசி விட வேண்டும். அவ்வளவு தான்

கவாத்து செய்தல்:

நல்லா பழம் காய்சுடுச்சு எல்லாம் முடிந்தது  என விட்டுவிடாதீங்க! தேவையற்ற கிளைகளை கவாத்து செய்வது மிக முக்கியம்.

In Abundance
Pic by: roseytsp

போன காய்ப்பு காலத்தில் காய்த்த கிளைகள், நோய்பட்டிருக்கும் கிளைகள், நிலத்தை தொடும் கிளைகள் என எல்லாவற்றையும் வெட்டி விடுங்கள்.

அறுவடைக்கு பின்னர் இப்படி செய்வதன் மூலம், செடி அடுத்த அறுவடைக்கு தயாராகும்போது தன் சக்தியை தேவையான கிளைகளிலும், புது கிளைகளிலும் மட்டும் செலுத்தி நல்ல காய்ப்பு இருக்கும்.

இவை தான் எனக்கு தெரிந்து பெரிதும் எலுமிச்சை பராமரிப்பில் தெரிந்திருக்க வேண்டியவை.

ஏதாவது விட்டு போயிருந்தால் கொஞ்சம் கமெண்டில் அனைவருக்கும் பயன் தர பதிவிடுங்கள்.

இதை தவிர உங்களிடம் வேறு ஏதேனும் டிப்ஸ் இருக்கிறதா? அனைவருக்கும் அது பயன்தர கமெண்டில் அதை தெரியப்படுத்துங்கள். ஏதேனும் சந்தேகங்களோ, கேள்விகளோ இருக்கிறதா? தொடர்பு பக்கத்தின் மூலமாகவோ, இடப்பக்கத்திலுள்ள WhatsApp Iconஐ கிளிக் செய்தும் என்னை தொடர்பு கொள்ளலாம்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் சுற்றத்திற்கு இதை பகிர்ந்து ஆர்கானிக் பசுமை அன்பை பரப்பலாமே!

ஒன்றாய் விதைப்போம்! ஒன்றாய் வளர்வோம்! நன்றி

இது ஒரு இரு மொழி பதிவு. To read this post in English click here!

One thought on “எலுமிச்சை பராமரிப்பு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது