உலகின் மிக ஆபத்தான மரம்

Spread the Green love!

#Acfarm
#புதியதோர்_தாவரம்_அறிவோம்_தொடர்_12
#சாவின்_ஆப்பிள்_மரம்

This is a bilingual post to read it in English click here.

இந்த உலகில் நாம் அறியாத பல தாவரங்கள் உள்ளன. இந்த தொடரின் மூலம் அப்படிப்பட்ட தாவரங்களை பற்றி நாம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். அப்படி இன்று நாம் தெரிந்து கொள்ள போகும் தாவரம் “மன்ச்சிநீல்(Manchineel) – உலகின் மிக ஆபத்தான மரம் !”

மன்ச்சிநீல் மரம் உலகிலேயே மிகவும் விஷமுள்ள மரங்களில் ஒன்று. கின்னஸ் வர்ல்டு ரெக்கார்டால்(Guinness World Record ) உலகின் மிக ஆபத்தான மரம் என முத்திரை பெற்ற பெருமையும் இதற்கு உண்டு. ‘இவ்வளவு அலப்பறை கொடுக்கும் அளவுக்கு இந்த மரத்தில் அப்படி என்ன தான் இருக்கு?‘ என யோசிக்கிறீர்களா?

சரி இந்த சூழலை கற்பனை செய்து கொள்ளுங்கள். சுற்றி மழை பெய்கிறது நீங்கள் ஒதுங்க இடமே இல்லை, எதிரில் பார்த்தால் இந்த மரம் மட்டும் தான் இருக்கிறது. சரி ஒதுங்கலாம் என நம்பி சென்று நின்றீர்களானால் கொஞ்ச நேரத்திலேயே மரத்திலிருந்து வடியும் மழைநீர் உங்கள் உடலில் படும் இடங்களில் கொப்பளங்கள் படபடவென எழும்பி உடல் முழுக்க எரிய ஆரம்பித்து விடும். கொஞ்சம் கொடூரம் தான் இல்லையா!

ஆம், இது அந்த அளவிற்கு விஷத்தன்மை கொண்டது. இதன் இலை துவங்கி, பட்டை, வேர், சாறு, என எல்லாமே தீவிரமான விஷத்தன்மை கொண்டது.

Image by : Hans Hillewaert

Image by: Hans Hillewaert

இலையும் சாறும்:

இதிலிருந்து எடுக்கும் சாற்றினை விஷ அம்புகள் தயாரிக்கவும், எதிரிகளின் நீர் நிலைகளில் விஷத்தை கலக்க இதன் இலைகளையும் போர்களில் உபயோகித்து உள்ளனர்.

Danger in Paradise
Image by: aamster2

இதன் சாறு கார்களிலுள்ள பெயிண்டினை உரிக்கும் அளவுக்கு வீரியமுள்ளது. இந்த தாவரத்தில் எக்கச்சக்க விஷங்கள் உள்ளது. அதில் பல இன்னும் கண்டறிய படவேயில்லை.

சிலர் இந்த மரத்தின் அருகில் சுவாசிக்க கூட வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர். மக்களை காப்பாற்ற, இந்த மரம் பெரிதும் காணப்படுகின்ற வட அமெரிக்காவின் தென் பகுதிகளிலும், தென் அமெரிக்காவின் வட பகுதிகளிலும், இம்மரத்தில் எச்சரிக்கை பலகைகள் கட்டி வைத்துள்ளனர்.

பழங்கள்:

இதன் பழமும் சாதாரணமானது அல்ல! தன்னை உண்பவர்களுக்கு கசப்பது போன்ற எந்த வித எச்சரிப்பையும் இது கொடுப்பதில்லை. மாறாக தவறுதலாக உண்டவர்களில் பலர் இதை முதலில் இனிப்பதாயும், பின்பு மிளகை போன்ற சுவையும் கொடுத்து, கடைசியில் தொண்டையில் எரிய ஆரம்பித்து பின்னர் மூச்சு விடமுடியாதபடி தொண்டையை இறுக்கி விடும் என அவர்களுக்கு நடந்த நிகழ்வை விவரித்துள்ளனர்.

Image by : Dick Culbert

அதோடு நிற்பதில்லை இந்த பழத்தினை உண்டால், இரைப்பைக் குடல் அழற்சியுடன் இரத்தக்கசிவு, அதிர்ச்சி, பாக்டிரியாக்களின் அதீத தொற்று ஆகியவை ஏற்பட்டு, கடைசியாக நீர் வீக்கம் ஏற்பட்டு மூச்சுத்திணறி, பின் மொத்தமாய் நின்றுவிடும். இதனால் தான் இதற்கு மன்ச்சிநீல் என்னும் பெயர் வந்தது. அதற்கு மரணத்தை தரும் சின்ன ஆப்பிள்கள் என்று அர்த்தமாம்.

அருகிவரும் இனம்:

இப்போது மன்ச்சிநீல் இனம் அழியும் தருவாயில் உள்ளது. எப்படி இந்த நிலைக்கு வந்தது என கூட யோசிக்க முடியவில்லை. ஏனென்றால் இந்த மரத்தினை எரிக்க கூட முடியாது. ஆமாம், எரித்தால்  அதிலிருந்து வரும் புகையும் விஷமாம்.

இப்படி ஒரு மரம் இருப்பதைவிட இல்லாமற்போவதே நல்லது என யோசிக்கிறீர்களா? ஆனால், உலகின் சமநிலைக்கு இதன் பங்கும் முக்கியமானது. எப்படி என்று கீழே பாருங்கள்.

பயன்கள்:

  • இவ்வளவு விஷத்தன்மை கொண்டிருந்தும், பல நூற்றாண்டுகளாக கரீபியன் பகுதி தச்சர்கள் இம்மரத்திலிருந்து மரச்சாமான்கள் உருவாக்கி வருகின்றனர். இதற்கு இந்த மரத்தை பத்திரமாக வெட்டி சாற்றினை வெளியேற்ற வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும்.
  • இதன் பழங்களால் ஏற்படும் நீர் வீக்கங்களுக்கும், கட்டிகளுக்கும் இதன் பட்டையிலிருந்தே கிடைக்கும் பிசின் மூலம் மருந்து தயாரிக்கலாம்.
  • இதன் உலர்ந்த பழங்கள் சிறுநீர் பெருக்கத்திற்கு மருந்தாக பயன்படுத்தப்படுகின்றது.
  • இந்த மன்ச்சிநீல் மரங்களை பொதுவாக அவை வளரும் பகுதிகளான கடற்கரைகளிலும், உப்பு நீர் தேக்கங்களிலும் காணப்படும் சதுப்புநில மரங்களுக்கு இடையில் காணலாம். கரையோரங்களில் வளர்வதால் இவை புயல் சூறாவளிக்காற்று போன்றவற்றிலிருந்தும், மண்ணரிப்புகளிலிருந்தும் அப்பகுதியை காப்பாற்றுகின்றன.

(கொஞ்சம் வித்தியாசமான கொலையாளி போலிருக்கு! – விளையாட்டுக்காக)

மர்மம்:

முழுவதும் விசித்திரமாக இருக்கும் இந்த மரம் தன்னிடத்தில் மற்றுமொரு மர்மத்தை வைத்துள்ளது.

அது என்னவென்றால் இதன் பழங்கள் விலங்குகள், பறவைகள் என அனைத்திற்குமே விஷமாயிருந்தும், கருப்பு முதுகு இக்வானா ( Ctenosaura similis ) என்கிற பல்லி வகை விலங்கிற்கு மட்டும் விஷமாயிருப்பதில்லை. சொல்லப்போனால், அந்த விலங்கு இதன் பழங்களை உண்டு இதன் கிளைகளிலேயே குடியிருக்கிறது. இது இன்னும் நம்மை இயற்கையை நினைத்து வியப்படைய செய்கிறது.

Source: Manchineel – Wikipedia

இப்படி பல சுவாரஸ்யங்களை கொண்டுள்ள மன்ச்சிநீல் மரத்தை பற்றி நாம் தெரிந்துக்கொள்வது வேண்டியது தானே! இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன். அடுத்த முறை வேறொரு வித்தியாசமான தாவரத்துடன் புதியதோர்_தாவரம்_ஆறிவோம்_தொடரில் உங்களை சந்திக்கிறேன். இது பிடித்திருந்தால் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு பகிருங்கள்.

சேர்ந்து விதைப்போம், சேர்ந்து வளர்வோம்! நன்றி!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது