சுவாரஸ்யமான தகவல்கள்பயன்கள்

தேன் எனும் தேவாமிர்தம்

தேனின் சுவையில் மயங்காதவர் எவரும் இலர். தேனில் அப்படி என்னென்ன இருக்கின்றன என்கின்ற பகுப்பாய்வை முதலில் காணலாம்.

தேனீயைப் பிடித்து கூட்டில் அடைத்து, அது சேகரிக்கும் தேனை அதற்குத் தெரியாமலே மனிதன் லவட்டும் தொழிலின் பெயர் தேனீ வளர்ப்பு – Apiculture. உலக நாடெங்கும் பன்னெடுங்காலமாக தேனீ வளர்ப்பு பொழுதுபோக்காகவும், தொழிலாகவும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. வேளாண் துறை, தோட்டக் கலைத்துறை, கதர் கிராமத் தொழில் துறை என பலர் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொண்டும்., பல்கலைக்கழகங்கள், தனியார் நிறுவனங்கள், என்.ஜி.ஓக்கள் தொடர்ந்து பல்வேறு வகையான பயிற்சிகள் கூட்டங்கள் எனப் பலவும் நடத்தினாலும், ஏனோ தமிழக விவசாயிகள் தேனீ வளர்ப்பிற்கு அத்தனை முக்கியத்துவம் தருவதில்லை. தேனீ வளர்ப்பதால் பண்ணையத்தில் பயிர் மகசூல் கூடுகின்றது என்பது தெளிவாக தெரிந்தாலும், தேனீ வளர்ப்பில் ஒரு கூட்டிற்கு தினசரி சில நிமிடங்கள் மட்டும் செலவு செய்தாலே நல்லதொரு சுவையான வருவாய் வருகின்றது என தெளிவாக தெரிந்தாலும், ஏனோ தேனீ வளர்ப்பில் அத்தனை அக்கறை காட்டுவதில்லை.

Honey-Bees-Nest.jpg

ஆனால் தேனின் சுவையில் மயங்காதவர் எவரும் இலர். தேனில் அப்படி என்னென்ன இருக்கின்றன என்கின்ற பகுப்பாய்வை முதலில் காணலாம்.

 1. கரையக் கூடிய சர்க்கரை 70 % – 80%

 2. சர்க்கரைப் பொருட்கள் –

                  fructose 37%

                  glucose 37%

                  Sucrose 2%

 1. ஈரத்தன்மை 20%

 2. தாதுப் பொருட்கள் 0.2%

 3. அமிலங்கள் 0.2%

 4. புரோட்டினும் அமினோ அமிலமும் 0.2%

 5. சிறிய அளவில் என்சைம்கள்

 6. சிறிதளவு வைட்டமின்கள்

தேன் பிடிக்காத மனிதர்களை காண்பது எத்தனை அரிதோ அதுபோல தேனீ வளர்ப்பு மேற்கொள்ளும் விவசாயிகளைக் காண்பதும் அரிது. தெற்கே கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் பகுதியில் மிக நீண்ட காலமாக தேனீ வளர்ப்பு தொழில் முறையில் செய்யப்படுகின்றது. இதனைத் தவிர்த்து தமிழகத்தில் தொழில்முறை தேனீ வளர்ப்பாளர்கள் வெகு சிலரே. ஆனால் பஞ்சாப், ஹரியானா, இமாச்சல் பிரதேச மாநிலங்களில் தேனீ வளர்ப்பு பெரிய அளவில் தொழில்ரீதியாக விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டு லாபகரமான தொழிலாக விளங்குகிறது.

தேனீக்களை பிடித்து அதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கூடுகளில் வளர்த்து, அதனைப் பராமரித்து, தேன் மகசூல் எடுக்கும் தொழிலுக்குப் பெயர் தேனீ வளர்ப்பு. Apis எனும் லத்தீன் வார்த்தைக்கு தேனீ என்று அர்த்தம். அதனால் தான் தேனீ வளர்ப்பை Apiculture எனவும், தேனீ வளர்ப்பாளரை Apiarist எனவும் அழைக்கின்றனர். எகிப்து, மெசபடோமியா, கிரேக்கம், இஸ்ரேல், சீனா, ரோமாபுரி போன்ற பண்டைய கால நாகரிக நாடுகளில் தேனீ வளர்ப்பு, தேனின் பயன்பாடு, இரும்பு காலத்திற்கும், வெங்கல காலத்திற்கும் முன்னதாகவே இருந்ததற்கு வரலாற்றுச் சான்றுகள் கிடைத்துள்ளன. ஸ்பெயின் நாட்டில் தேன் சேகரிக்கும் நபரின் உருவம் 8000 ஆண்டுகளுக்கு முந்தைய குகை ஓவியங்களில் காணப்படுகிறது. மர உருளைத் துளைகளிலும், மரப்பெட்டிகளிலும், மண் பாண்டங்களிலும், வைக்கோலால பின்னப்பட்ட கூடைகளிலும் தேனீ கூட்டம் வளர்க்கப்பட்டன.

தேனீக்களில் சுமார் 20000-க்கும் மேற்பட்ட இனங்கள் இருக்கின்றன. இந்தியாவில் இயற்கையாக நான்கு வகை தேனீக்கள் உள்ளன. இத்தாலிய இன தேனீக்களும் இந்தியாவில் வளர்க்கப்படுகின்றது.

Honey_Bee4.jpg

 1. Apis Dorsata – பாறைத் தேனீ என அழைக்கபப்டும் மலைத் தேனீ. தேனீக்களில் இவை மிகவும் பெரியது. மலைப் பாறைகளிலும், மிக உயரமான மரங்களிலும் பெரிய அளவில் கூடு கட்டி வாழும் தன்மை உடையது. இந்த மலைத்தேனீக்கு எதிரிகளால் சிறிய இடைஞ்சல் ஏற்பட்டாலும் இடைஞ்சலுக்குக் காரணமான எதிரியை உடனே சூழ்ந்து கொட்டும் தன்மையுடையது. இந்த தேனீக்களுக்கு சிறிதளவு நச்சுத் தன்மையுண்டு. இந்த வகை மலைத் தேனீக்கள் அதிக அளவு தேனை சேகரிக்கும் குணமுடையது. ஆனால் மலைத்தேன் பெட்டிகளில் வளர்ப்பதற்கான இனமல்ல.

 2. Apis Florea – கொம்புத்தேனீ என அழைக்கப்படும் இவ்வகை தேனீக்களின் உருவம் சிறியது. சிறிய மரக் கிளைகளிலும், புதர்களிலும் கூடு கட்டி வாழும் இந்த வகை தேனீக்களும் கொட்டும் தன்மை உடையது. இது குறைவான அளவே தேனை சேகரிக்கும். ஆகவே பெட்டிகளில் வளர்ப்பதற்கு கொம்புத் தேனீக்களும் ஏற்றவை அல்ல.

 3. Apis Indica – இந்தியத் தேனீ அல்லது அடுக்கு தேனீ என அழைக்கப்படும் இந்த தேனீ இனம் மலைத் தேனீக்களை விட அளவில் சிறியதாகவும், கொம்புத் தேனீக்களை விட அளவில் பெரியதாகவும் இருக்கும். அடுக்கடுக்காய் தேடனைகட்டி வாழுகின்ற குணத்தை உடையது. இதுவும் கொட்டும் தன்மையை உடையதுதான். ஆனால் இந்த இனமானது தேன் நன்றாக சேகரிக்கும். பெட்டிகளில் வளர்க்க ஏற்றது.

 4. Apis Melipona – கொசுத் தேனீ என அழைக்கப்படும் இந்த இன தேனீக்கள் Dammer Bee எனவும் அழைக்கப்படும். கொசுக்களை விட சற்று பெரியது. மிகவும் மெல்லிய உடலமைப்பை உடையது. வாயினால் கடிக்கும் தன்மை உடையது. சிறிதளவு தேன்தான் கிடைக்கும். ஆனால் மருத்துவ குணமுடையது. வீட்டு இடுக்குகள், கல் இடுக்குகள், மர பொந்துக்களில் மரப்பிசின்களைக் கொண்டு கூடு கட்டி வாழும் இயல்பை உடையது. மண் பானைகளில் இவைகளை வளர்க்கலாம்.

 5. Apis Mellifera என அழைக்கப்படுவது இத்தாலிய வகை தேனீக்களாகும். ஐரோப்பாவின் இத்தாலியும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளிலும் பெருமளவு வளர்க்கப்படும் இனம். இதன் உடல் அமைப்பு சற்று பெரியது. இதன் தேன் சேகரிக்கும் திறனும் அதிகம். இதனை பெரிய தேனீ வளர்ப்பு பண்ணைகளில் பிரியத்துடன் வளர்க்கின்றனர்.

ஒரு தேனீ எப்படி இருக்கும். அதன் உடல் அமைப்பு எப்படி இருக்கும்? மூன்று ஜோடி கால்கள், இரண்டு ஜோடி இறக்கைகள், இரண்டு ஒட்டிய கால்கள் மூன்று தனிக் கண்கள், ஆயிரக் கணக்கான கூட்டுக் கண்கள்.தேன் உறிஞ்சும் குழல், ஆண்டெனா போன்ற உணரும் உறுப்பு, உடல் முழுவதும் லட்சக்கணக்கான நுண்ணிய ரோமங்கள், தேனீக்களில் ஸ்பெஷலான கொடுக்கு உடலின் பின்புறம் குடலின் நுனிப்பகுதியில் உள்ளன.

honey-bee.jpg

மனிதனை ஒரு சமூக விலங்கு என்பர். அதைப்போல தேனீக்கள் கூட்டமாக வாழுகின்ற தன்மை உடைய பூச்சி. ஒரு கூட்டத்தில் 30 முதல் 40 ஆயிரம் தேனீக்கள் இருக்கும். அளவில் பெரியதாக செந்நிறம் உடைய ராணித் தேனி 3 ஆண்டுகள் வரை உயிர் வாழும். ராணித் தேனீ ராயல் ஜெல்லியை அதன் உணவாக எடுத்துக் கொள்ளும். அடுத்தது Worber Bee எனப்படும் உழைப்பாளி தேனீ. ஒரு கூட்டத்தில் 90% இந்த உழைப்பாளி தேனீக்கள் தான் இருக்கும். இதன் வாழ்நாள் சுமார் 60 நாட்கள் மட்டுமே. செந்நிறம் உடைய இவை அளவில் சிறியது. இவைகளுக்கு கொட்டும் தன்மையுண்டு. Drone என அழைக்கப்படும் ஆண் தேனீக்களுக்கு சோம்பேறி தேனீக்கள் எனவும் பெயர் உண்டு. ஒரு கூட்டத்தில் சுமார் 10% இவ்வகை தேனீக்கள் தான். கருப்பு நிறமும், நடுத்தர உடலமைப்புமுடைய சோம்பேறி தேனீக்களின் ஆயுட்காலம் 45 நாட்கள் முதல் 60 நாட்கள் வரையாகும்.

ராணித் தேனீக்கள் புழு வளர்ப்பு அறையில் முட்டைகளிட்டு இனவிருத்தி செய்யும். வேலைக்கார தேனீக்கள் அடை அறைகளை தூய்மை செய்தல், வளர்ந்த புழுக்களுக்கு மகரந்த உணவு ஊட்டுதல், இளம் புழுக்களுக்கும், ராணித் தேனீக்கும் ராயல் ஜெல்லி எனப்படும் தேனிப்பால் கொடுத்தல், தேனைப் பக்குவப் படுத்துதல், மகரந்த தூளை அடை அறைகளில் சேமித்தல், மெழுகு சுரத்தல், அடை கட்டுதல், அடை அறைகளுக்குமூடி இடல், கூட்டினுள் காற்றோட்டம் ஏற்படுத்துதல், கூட்டை காவல் காத்தல், கூட்டில் வெப்பநிலையை பராமரித்தல், மருத்துவம் பார்த்தல், இறந்த தேனீக்களை அப்புறப்படுத்துதல். மதுரம், மகரந்தம், தண்ணீர், போன்றவைகளை கூட்டிற்கு கொண்டு வந்து சேர்த்தல், தகவல் தொடர்பு, பூக்கள் இருக்கும் திசை காட்டுதல் என எண்ணற்ற பணிகளை செய்கின்றன.

Apis_mellifera_flying.jpg

தேனீ வளர்க்க தேனீ பெட்டிகள் தேவை. தேனீ பெட்டிகள் இரண்டு அறைகளை உடையது. புழு வளர்க்கும் அறை கீழேயும், சூப்பர் எனப்படும் தேன் சேகரிக்கும் அறை மேலேயும் இருக்கும். இந்நிய தேனீ பெட்டிகள், இத்தாலிய தேனீ பெட்டிகள் வேறுவேறு அளவுகளில் செய்யப்படுகின்றன. மரப்பெட்டிகள் செய்வது அதிக வேலை, அதிக செலவு என்பதனால் பிளாஸ்டிக் பெட்டிகளிலும் தற்போது தேனீ வளர்க்கப்படுகின்றது.

தேனீ பராமரிப்பு ஒரு கலை. அத்துடன் அறிவியல். நல்ல மர நிழல். காற்றோட்டமான கொட்டகையில் தேன் பெட்டிகள் வைக்கப்பட வேண்டும். ஒருபெட்டிக்கும் இன்னொரு பெட்டிக்கும் குறைந்தது ஆறு அடி இடைவெளி இருக்க வேண்டும். நாம் எளிதில் சென்று பார்த்துப் பராமரிக்க ஏற்ற பகுதியாகவும், ஆட்கள், வண்டி வாகனங்களின் நடமாட்டம் அதிகமில்லாத பகுதியாகவும், பூக்கள் நிறைந்த பகுதியாகவும், சுத்தமான சூழ்நிலையையும் உடைய இடமாகவும் இருக்க வேண்டும். எள், வாழை, கடுக்காய், புங்கல், புளி, வேம்பு, மா, நாவல், எட்டி, தான்றி, நீர் மருது ரப்பர், இலவம், சில்வர் ஓக், அரப்பு, அகத்தி, இலுப்பை,பீநாரி, செம்மரம், இலந்தை, காப்பி, சோயாமொச்சை, குதிரை மசால், கடுகு, ஆப்பிள், கொத்துமல்லி, சூரிய காந்தி, புகையிலை, பூசணி, திராட்சை, பீச், பிளம்ஸ், பேரிக்காய், நெருஞ்சி, நெல்லி, தக்காளி, கத்திரி, வெள்ளரி, சோளம், கம்பு, செள செள, மாதுளை சுரை முதலான பல பயிர்கள் தேன் தருபவை.

தென்னை, யூகலிப்டஸ், வேலி கருவேல், நாவல் வாகை,முந்திரி, ஆரஞ்சு, கொய்யா, சப்போட்டா,முருங்கை, வெங்காயம், முட்டைகோஸ், அவரை, உளுந்து, கொண்டைக் கடலை, ஏலக்காய், பருத்தி, கொத்துமல்லி, சூரிய காந்தி போன்ற பயிர்கள் தேனும், மகரந்தமும் தரும் பயிர்கள்.

Apis Melipona.jpg

பாக்கு, ஆண்பனை, கருவேல், வெல்வேல், குடைவேல் போன்றவை மகரந்தம் தரும் பயிர்கள். தேனீ வளர்ப்பை தொழில் ரீதியாகச் செய்யும் போது, மனிதனுக்கு எத்தனையோ நோய் தீர்க்கும் அரும் மருந்தாக உள்ள தேனைக் கொடுக்கும் தேனீக்களுக்கும் பூச்சி நோய் தாக்குதல்கள் இருக்கின்றது.

Taisac Blood Virus எனும் வைரஸ் தாக்கினால் Psoralia mother tincture என்கின்ற ஹோமொயோபதி மருந்தை 1 லிட்டர் சர்க்கரைபாகில் 16 சொட்டுக் கலந்து தேனீக்களுக்கு உணவாக கொடுக்க வேண்டும்.

Mite எனும் சிலந்திகள் கூட்டுப்புழு மூடியை திறந்து தேனீக்கள் புழுக்களை உண்டுவிடும். சல்பர் தூள் ஒரு சிட்டிகை எடுத்து பெட்டியினுள்ளும், பெட்டியின் மேல் பகுதியிலும் தூவி கட்டுப்படுத்தலாம். Warmoth எனும் மெழுகு அந்துப்பூச்சி பழைய, கருப்ப்டைந்த தேனடைகளில் வரும். அதிகம் பாதிப்படைந்த அடைகளை வெட்டி அப்புறப்படுத்தி எரித்து விட வேண்டும். பெட்டியின் கழிவுகளை அவ்வப்போது அகற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

தேனுக்கு பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. பிறந்த குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் அன்னையர், விளையாட்டு வீரர்கள், முதியவர்கள் என அனைவரும் இதனை பயன்படுத்தலாம். இதயத்தினை பலப்படுத்த தேன் நல்ல மருந்து. ரத்த்த்தில் உள்ள நச்சுத்தன்மையை அகற்றி, ரத்தத்தை தேன் தூய்மைப் படுத்துகிறது. கல்லீரல் செயல்பாட்டை தூண்டுகிறது. தொண்டை கட்டு, இருமலை போக்குகின்றது. குடல் சம்மந்தப்பட்ட வியாதிகளை நீக்கி பசியை தூண்டுகிறது. ரத்த சோகைக்கு நல் மருந்து. தேனும் பேரீட்சம் பழமும் தாது பலம் தருகின்றது. மூளைப்பகுதியில் சீரான ரத்த ஓட்டம் பெற தேன் உதவுகின்றது.

Apis Florea.JPG

உடற்சோர்வு நீங்க, தூக்கம் வர, படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் நீங்க, சிறுநீர் எரிச்சல் நீங்க, சொட்டு மூத்திரம், மூத்திரம் வலியுடன் வெளியேறுதல் குணமாக, நீரழிவு நோய் குணமாக, தேமல் மறைய, காய்ச்சல் குணமாக,உடல் எடை குறைய, நெஞ்சு சளி நீங்க, குழந்தை இருமல் நீங்க, குழந்தை மந்தம் குணமாக, நுரையீரல் சிறுநீரக நோய்கள் தீர, எலும்புருக்கி நோய்க்கு, நாட்பட்ட மற்றும் தொடக்க நிலை காச நோய் குணமாக, இளைப்பு, ஆஸ்துமா, மார்புவலி, மேல் சுவாசம் தீர, இருமல், குரல் கம்மல், தொண்டை வலி, தொண்டைப்புண், நாவறட்சி, வறட்டு இருமல் தீர, வாத நோய் போன்றவை குணமாக, பெண்களின் மாதவிடய் பிரச்னைகள், தாய்ப்பால் சுரக்க, உடல் நிறம்பெற, ரத்த ஓட்டம் சீராக, குமட்டல், வாய்க்கசப்பு, வயிற்றுப் போக்கு போன்றவைகளுக்கு தேனுடன் சில வகை மருந்துகள் கொடுத்து குணமாக்கலாம்.

தலையில் புழுவெட்டு நீங்க, தீப்புண், வெந்நீர் பட்டது, கட்டிகள் பழுத்து உடைய, வாய்ப்புண், ஆறாத புண், வெட்டுக்காயம், சிரங்கு போன்றவைகளுக்கு தேன் வெளி பூச்சு மருந்தாக பயன்படுகின்றது.

தேனைத் தவிர ராயல் ஜெல்லி வேலைக்கார தேனீகளால் உற்பத்தி செய்யப்படுகின்றது. இதுஅதிக விலைக்கு மனித உபயோகத்திற்கு விற்கப்படுகின்றது. இது ஆண்களின் நரம்பு தளர்ச்சியை நீக்குகிறது. விந்து அணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துகின்றது. குறைந்த ரத்த அழுத்த நோயை குணமாக்கும். வளர்சிதை வளர்ச்சியை விரைவுபடுத்தி முதுமையை தாமதப்படுத்தி, வாழும் காலத்தை அதிகமாக்குகின்றன.

தேனீக்களால் கொண்டு வரப்படும் மஞ்சள் வண்ண மகரந்தம் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஜீரண கோளாறுக்ளை சரி செய்து பசியை தூண்டுகிறது. நினைவாற்றலை அதிகப்படுத்தி பார்க்கும் திறனையும் கூடுகிறது. மதுவால் ஏற்படுத்தும் மயக்கத்தை பெரிதும் குறைக்கின்றது.

Anumtheraphy என்பது தேனீக்களை நமது உடலில் கொட்ட விடும் ஒரு சிகிச்சை முறை. நம்மை கொட்டும் வேலைக்கார தேனீக்கள் உடனடியாக இறக்கும். நமக்கு ஒரு நாள் வீக்கமும் வலியும் இருக்கும். இது மூட்டு வலி, தசைப்பிடிப்பு, முடக்கு வாதத்திற்கு நல்ல மருந்து. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகக் கிடைக்கும். நரம்பு சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கும்.

தேனீ விவசாயிகளின் பணியாள். மலருக்கு மலர் அவை தாவுவதால் பயிர்களில் அயல் மகரந்த சேர்க்கை உண்டாகுகின்றது. கடுமையான பூச்சிக் கொல்லிகளின் அளவுக்கு அதிகமான முறை தவறிய தெளிப்புகளால் தேனீக்களின் எண்ணிக்கை தக்க அளவில் இல்லை. இதனால் இந்தியாவில் ஆண்டிற்கு 3000 கோடி ரூபாய் மதிப்பிற்கு விவசாய வருவாய் இழப்பு ஏற்படுகின்றது.

bee taking magarantham.jpg

அயல் மகரந்த சேர்க்கைக்கு தேனீக்களை நம்பி பருத்தி, ரப்பம், கேரட், வெள்ளரி, வெங்காயம், கோஸ், பூக்கோசு, நூல்கோல், முள்ளங்கி, சூரியகாந்தி, கடுகு, தென்னை, பாதாம், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, மா, கொய்யா, பப்பாளி, காபி போன்ற பயிர்கள் உள்ளன. 30% முதல் 600% வரை அயல் மகரந்த சேர்க்கையால் மகசூல் அதிகரிப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

சுறுசுறுப்புக்கு இலக்கணமாகக் கூறப்படும் தேனீ ஒரு தன்னலமற்ற பூச்சி இனம். இதனை சிறிய அளவிலாவது ஒவ்வொரு விவசாயியும் வளர்த்து தேன் போன்ற நேரடி லாபத்தையும், அயல் மகரந்த சேர்க்கையால் வரும் மறைமுக லாபத்தையும் அடைய வேண்டும்.

                                                                                                    (Source: Dinamani)

 

 

 

உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள்...