ஆர்கானிக்காக எலுமிச்சை வளர்ப்பது எப்படி?

ஆர்கானிக்காக எலுமிச்சை வளர்ப்பது எப்படி?
Spread the Green love!

சமீப காலமாக எலுமிச்சை வளர்ப்பை பற்றி அநேக கேள்விகள் என்னிடம் கேட்கப்படுகிறது. உண்மையில் எலுமிச்சை வளர்ப்பு அவ்வளவு கடினம் கிடையாது. சொல்லப்போனால்  ஒரு 10-20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை எல்லா வீடுகளிலும் எலுமிச்சையோ, கிச்சிலியோ, சாத்துகுடியோ கட்டாயம் இருக்கும். அந்த மரங்களிலிருந்து வரும் மணமே அவ்வளவு சுகமாய், புத்துணர்ச்சி ஊட்டக்கூடியதாய் இருக்கும்.

அப்போதெல்லாம் இவ்வளவு டெக்னாலஜியும் கிடையாது, விழிப்புணர்வும் கிடையாது. சாப்பிட்டு போடும் விதைகளிலிருந்தோ அல்லது எங்காவது இருந்து கொண்டு வந்து சும்மா நட்டு வைக்கும் கன்றும் தான் காலப்போக்கில் அதுவாகவே வளர்ந்து தொடர்ந்து காய் கொடுத்து வரும். எலுமிச்சை அப்படி பெரிதும் பராமரிப்பு தேவைப்படாத மரங்களுள் ஒன்று தான்.

சரி இதன் வளர்ப்பினை பற்றி பார்ப்போம் வாருங்கள்

ரகத்தை தேர்வு செய்தல்

இது மிக முக்கியமானது. நீங்கள் இப்போது தேர்வு செய்யப்போகும் ரகத்தை தான் காலம் முழுக்க பெற போகிறீர்கள். பொதுவாக லைம், லெமன் என்று இரண்டு வேறு வகைகளையுன் சேர்த்து தான் நாம் எலுமிச்சை என அழைக்கிறோம். லெமன் நீள் வட்டமாகவும் மஞ்சள் நிறமாயும், லைம் உருண்டையாகவும் பச்சை நிறமாயும் இருப்பது வழக்கம். ஆனால் இந்திய ரகங்களில் லைம், லெமன் இரண்டுமே மஞ்சள் நிறமாக பழுக்கும் எனவே நிறைய யோசனை வேண்டாம்.

Lemons
லெமன்
By: chris seary

பரவலாக வளர்க்கப்படும் லெமன் வகைகள் இதோ:

 • அசாம் லெமன்
 • இத்தாலிய லெமன்
 • செடி லெமன்
 • கள்கள் லெமன்
 • யுரேக்கா லெமன்
 • செவிலா லெமன்
 • மால்டா லெமன்

இவற்றுள் கடைசி நான்கு தென் இந்தியாவில் பரவலாக வளர்க்கப்படுகின்றது.

பரவலாக வளர்க்கப்படும் லைம் வகைகள் இதோ:

 • கார்க்சி லைம்
 • விக்ரம்
 • ப்ருமாலினி
 • பி.கெ.எம்
 • சாய் சர்பதி
Lime
லைம்
By: Paul Mallett

இவற்றுள் கடைசி நான்கு அதிக விளைச்சல் தரக்கூடியவை.

இந்த லைம், லெமன் பிரிவுகளை தவிர கன்றுகளை வேறு விதமாகவும் பிரிக்கலாம். அவை பின்வருமாறு

 1. விதை கன்று
 2. பதிய கன்று
 3. ஒட்டு கன்று

இவற்றுள் எதை தேர்வு செய்வது என முடிவெடுப்பதற்கு முன், இந்த மூன்றிலுள்ள வித்தியாசங்களை நாம் தெரிந்துக்கொள்வது அவசியம்.

விதை கன்று:

 • இவை விதையிலிருந்து வளர்க்க கூடியவை
 • இவை காய் காய்க்க(நன்றாக) 7-8 வருடங்கள் வரை எடுத்துக்கொள்ளும்
 • பொதுவாக நாட்டு ரக எலுமிச்சைகளை தான் நாம் விதையிலிருந்து எளிதாக வளர்க்கலாம்
 • இவை 30 வருடங்கள் வரை தொடர்ந்து காய்த்துகொண்டே இருக்கும்
 • நாட்டு ரகம் என்பதால் நோய்களுக்கும், பூச்சிகளுக்கும் எதிர்த்து சுலபமாக நிற்கும்
Lemon or lime seedling
By: Ron van Zeeland

பதிய கன்று

பதியம் எப்படி போடுவது என ஒரு பதிவில் தெளிவாய் பின்னர் பதிவிடுகிறேன்.

 • இவை சீக்கிரம் காய்க்க கூடியவை. இவை காய்க்க 3-5 வருடங்களே எடுத்துக்கொள்ளும்
 • இதற்கு காரணம் இவை வளர்ந்த மரத்திலிருந்து வரும் கிளைகள் என்பது தான்.
 • ஆனால் இதே காரணத்தால் இவை மேற்கண்டவாறு அவ்வளவு காலம் வருவதில்லை
 • இவை எந்த மரத்திலிருந்து வருகிறதோ அந்த தாய் மரத்தை போலவே காய்க்கும்
 • இதனால் இந்த வகை கன்றுகளை வாங்கும் போது அதன் தாய் மரத்தை பற்றி பார்த்து, தெரிந்து வாங்குவது நல்லது.

ஒட்டுக்கன்று

 • இவை பெரிய அழகான பழங்களை கொடுக்கும்
 • இவை சீக்கிரமாக வளர்ந்து நிறைய காய்க்கவும் செய்யும்
 • ஆனால் நாட்டு ரகங்களை பார்க்கும் போது இவற்றின் காலம் சற்று குறுகியது தான்
 • இவற்றிலிருக்கும் ஒரே கஷ்டமான விஷயம் இவற்றின் அதிக பட்ச பராமரிப்பு தான்
 • இவை நன்றாக பராமரிக்கப்பட்டால் நன்றாக பலன் தரும்

எலுமிச்சை வளர்ப்பு

எலுமிச்சை வளர்ப்பது மிகவும் சுலபமானது தான். தேவை எல்லாம் நல்ல சூரிய வெளிச்சமும், தண்ணீரும் தான். இருந்தாலும் நம்ம கொஞ்சம் எக்ஸ்ட்ரா வாக எல்லா விவரங்களையுமே பார்ப்போமே. எல்லா செடிகளையும் போல எலுமிச்சை வளர்ப்பதற்கும் நிறைய முறைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றாக அனைத்தையும் பார்க்கலாம்.

எலுமிச்சையை விதைகளிலிருந்து வளர்ப்பது எப்படி?

எலுமிச்சையை விதைகளிலிருந்து வளர்ப்பது மிகவும் ஜாலியான விஷயம் தாங்க. ஆனால் என்ன, நாம் விதைக்கும் எல்லா விதைகளும் முளைக்காது. அப்படியே முளைத்தாலும் அவை தங்கள் தாய் செடியை போல இருக்கும் என சொல்ல முடியாது. சரி எப்படி வளர்ப்பது என பார்க்கலாம் வாருங்கள்

 • நீங்கள் உபயோகித்த எலுமிச்சையிலிருந்து விதைகளை எடுத்துக்கொள்ளுங்கள்
 • அவற்றை நன்றாக கழுவி கொள்ளுங்கள். ஏனென்றால் அவற்றுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் சதை, பூஞ்சை தொற்றுக்கு வகையறுக்கலாம்
 • அப்படி கழுவிய விதைகளை உடனே புதைத்து விடுங்கள். காய வைக்க கூடாது.
 • காய வைத்தால் அவை பொதுவாக முளைப்பதில்லை
 • அதை நன்கு வடிய கூடிய மண் கலவையில்(கொகொ பீட், மணல், மண்) புதைத்து வையுங்கள்
 • மண் கலவையை ஈரப்பதமாக வைக்க வேண்டும். ஆனால் சத சதவென்று இருக்க கூடாது
 • புதைத்து வைத்ததை நெகிழி  கவரை வைத்து மூடி வையுங்கள். இது ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும்
 • இதை வெதுவெதுப்பான இடத்தில் வைத்து விடுங்கள்.
 • விதை முளைத்து இலை வர ஆரம்பித்ததும் மூடி வைத்திருந்த கவரை எடுத்து விட்டு செடியை சூரிய வெளிச்சத்தில்  வைக்க வேண்டும்
 • 3-4 இலைகள் வந்த பின்னர் அந்த  செடியை பெரிய தொட்டியிலோ, மண்ணிலோ இடமாற்றி விடுங்கள்
 • அவ்வளவு தான் முடிந்தது.

 சரி எலுமிச்சையை தொட்டிகளில் வளர்ப்பது எப்படி? என்கிறீர்களா? அதையும் பார்த்து விடலாம் வாருங்கள்

எலுமிச்சையை தொட்டிகளில் வளர்ப்பதெப்படி?

நம்மில் நிறைய பேருக்கு எலுமிச்சை மரம் வளர்க்கும் அளவுக்கு இடம் இருப்பதில்லை. இதை மேற்கொள்ள சிறந்த வழி எலுமிச்சையை தொட்டிகளில் வளர்ப்பது தான். இதை எப்படி செய்வது என்பதை பற்றியும் பார்த்துவிடுவோம் வாருங்கள்

இதற்கு நர்சரிகளிலிருந்து வாங்கி வரும் குட்டை ரக செடிகள் வரும் போதே காய்களுடன் வருகிறதா என பார்க்க வேண்டும்

தொட்டி:

எலுமிச்சை, மர வகையை சேர்ந்தது. என்ன தான் அதை தொட்டியில் வளர்த்தாலும் அதற்கும் நிறைய இடம் தேவை.

 • எனவே பெரிய தொட்டியை தேர்வு செய்து கொள்ளுதல் அவசியம்

தொட்டி கலவை:

 • கொகொ பீட், எரு, தொழுவுரம், மண், மணல் முதலியவற்றை கொண்டு நல்ல சத்துள்ள கலவையை  தயாரித்துக் கொள்ளுங்கள்
 • முதலில் தொட்டியில் ஒரு அடுக்கு கலவை பின்னர் ஒரு அடுக்கு கொகொபீட் இடுங்கள்
 • இரண்டு முறை இதையே தொடர்ந்து செய்யுங்கள்
 • பின்னர் வாங்கிய செடியை தொட்டியில் வையுங்கள்
 • பக்கத்தில் மண் கலவையை கொட்டி அழுத்தி விடுங்கள்
 • மேல் அடுக்கில் தேங்காய் நார், கொகொ பீட், மண் கலவை என இவற்றை கொண்டு நிரப்புங்கள்

நீர் ஊற்றுதல்:

 • மண் காய்ந்திருந்தால் மட்டும் நீர் ஊற்றுங்கள். அல்லது வாரம் ஒரு முறை நீர் ஊற்றலாம்
 • தொட்டியை நல்ல சூரிய வெளிச்சத்தில் வைத்து விடுங்கள். இவை தான் தொட்டிகளில் எலுமிச்சை வளர்க்க தேவையான அடிப்படைகள்.
Meyer Lemon at 05-21-06
By: Ruth Temple

எலுமிச்சையை நிலத்தில் வளர்ப்பது எப்படி?

நீங்கள் விதை கன்றை தேர்வு செய்திருந்தால் முதலில் அதை தொட்டியில் வளர்த்து பின்னர் நிலத்தில் நடுவதோ அல்லது நேரடியாக நிலத்திலேயே விதையை நடுவதோ எதை வேண்டுமானாலும் செய்யலாம்.

நிலத்தை தயார் செய்தல்:

 • நன்றாக வெளிச்சம் இருக்க கூடிய இடத்தை தேர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள்
 • நிலத்தில் 2x2x2 அடி அளவில் ஒரு குழியை தோண்டிக்கொள்ளுங்க்ள்
 • இப்படி குழியிலிருந்து எடுக்கும் மண்ணை அடி மண் தனியாயும், மேல் மண் தனியாயும் பிரித்து கொள்ளுங்கள்
 • அந்த குழியை 40 நாட்கள் வெய்யிலில்  காய  வையுங்கள். இது மண்ணிலுள்ள தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களை எல்லாம் சுத்தம் செய்து விடும்
 • பின்னர் கொஞ்சம் தொழுவுரம், வேப்பம் பிண்ணாக்கு, கடலை பிண்ணாக்கு எல்லாம் போட்டு நீர் ஊற்றுங்கள். பின்னர் 20 நாட்கள் அப்படியே விட்டு விடுங்கள்.

அவ்வளவு தான் குழி தயார் ஆகி விட்டது

எலுமிச்சை நடுதல்:

 • இப்போது நர்சரியிலிருந்து வாங்கி வந்த செடியை பாக்கெட்டிலிருந்து எடுத்து, மண்ணை கொஞ்சம் தளர்த்தி வேர்களை தளர்வாக்க வேண்டும்
 • இதை செய்யும்போது ஜாக்கிரதையாக வேர் பாதிப்படையாமல் இருக்குமாறு தளர்க்க வேண்டும்
 • எடுத்த செடியை குழியில் வைக்கவும்
 • செடியை வைத்து மேல்தட்டு மண்ணை போட்டு குழியை மூடுங்கள்
 • மூடி அதை காற்று புகாத மாதிரி நன்றாக அழுத்தி விடுங்கள்
 • இப்படி அழுத்தி விடவில்லை என்றால் காற்று பட்டு வேர் அழுகிவிடும் என வேளாண் விஞானிகள் கூறுகின்றனர்

அவ்வளவு தாங்க! எலுமிச்சை வளர்ப்பின் முதலும் முக்கியமான பகுதியை முடித்து விட்டீர்கள்.

ஆனால் மரம் வளர்ப்பது என்பது, அதிலும் பழ மரம் வளர்ப்பது என்பது குழந்தை வளர்ப்பை போன்றது. சரியான பராமரிப்பு தேவை. எலுமிச்சை பராமரிப்பு, வளர்ப்பில் வரும் பிரச்சனைகள், அவற்றை சமாளிக்கும் முறைகள் என எல்லவற்றையும் பற்றி அடுத்த பதிவில் பதிவிடுகிறேன்.

இதை தவிர உங்களிடம் வேறு ஏதேனும் டிப்ஸ் இருக்கிறதா? அனைவருக்கும் அது பயன்தர கமெண்டில் அதை தெரியப்படுத்துங்கள். ஏதேனும் சந்தேகங்களோ, கேள்விகளோ இருக்கிறதா? தொடர்பு பக்கத்தின் மூலமாகவோ, இடப்பக்கத்திலுள்ள WhatsApp Iconஐ கிளிக் செய்தும் என்னை தொடர்பு கொள்ளலாம்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் சுற்றத்திற்கு இதை பகிர்ந்து ஆர்கானிக் பசுமை அன்பை பரப்பலாமே!

ஒன்றாய் விதைப்போம்! ஒன்றாய் வளர்வோம்! நன்றி

இது ஒரு இரு மொழி பதிவு. To read this post in English click here!

4 thoughts on “ஆர்கானிக்காக எலுமிச்சை வளர்ப்பது எப்படி?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது